3693.

     இதுபதி இதுபொருள் இதுசுகம் அடைவாய்
          இதுவழி எனஎனக் கியல்புற உரைத்தே
     விதுஅமு தொடுசிவ அமுதமும் அளித்தே
          மேனிலைக் கேற்றிய மெய்ந்நிலைச் சுடரே
     பொதுநடம் இடுகின்ற புண்ணியப் பொருளே
          புரையறும் உளத்திடைப் பொருந்திய மருந்தே
     சதுமறை முடிகளின் முடியுறு சிவமே
          தனிநட ராசஎன் சற்குரு மணியே.

உரை:

     இது பதிப் பொருள், இது உயிர்ப் பொருள், பதியை அறிதற்குரிய ஞானப் பொருள் இது, இவற்றை யுணர்வதால் நீ அடையும் சுகம் இது, அதனை அடைதற்குரிய வழி இது, என்று எனக்குத் தெளிவுண்டாக உபதேசித்துத் துவாத சாந்தத்துப் பூரண சந்திரா முதத்தையும், சிவஞான அமுதத்தையும் எனக்களித்து மேலான ஞான நிலைக்கண் என்னை யேற்றுவித்த, மெய்ம்மை சான்ற ஒளிப் பொருளே; அம்பலத்தின்கண் திருக்கூத் தாடுகின்ற புண்ணியப் பொருளே; குற்றமில்லாத ஞானவான்களின் உள்ளத்தில் வீற்றிருக்கின்ற சிவ மருந்தே; நான்மறைகளின் உச்சியின்கண் விளங்குகின்ற சிவ பரம் பொருளே; ஒப்பற்ற நடராசப் பெருமானாகிய சற்குரு மணியே வணக்கம். எ.று.

     சிவஞான உறுதிப் பொருள்களாகிய பதி, பசு, பாசம், மெய்ம்மைச் சுகம் அதைப் பெறும் நெறி எனச் சாத்திர ஞானப் பொருள்களை விளங்க வுரைத்தமை புலப்பட, “இது பதி இது பொருள் இது சுகம் அடைவாய் இது வழி என எனக்கு இயல்புற உரைத்தே” என்றும், சிவ யோகிகள் துவாத சாந்தத்தில் யோகக் காட்சியால் பெறுகின்ற யோகாந்த அமுதினை, “விது அமுது” என்றும், சிவபோக நிலையில் அப்பெருமக்கள் பெற்றுவக்கும் சிவஞான அமுதத்தை, “சிவ அமுதம்” என்றும், இவற்றை நுகர்ந்து மகிழும் இன்ப நிலையை “மேனிலை” என்றும், அதன்கண் தம்மை நிறுத்தித் தாம் காணச் சுடர் விட்டு ஒளிர நின்ற சிவ சூரியனை, “மெய்ந்நிலைச் சுடரே” என்றும் விளம்புகின்றார். பொது - தில்லையம்பலம். தில்லையம்பலத் திருக்கூத்து சிவ புண்ணியச் செல்வர்கள் புண்ணியப் பயனாய்ப் பெறும் பொருளாதலால், “புண்ணியப் பொருளே” எனப் புகழ்கின்றார். குற்றமற்ற ஞானிகளின் திருவுள்ளத்தில் எழுந்தருளிப் பாசத் தொடர்பால் உளதாகிய மனநோயை மாற்றும் ஞான மருந்து என்பது பற்றிச் சிவபெருமானை, “புரையறும் உளத்திடைப் பொருந்திய மருந்தே” என்று போற்றுகின்றார். இருக்கு முநலிய நான்கு வேத ஞானத்தின் முடிபொருளாய் விளங்குகின்றமைபற்றி, “சதுமறை முடிகளின் முடியுறு சிவமே” எனச் சாற்றுகின்றார்.

     இதனால், மெய்ந்நிலைச் சுடரும், புண்ணியப் பொருளும், ஞான மருந்தும் சிவ பரம்பொருளுமாகிய நடராசப் பெருமான் எனது சற்குரு மணி என விளம்பியவாறாம்.

     (9)