3689. உருவமும் அருவமும் உபயமும் உளதாய்
உளதில தாய்ஒளிர் ஒருதனி முதலே
கருவினில் எனக்கருள் கனிந்தளித் தவனே
கண்ணுடை யாய்பெருங் கடவுளர் பதியே
திருநிலை பெறஎனை வளர்க்கின்ற பரமே
சிவகுரு துரியத்தில் தெளிஅனு பவமே
தருவளர் பொழில்வடல் சபைநிறை ஒளியே
தனிநட ராசஎன் சற்குரு மணியே.
உரை: உருவம், அருவம், அருவுருவமாகியவற்றை உடையதாய் உள்பொருளாயும் இல்பொருளாயும் ஒளிர்கின்ற ஒரு தனிமுதலாய் விளங்குபவனே, கருவிலேயே எனக்குத் திருவருள் நலத்தை உவந்தளித்தவனே, நெற்றியில் கண்ணை யுடையவனே, பெரிய பெரிய தேவர்கட்குத் தலைவனே, ஞானத்திரு என்பால் நிலைபெறுமாறு என்னை நாள்தோறும் வளர்க்கின்ற பரம்பொருளே, சிவகுருவே, துரியக் காட்சியில் அனுபவத்தால் தெளியப் படுகின்ற மெய்ப்பொருளே, மரங்கள் நெருங்கி வளர்கின்ற சோலையில் வடபால் தில்லையிலுள்ள அம்பலத்தில் நிறைந்தோங்கி ஒளிர்கின்ற மெய்ப்பொருளே, ஒப்பற்ற நடராசனாகிய என் சற்குரு மணியே வணக்கம். எ.று.
உருவம், அருவம், என்ற இரண்டோடு கலந்துள்ள அருவுருவத்தை உபயம் என உரைக்கின்றார். இதனைச் சதாசிவ மூர்த்தம் என்பதும் வழக்கம். உண்மை யுணர்வு கொண் டாராய்வார்க்கு உள்பொருளாய், உலகியல் பொய்யறிவு கொண்டு காண முயல்வார்க்கு இல்பொருளாய் விளங்குதலின், “உளது இலதாய் ஒளிர் தனி முதலே” என வுரைக்கின்றார். இளமையிலேயே தமக்குத் திருவருள் சிவஞான நெறியில் ஈடுபாடு உண்டானமை புலப்பட, “கருவினில் எனக்கருள் கனிந்து அளித்தவனே” என்று கூறுகின்றார். நெற்றியில் கண்ணுடையனாதல் பற்றிச் சிவபெருமானை, “கண்ணுடையாய்” என்றும், “தொழப்படும் தேவர் தொழப்படுவான்” எனத் திருநாவுக்கரசர் முதலியோர் எடுத்தோதுவது பற்றி, “பெருங் கடவுளது பதியே” என்று போற்றுகின்றார். சிவஞானச் செல்வம் தன்பால் நிலைபெறும்படி இறைவன் அருள் புரிவது நினைந்து, “திரு நிலைபெற எனை வளர்க்கின்ற பரமே” என்று புகல்கின்றார். குருவாய் எழுந்தருளிச் சிவஞானம் உணர்த்தும் செயலுடைமை பற்றி, “சிவகுரு” என்றும், குருவருள் ஞானத்தால் துரியக் காட்சியில் கண்டு அனுபவித்துத் தெளியப்படுவது பற்றி, “துரியத்தில் தெளி அனுபவமே” என்றும் இயம்புகின்றார். வடல் - வடப் பக்கம். தில்லையிலுள்ள சோலைகளின் வடபால் தில்லையம்பலம் இருந்தமை தோன்ற, “பொழில் வடல் சபை நிறை ஒளியே” என்று விளம்புகின்றார்.
இதனால், தனிமுதலாய், கண்ணுடையவனாய், கடவுளர் பதியாய், பரம்பொருளாய், சிவ குருவாய், துரியானுபவமாய், சபை நிறை ஒளியாய் விளங்குகின்ற நடராசப் பெருமானே சற்குருமணி என்று தெரிவித்தவாறாம். (5)
|