3692.

     தத்துவ மசிநிலை இதுஇது தானே
          சத்தியம் காண்எனத் தனித்துரைத் தெனக்கே
     எத்துவந் தனைகளும் நீக்கிமெய்ந் நிலைக்கே
          ஏற்றிநான் இறவாத இயல்அளித் தருளால்
     சித்துவந் துலகங்கள் எவற்றினும் ஆடச்
          செய்வித்த பேரருட் சிவபரஞ் சுடரே
     சத்துவ நெறிதரு வடல்அருட் கடலே
          தனிநட ராசஎன் சற்குரு மணியே.

உரை:

     தத்துவ மசி என்னும் மகாவாக்கியத்தின் பொருள் நிலை இது இது எனப் பிரித்துக் காட்டி யுரைத்து இதற்குக் கூறிய பொருள் உண்மை என உணர்க என ஒவ்வொன்றையும் தனித் தனியாகப் பிரித்துரைத்து, எனக்கு எத்தகைய பந்தங்களும் இல்லாமல் நீக்கி மெய்ஞ்ஞான நிலைக்கண் என்னை உயர்த்தி நான் உலகியல் பாச வாழ்வில் கிடந்து இறந்தொழியாத இயல்பினை அளித்துத் திருவருளால் உலகம் முற்றும் சித்துப் புரிந்து இயலும்படிச் செய்வித் தருளிய பேரருள் உருவாகிய சிவ பரஞ்சுடரே; சத்துவ நெறிகளை அருளுகின்ற தில்லை வடபால் எழுந்தருளும் அருட்கடலே; ஒப்பற்ற நடராசனாகிய என் சற்குரு மணியே வணக்கம். எ.று.

     தத்துவ மசி என்னும் மகாவாக்கியம் தது துவம் அசி என மூன்று பதங்களை யுடையதாய் முறையே பிரமப் பொருள், ஆன்மா, ஆன்மா பிரமம் ஆகும் தன்மை எனப் பொருளுரைத்து இதுதான் இம்மகாவாக்கியத்தின் உண்மைப் பொருள் எனத் தனித்தனிப் பிரித்துப் பொருள் கூறித் தெளிவித்த செயலை, “தத்துவ மாசி நிலை இதுஇது தானே சத்தியம் காண் எனத் தனித்து உரைத்து” என உரைக்கின்றார். துவந்தனை - உலகியல் தொடர்புகள்; பந்தம் எனவும் வழங்கும். உலகியற் பாச பந்தம் நீங்கினாலன்றி மெய்ஞ்ஞான நிலை கைவராதாதலின், “எனக்கு எத்துவந்தனைகளும் நீக்கி மெய்ந்நிலைக்கே ஏற்றி” என்றும், மகாவாக்கியப் பொருளறி வுறுத்தலால் பாசங்களின் நீங்கி மீளவும் உலகியல் பாச பந்தச் சேற்றில் அழுந்தாத தன்மையை அளித்தருளிய திறத்தை, “நான் இறவாத இயல் அளித்து” என்றும், திருவருள் துணையால் உலகில் உண்மை அறிவோடு பட்ட செயல்களை யாங்குச் சென்றாலும் ஆங்காங்கு செய்து வாழ அருளியதால், “சித்து வந்து உலகங்கள் எவற்றினும் ஆடச் செய்வித்த பேரருட் சிவபரஞ் சுடரே” என்றும் தெரிவிக்கின்றார். சித்தாடுதல் எனக் கொண்டு அணிமா, மகிமா முதலிய எட்டுச் சித்துக்களையும் புரிதல் என்று பொருள் கூறுதல் உண்டு. ஆனால் வடலூர் வள்ளல் இச்சித்திகளைச் செய்து வாழ்ந்தார் என்று கூறுதற்குப் போதிய ஆதாரம் ஒன்றும் கிடைக்காமையால் அவ்வாறு பொருள் செய்தல் பொருத்தமாகத் தோன்றவில்லை. சத்துவ நெறி - தெளிந்த ஞான நெறி. வடல் - வடபால். இப்போது சித்தி வளாகம் அமைந்துள்ள பகுதிக்கு வடலூர் எனப் பெயர் வழங்குதலால், வடல் என்பது அவ்விடத்தைக் குறிக்கும் என்று கூறுபவரும் உண்டு.

     இதனால், சிவபரஞ்சுடரும், அருட் கடலும் ஆகிய நடராசப் பெருமானே சற்குருமணி எனத் தெரிவித்தவாறாம்.

     (8)