3688. காய்மனக் கடையனைக் காத்தமெய்ப் பொருளே
கலைகளுங் கருதரும் ஒருபெரும் பதியே
தேய்மதிச் சமயருக் கரியஒண் சுடரே
சித்தெலாம் வல்லதோர் சத்திய முதலே
ஆய்மதிப் பெரியருள் அமர்ந்தசிற் பரமே
அம்பலத் தாடல்செய் செம்பதத் தரசே
தாய்மதிப் பரியதோர் தயவுடைச் சிவமே
தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
உரை: எதனையும் வெறுக்கும் மனத்தால் கடையவனாகிய என்னைக் காத்தருளிய மெய்ப்பொருளே; கலைஞானிகளாலும் நினைத்தற்கரிய தலைவனே; தேய்ந்து கெடுகின்ற அறிவுடைய சமயவாதிகளுக்கு அறிதற் கரிய ஒள்ளிய சுடராகியவனே; அறிவுடைச் செய வெல்லாம் செய்ய வல்ல நித்தியப் பொருளே; நுண்ணிதாக ஆராய்கின்ற பெரிய ஞானிகளின் உள்ளத்தில் அமர்ந்தருளிய ஞான முதல்வனே; தில்லையம்பலத்தே ஆடல் புரிகின்ற சிவந்த திருவடிகளை யுடைய அருளரசே; தாயினும் எண்ணுதற்கரிய அன்புடைய சிவ பரம்பொருளே; ஒப்பற்ற நடராசனாகிய என் மெய்ம்மைக் குருமணியே வணக்கம். எ. று.
எத்தகைய நன்பொருளைக் காணினும் வெறுத் தொதுக்கும் இயல்பைப் பிறவியிலேயே யுடைய சிலர் கீழ்மைப் பண்புடையராய்க் கெடுவது உலக இயல்பாதலின், அத்தகைய மனமுடைய என்னை அத்தீமையினின்றும் காத்தருளினாய் என்பாராய், “காய் மனக் கடையனைக் காத்த மெய்ப்பொருளே” என்று கூறுகின்றார். கலைஞானம் உலகியற் பொருள்களோடு ஒட்டி நிற்றலின், “கலைகளும் கருதரும் ஒருபெரும் பதியே” என்று பகர்கின்றார். அந்தக் கலைஞானிகளால் காண்பரிய தன்மை பற்றி, “கலைகளும் கருதரும் ஒருபெரும் பதியே” என உரைக்கின்றார். உண்மை காண மாட்டாது பிடிவாதத்தால் அறிவு சிறுகும் சமயவாதிகளைத் “தேய்மதிச் சமயர்” என்றும், அறிவுடையோர் அறிவாற்றலால் செய்யும் அருஞ் செயல் அத்தனையும் சித்து எனப் படுதலால், அவற்றை முற்றவும் செய்ய வல்லவன் என்றற்கு, “சித்தெலாம் வல்லதோர் சத்திய முதலே” என்றும் தெரிவிக்கின்றார். மதி நுட்பத்தால் பொருளுண்மையை ஆய்ந்துணரும் பேரறிஞர்களை, “ஆய்மதிப் பெரியர்” என்றும், அவர் உள்ளத்திலே ஞான மயமாய் எழுந்தருளுதலின், “பெரியர் உள்ளமர்ந்த சிற்பரமே” என்றும் கூறுகின்றார். செம்பதம் - சிவந்த திருவடி. சிவபதம் அருளும் திருவடி எனினும் அமையும். உலகியலில் அன்பிற்கு எல்லையாக விளங்குபவள் தாயாதலின் அவளது தாய்மை யன்பை அளவையாகக் கொண்டு ஆராயினும் ஒப்புக் காண முடியாத பேரன்பு உடையனாதலின், சிவத்தின் பேரருளை, “தாய் மதிப் பரியதோர் தயவு” எனச் சாற்றுகின்றார்.
இதனால், மெய்ப்பொருளும், பெரும் பதியும், ஒண்சுடரும், சத்திய முதலும், சிற்பரமும், செம்பதத் தரசும், தயாவுடைச் சிவமும் ஆகிய ஒப்பற்ற நடராசப் பெருமானே தமக்குச் சற்குரு மணியாம் எனப் புகழ்ந்தவாறாம். (4)
|