3695. காரணம் இதுபுரி காரியம் இதுமேல்
காரண காரியக் கருவிது பலவாய்
ஆரணம் ஆகமம் இவைவிரித் துரைத்தே
அனந்திடும் நீஅவை அளந்திடல் மகனே
பூரண நிலைஅனு பவமுறில் கணமாம்
பொழுதினில் அறிதிஎப் பொருள்நிலை களுமே
தாரணி தனில்என்ற தயவுடை அரசே
தனிநட ராசஎன் சற்குரு மணியே.
உரை: “காரணம் இது, இதனால் விளையும் காரியம் இது, காரண காரியங்கட்குக் கருவாய் உள்ளது இது” என வேதங்களும் ஆகமங்களும் இவற்றைப் பலவாய் விரித்துரைத்து அளவைகளால் காட்டுவனவாகும்; நீ அவ்வாறு பிரமாணங்களைக் கொண்டு அளந்து வருந்த வேண்டாம்; மகனே, இப்பூமியில் நீ பூரண ஞான நிலையின் அனுபவத்தைப் பெறுவாயாயின் எப்பொருள்களையும் அவற்றின் நிலைகளையும் கணப்பொழுதில் அறிந்து கொள்வாய் என்று அறிவு தந்த அருளுடைய அரசே, ஒப்பற்ற நடராசனாகிய என் சற்குரு மணியே வணக்கம். எ.று.
வேதங்களும் ஆகமங்களும் பொருட்களை வலியுறுத்தற்காக மேற்கொள்ளும் பிரமாணங்களில் காட்சி, அனுமானம், ஆகமம் என்ற முன்றனைத் தலையாகக் கொண்டு அவற்றுள் அனுமானப் பிரமாணத்திற்கு ஏற்றம் தருவது வழக்காதலால் அதனை மேற்கொண்டு விளக்குவாராய், காரண காரிய இயல்புகளை எடுத்து, “காரணம் இது புரி காரியம் இது மேல் காரண காரியக் கருவிது எனப் பலவாய் ஆரணம் ஆகமம் இவை விரித்துரைத்தே அளந்திடும்” என உரைக்கின்றார். பிரமாணங்களின் இயல்பையும் அவற்றின்கண் காணப்படும் பிரமாண ஆபாசங்களையும் விரித்துரைத்து அளந்திடும்” எனப் பகர்கின்றார். ஆரணம் - வேதம் பிரமாணங்களைக் கொண்டு பொருள் நலங்களை அளந்து காண்பதாகிய தருக்க முறைகள். தம்மைப் பயில்பவரைத் தமது மிகுந்த ஆராய்ச்சிகளில் அழுந்தி உண்மை காணும் அறிவு நலத்தை மழுங்கச் செய்தல் பற்றி, “நீ அவை அளந்திடல் மகனே” என விலக்குகின்றார். குறைவற்ற ஞானானுபவம் கைவரப் பெறுமாயின் பொருள்களையும் அவற்றின் உண்மை நிலைகளையும் எளிதில் அறிந்து கொள்ளலாம் என அறிவுறுத்திய திறத்தை, “பூரண நிலை அனுபவ முறில் கணமாம் பொழுதினில் அறிதி எப்பொருள் நிலைகளுமே தாரணி தனில் என்ற தயவுடை அரசே” என்று நவில்கின்றார். தாரணி - தரணி; நிலவுலகம். ஆசிரியன் உள்ளத்தில் அருளறம் நிறைந்தாலன்றி ஞானப் பொருளை மாணவன் உள்ளம் கொள்ள உரைக்க மாட்டாமையால், “தயவுடை அரசே” எனப் புகல்கின்றார்.
இதனால் ஆரணங்களும், ஆகமங்களும் விரித்துரைக்கும் அளவை நெறியில் புகாமல், பூரண ஞானானுபவப் பேற்றின்கண் கருத்தைச் செலுத்துக, என அறிவுறுத்திய ஞான தேசிகனே நடராச மூர்த்தமாகிய சற்குரு எனத் தெரிவித்தவாறாம். (11)
|