3690.

     ஆறந்த நிலைகளின் அனுபவ நிறைவே
          அதுஅது வாய்ஒளிர் பொதுவுறு நிதியே
     கூறெந்த நிலைகளும் ஒருநிலை எனவே
          கூறிஎன் உள்ளத்தில் குலவிய களிப்பே
     பேறிந்த நெறிஎனக் காட்டிஎன் தனையே
          பெருநெறிக் கேற்றிய ஒருபெரும் பொருளே
     சாறெந்த நாள்களும் விளங்கும்ஓர் வடல்வாய்த்
          தனிநட ராசஎன் சற்குரு மணியே.

உரை:

     நாதாந்தம் முதல் சித்தாந்தம் ஈறாக வுள்ள ஆறு அந்தங்களில் பேசப்படும் நிலைகளில் நின்று, அனுபவிக்கப்படுகின்ற நிறை பொருளே, பொருள் தோறும் அதுவதுவாய் ஒளிர்கின்ற பொதுமைச் செல்வமே, மேற்கூறிய எந்த நிலைகளும் தனது கூறாய்ச் சிறப்புற விளங்கும் நிலையாம் என்று உபதேசித்து என்னுள்ளத்தில் நிலவும் இன்பப் பொருளே, இந்த நெறி பெறுவது ஒரு பெரும் பேறாம் என அறிவித்து என்னை அப்பெருநெறியின் உயர்த்தி யருளிய ஒப்பற்ற பெரிய பொருளே, எந்த நாட்களிலும் விழாக்கள் பொலிந்து விளங்கும் தில்லையின் வடபாலுள்ள ஒப்பற்ற நடராசனாகிய என் குருமணியே வணக்கம். எ.று.

     ஆறு அந்தங்களாவன : நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம், வேதாந்தம், கலாந்தம், சித்தாந்தம் என்பனவாம். நாதாந்தம் முதலிய ஆறு நிலைகளிலும் நின்று உயர்ந்தோர் பெறுகின்ற சிவானுபவத்தை, “ஆறு அந்த நிலைகளின் அனுபவ நிறைவே” என்றும், அவ்வனுபவத்தின் கண் எல்லாவற்றினும் அதுவதுவாய் நின்று பொதுமை நீங்காது பொலிகின்ற ஞானச் செல்வமாதல் பற்றிப் பரசிவத்தை, “அதுவதுவாய் ஒளிர் பொதுவுறு நிதியே” என்றும் பகர்கின்றார். ஞானப் பேற்றுக்குரிய நிலைகளில் எல்லா நிலைகளும் பொது நிலையின் கூறாய் விளங்குவன எனப்புகழ்ந் தருளிய அறவுரையை உள்ளத்தில் நன்கு பதிய அறிவுறுத்த நலம் புலப்பட, “கூறு எந்த நிலைகளும் ஒரு நிலை எனவே கூறி” என்றும், “என் உள்ளத்தில் குலவிய களிப்பே” என்றும் கூறுகின்றார். ஆறந்தங்களின் நிலைகளும், ஞானப் பேற்றிற் குரியனவாதலின் “கூறு எந்த நிலைகளும்” எனக் குறிக்கின்றார். நிலை வகை அனைத்தையும் பொது நிலையின் கூறு எனக் கொண்டு அந்நெறிக்கண் நின்று நிலவும் பேற்றினை, “பேறிந்த நெறி எனக் காட்டி என் தனையே” என்று உரைக்கின்றார். சாறு - திருவிழா. நாள் தோறும் பல்வேறு விழாக்கள் நடை பெறும் வளமுடைமை புலப்படுத்தற்கு, “சாறு எந்த நாள்களும் விளங்கும் ஓர் வடல்வாய்” என மொழிகின்றார்.

     இதனால் அனுபவ நிறைவும், பொதுவுறு நிதியும், உள்ளத்தில் குலவிய களிப்பும், ஒருபெரும் பொருளுமாகிய நடராசப் பெருமான் சற்குரு முதல்வனாம் எனச் சாற்றியவாறாம்.   

     (6)