3687. என்னுயி ரேஎன தின்னுயிர்க் குயிரே
என்அறி வேஎன தறிவினுக் கறிவே
அன்னையில் இனியஎன் அம்பலத் தமுதே
அற்புத மேபத மேஎன தன்பே
பொன்னிணை அடிமலர் முடிமிசை பொருந்தப்
பொருத்திய தயவுடைப் புண்ணியப் பொருளே
தன்னியல் அறிவருஞ் சத்திய நிலையே
தனிநட ராசஎன் சற்குரு மணியே.
உரை: எனக்கு உயிரும் உயிர்க்குயிராயும் இருப்பவனே; எனக்கு அறிவாயும் அறிவுக்கு அறிவாயும் இருப்பவனே; பெற்ற தாயினும் இனியனாகிய திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளிய எனதமுதே; அற்புதமே, சிவ பதமே, என்னுடைய அன்பே; பொன் போன்ற இரண்டாகிய திருவடி மலர்கள் என் தலைமேல் பொருந்த வைத்தருளிய அருள் மிக்க புண்ணியப் பொருளே; தனது மெய்ம்மை இயல்பை அறிதற்கரிய மெய்ம்மை நிலையே; ஒப்பற்ற நடராசனாகிய என் சற்குரு மணியே, எ.று.
உணரும் வகையில் உயிராயும், உண்மை யுணர்த்தும் திறத்தில் உயிர்க்குயிராயும், ஒளி புலன்களின் செயலாகிய அறிவாயும், உண்மை காண்பார்கண் அறிவினுள் அறிவாய் அறிவருளுதலின் இறைவனை “என்னுயிரே எனது இன்னுயிர்குயிரே என் அறிவே எனது அறிவினுக்கறிவே” என்று கூறுகின்றார். பெற்ற தாயினும் பேரன்பு செய்து இனிமை செய்தல் பற்றி, “அமுதே” என்றும், தில்லையம்பலத்தில் காணப்படுவது பற்றி, “அம்பலத் தமுதே” என்றும் உரைக்கின்றார். குருபரனாய் எழுந்தருளித் தனது இரண்டாகிய திருவடிகளையும் வடலூர் வள்ளலாரின் திருமுடியில் பொருந்த வைத்து ஞான வொளி நல்கிய நயம் பற்றி, “பொன்னிணை அடிமலர் முடிமிசை பொருந்தப் பொருத்திய தயவுடைப் புண்ணியப் பொருளே” என்று புகல்கின்றார். தாம் செய்த புண்ணியத்தின் பயனாய் எழுந்தருளியது கொண்டு குரு முதல்வனை, “புண்ணியப் பொருளே” என்று புகழ்கின்றார். சிவ பரம்பொருளின் இயல் நலத்தைப் பசுபாச அறிவு கொண்டு அறிய முடியாதது பற்றி, “தன்னியல், அறிவரும் சத்திய நிலையே” என்று கூறுகின்றார்.
இதனால், சற்குருவாகிய நடராசப் பெருமான் உயிர்க் குயிராயும், அறிவுக் கறிவாயும், பசுபாச அறிவுகளால் அறிதற் கரிதாயும் இருக்கும் திறம் கூறியவாறாம். (3)
|