3694. என்னிலை இதுவுறு நின்னிலை இதுவாம்
இருநிலை களும்ஒரு நிலைஎன அறிவாய்
முன்னிலை சிறிதுறல் இதுமயல் உறலாம்
முன்னிலை பின்னிலை எழுநிலை உளவாம்
இந்நிலை அறிந்தவண் எழுநிலை கடந்தே
இயனிலை அடைகஎன் றியம்பிய பரமே
தன்னிலை ஆகிய நன்னிலை அரசே
தனிநட ராசஎன் சற்குரு மணியே.
உரை: “எனது நிலை யிதுவாகும்; இந்நிலையை அடைய முயலும் உனது நிலை இது வாகும்; இருநிலைகளும் முடிவில் சிவமாம் தன்மை என்னும் ஒருநிலை யென அறிவாயாக; உனது முன்னைய நிலை சிறிது அறிவோடு கூடிய நிலையாகும்; இப்பொழுது உள்ள இந்நிலை மயக்க நிலையாகும்; உனக்கு முன்னைய நிலையாகிய கேவல நிலையும் பின்னர் எய்தக் கடவதாகிய சுத்த நிலையாகிய முழு நிலையும் உண்டு; இந்நிலைகளை அறிந்து அதீதத்திலுள்ள ஏழு நிலைகளையும் கடந்து இயலுகின்ற பரசிவ நிலையை அடைவாயாக” என்று அறிவுறுத்தி யருளிய பரம்பொருளே; தன்னிலைக் கண் மாற்றமின்றித் தானேயாகிய நன்னிலையையுடைய அருளரசே; ஒப்பற்ற நடராசனாகிய என் சற்குருவே வணக்கம். எ.று.
சீவன் முத்தனாகிய எனது நிலை யிதுவாகும்; ஞான முயற்சியால் இந்நிலையை அடைகின்ற உனது நிலை யிதுவாகும்; இருநிலைகளும் முடிவில் முத்த நிலையாகிய ஒரு நிலைக்கு ஏதுவாம் என்பாராய், “என்னிலை இதுவுறு நின்னிலை இதுவாம் இருநிலைகளும் ஒருநிலை என அறிவாய்” என இயம்புகின்றார். முன்னிலை - கேவல நிலை. அந்நிலைக்கண் உயிரறிவு மலத்தால் மூடப்பட்டுக் கிடத்தலின், “முன்னிலை சிறிதுறல்” எனவும், இப்போது உள்ள சகல நிலையை, “இது” எனவும், இது மலமாகிய கன்மங்களால் பிணிக்கப்பட்டு மயங்கும் இயல்பினை உடையதாதலால், “இது மயல் உறலாம்” எனவும், சகல நிலையின் நீங்கிப் பின்னர் எய்த விருப்பது சுத்த நிலையாதலின் அதனைப் “பின்னிலை” எனவும், அதுவே மலப்பிணிப் பின்றித் தூய சிவ மயமாய் விளங்குவது பற்றி, “பின்னிலை முழுநிலை உளவாம்” எனவும் தெரிவிக்கின்றார். இந்நிலைகளை யறிந்து ஆறு ஆதாரமும் கடந்து ஏழாவதாகிய தத்துவாதீதத்தையும் கடந்து பரசிவ போக நிலையத்தை அடைக என அறிவுறுத்துவார், “இந்நிலை அறிந்தவண் எழுநிலை கடந்தே இயனிலை அடைக என்று இயம்பிய பரமே” என உரைக்கின்றார். ஆதாரம் ஆறும் கடந்தது ஏழாம் நிலையாகிய ஆதாராதீதம் என அறிக. அது எழுநிலை எனப்படுகிறது. எல்லா ஆன்மாக்களும் இறுதியில் அடையும் நிலையாதலின் ஏழாம் நிலைக்கு அப்பால் நிலை, “இயல் நிலை” எனப்படுகிறது. சுவாதிட்டானம் முதலாகக் கூறப்படும் ஆறும் ஈண்டு ஆதாரம் எனப்படும். பரம்பொருள் எஞ்ஞான்றும் ஒருதன்மைத்தாதலின் “தன்னிலை ஆகிய நன்னிலை அரசே” எனச் சாற்றுகின்றார்.
இதனால், பரம்பொருளும், அருளரசும், ஒப்பற்ற நடராசனுமாகிய பெருமானே என் சற்குருமணியாம் என விளக்கியவாறாம். (10)
|