3691.

     சாகாத தலைஇது வேகாத காலாம்
          தரம்இது காண்எனத் தயவுசெய் துரைத்தே
     போகாத புனலையும் தெரிவித்தென் உளத்தே
          பொற்புற அமர்ந்ததோர் அற்புதச் சுடரே
     ஆகாத பேர்களுக் காகாத நினைவே
          ஆகிய எனக்கென்றும் ஆகிய சுகமே
     தாகாதல் எனத்தரும் தருமசத் திரமே
          தனிநட ராசஎன் சற்குரு மணியே.

உரை:

     சாகாத தலை யிதுவாம், வேகாத காலின் தரம் இதுவாம் காண் என்று அருள்கூர்ந்து சொல்லிப் போகாத புனலையும் தெரிவித்து என் மனத்தின்கண் அழகுற அமர்ந்துள்ள அற்புதச் சுடரே; தகுதியில்லாதவர்க்குப் பொருந்தாத நினைவாயும், தகுதி பொருந்திய எனக்கு என்றும் நலம் தருவதாகிய சுகப் பொருளே; “அன்பு தருக” என வேண்டியோர்க்கு அதனைத் தடையின்றித் தருகின்ற தருமச் சத்திரம் போன்றவனே; ஒப்பற்ற நடராசனாகிய என் குருமணியே வணக்கம். எ.று.

     சாகாத தலை, வேகாத கால், போகாத புனல் என்ற மூன்றையும் அன்பு மிகுதியால் சொல்லி விளக்கி யருளிய திறத்தை, “சாகாத தலை இது வேகாத காலாம் தரம் இது காண் எனத் தயவுசெய்து உரைத்தே போகாத புனலையும் தெரிவித்து” என்று புகல்கின்றார். அவற்றின் விளக்கத்தால் மனத் தெளிவுற்று நினைவின்கண் ஞான ஒளியாய் நிலவுதல் தோன்ற, “என் உளத்தே பொற்புற அமர்ந்த அற்புதச் சுடரே” என உரைக்கின்றார். சாகாத தலை என்பது சாகாத கலை எனவும் வழங்கும். சாகாத தலை என்பது பிறப்பிறப் பற்ற இடம் என்றும் பொருள்படும். சாகாத கலை என்றற்கு, சாகாமைக்கு ஏதுவாகிய வித்தை என்று பொருள் கூறுத லுண்மையின், அதனின் வேறுபடுத்தி விளக்க, “சாகாத தலை இது” என வற்புறுத்துகின்றார். சாகாத கலை யுணர்வால் சாகாத இடம் பெறுதல் வேண்டுதலின் சாகாத கலை என்பதும் விளக்கத் தகுவதாம். தூயதாகிய பிராணக் காற்று தன்னால் தீண்டப்பட்ட எப்பொருளையும் எரித்து விடுமாதலின், வேகாத் தன்மையால் நெடிது வாழ்விக்கும் பிராண வாயுவை, “வேகாத காலாம் தரம் இது” எனக் கூறுகின்றார். வேகும் இயல்புடைய பிராணக் வாயு ஞான வமுதக் காற்று கலந்து உடல் முழுதும் பரவி உயிரை நெடிது வாழ்விக்கக் கூடிய தன்மை பெறுதலால், “வேகாத காலாம் தரம்” என அதன் இயல்பை விளக்குகின்றார். பிராணக் காற்று ஒரு பங்கும், நீர்க் காற்று இரண்டு பங்கும் சேர்ந்தால்தான் நீருண்டாகும் என விஞ்ஞானிகள் கூறுவர். பள்ளத்தை நோக்கி ஓடும் இயல்புடையது புனல். உடலின்கண் உளதாகும் விந்து எனப்படும் வெண்மையான நீரும் ஓடும் இயல்பிற்றாயினும் உடலின் கண் மடங்கி நின்று தேகத்திற்கு வன்மையும் உயிர்க்குஞானமும் எய்துவித்தலின் அதன் இயல்பு கூறி யருளிய திறம் பற்றி, “போகாத புனலையும் தெரிவித்து என் உளத்தே பொற்புற அமர்ந்ததோர் அற்புதச் சுடரே” எனப் போற்றுகின்றார். சாகாத தலையும் வேகாத காலும் போலன்றிப் போகாத புனலை ஐயம் திரிபறக் கேட்போர் உள்ளம் கொள்ள உரைக்க வேண்டுதலின் முதலிரண்டையும், “தயவுசெய்துரைத்து” என்றும், “போகாத புனலைத் தெரிவித்து” என்றும் வேறுபடுத்தி உரைக்கின்றார். சாகாத் தலை முதலிய மூன்றையும் சொன்னாலும் ஏற்கும் தகுதி யில்லாதவர்களை ‘ஆகாத பேர்கள்’ என்றும், அவர்களுக்குப் பன்முறையுரைத்தாலும் நினைவிற் கொள்ளாராதலால், “ஆகாத பேர்களுக் காகாத நினைவே” என அறிவிக்கின்றார். சாகாத் தலை முதலிய மூன்றையும், கேட்டாங்குத் தெளிந்து சிந்தித்து சிந்தனைக்கண் வரும் நலத்தை நுகரும் தகுதிப்பாடு தமக்கு உண்மை தோன்ற, “ஆகிய எனக்கு என்றும் ஆகிய சுகமே” என அறிவிக்கின்றார். யாவர் எத்தனைக் குற்றம் செய்யினும் அத்தனையும் பொறுத் தருளிச் சிவமாகிய நினது அன்பினைத் தருக வென இரங்கும் அடியவர்கள் வேண்டிய அடைந்து மெய்யன்பினைப் பெறுதலின், “தாகாதல் என வேண்டத் தரும் தரும சத்திரமே” என உரைக்கின்றார்

     இதனால் அற்புதச் சுடரும், ஆகாதவர்க்கு ஆகாத நினைவும் ஆகியவர்க்கு ஆகிய சுகமும், தருமச் சத்திரமும் ஆகியவர் நடராசப் பெருமானாகிய சற்குருமணி என்று தெரிவித்தவாறாம்.

     (7)