3696. பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர்
பவநெறி இதுவரை பரவிய திதனால்
செந்நெறி அறிந்திலர் இறந்திறந் துலகோர்
செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ
புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான்
புத்தமு தருள்கின்ற சுத்தசன் மார்க்கத்
தன்னெறி செலுத்துக என்றஎன் அரசே
தனிநட ராசஎன் சற்குரு மணியே.
உரை: பலவகை நெறிகளையுடைய சமயங்கள் மதங்கள் என வழங்கும் பிறவிக் கேதுவாகிய பவநெறி இதுவரை நாட்டில் பரவியுள்ளது; இதனால் உலகவர் செம்மை நெறி யறியாது இறந்திறந்து மிக்க அறியாமை நிறைந்த இருள் நிலையையே அடைந்தனர்; ஆதலால் இனி இப்பொழுது நீ உலகோர் சென்ற புல்லிய நெறியை விடுத்துப் பொது நெறி எனப்படும் பெருமை தங்கிய புத்தமுதைத் தருகின்ற சுத்த சன்மார்க்கத்திற்குரிய நன்னெறிக்கண் உலக மக்களைச் செலுத்துவாயாக என்று அருளுரை வழங்கிய அருளரசே; ஒப்பற்ற நடராசனாகிய என் சற்குரு மணியே வணக்கம். எ.று.
பல நெறிப்பட்ட சமயங்களும், சமயக் கொள்கைகளும் நாட்டில் பரவி மக்கள் பலரையும் தத்தமக்குரிய நெறிகளில் செலுத்திப் பயனின்றிக் கெடச் செய்தமையை விளக்குதற்கு, “பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என்றிடும் ஓர் பவநெறி இதுவரை பரவியது இதனால் செந்நெறி அறிந்திலர், உலகோர் இறந்திறந்து செறியிருள் அடைந்தனர்” என உரைக்கின்றார். சமயங்களும் மதங்களும் காட்டிய நெறி மேலும் மேலும் பிறந்திறந்து உழலுவதற்கே ஏதுவாதல் புலப்பட, அவர்கள் காட்டிய நெறியைப் “பவநெறி” என்றும், அவர்கள் முடிவில் இருளுலகமே அடைந்தனர் என்றற்கு, “செறி இருள் அடைந்தனர்” என்றும் இயம்புகின்றார். அதனை விலக்கிச் சுத்த சன்மார்க்கமாகிய செந்நெறியை மக்களுக்குக் காட்டி அந்நெறிக்கண் செலுத்தி உய்தி பெறச் செய்க என்பாராய், “புன்னெறி தவிர்த்தொரு பொது நெறி எனும் வான் புத்தமுது அருள்கின்ற சுத்த சன்மார்க்கத் தன்னெறி செலுத்துக” என்று கூறி இவ்வாறு தனக்கு ஞானாசிரியன் உபதேசித்தான் என்பாராய், “என்ற என் அரசே” என்று சொல்லுகின்றார். செந்நெறி அறியாது உலகோர் கடைப் பிடித்த பவநெறியைப் “புன்னெறி தவிர்த்து” என்றும், தாம் கூறுவது எல்லாச் சமயங்கட்கும் மதங்கட்கும் பொதுவென வற்புறுத்தற்கு, “பொது நெறி எனும் வான் புத்தமுது அருள்கின்ற சுத்த சன்மார்க்கத் தன்னெறி” எனச் சிறப்பித்தும் அதன்கண் மக்களைச் “செலுத்துக” என்றும் ஞானாசிரியர் உபதேசித்தார் என்பது கருத்து. சன்மார்க்க நெறியை அறிவுறுத்திய ஞான குருவை, “அரசே” எனப் போற்றுகின்றார்.
இதனால், “பவநெறியாகிய புன்னெறியைப் போக்கிப் பொது நெறியாகிய சுத்த சன்மார்க்கத்தில் மக்களைச் செலுத்துக” என்ற ஞானாசிரியரே ஒப்பற்ற நடராசப் பெருமானாகிய சற்குரு எனத் தெரிவித்தவாறாம். (12)
|