3697.

     அடிஇது முடிஇது நடுநிலை இதுமேல்
          அடிநடு முடியிலா ததுஇது மகனே
     படிமிசை அடிநடு முடிஅறிந் தனையே
          பதிஅடி முடியிலாப் பரிசையும் அறிவாய்
     செடியற உலகினில் அருள்நெறி இதுவே
          செயலுற முயலுக என்றசிற் பரமே
     தடிமுகில் எனஅருள் பொழிவடல் அரசே
          தனிநட ராசஎன் சற்குரு மணியே.

உரை:

     முதல் இது, கடை யிது, நடுநிலை இது எனப் பொருள்களின் இயல் காட்டி, முதலும் இடையும் கடையும் இல்லாதது அது எனச் சுட்டப்படும் பரம் பொருள் இதுவாகும்; மகனே, நிலவுலகின் கண் பொருள்களின் முதல், இடை, கடை ஆகியவற்றை அறிந்துள்ளாய்; இன் பதிப் பொருளாகிய சிவத்தின் தொடக்கமும் ஈறும் இல்லாத தன்மையையும் அறிந்து கொள்வாய்; உலகிற் குற்றமற விளங்கும் திருவருள் ஞான நெறி இதுவேயாகும்; அதனைக் கைவரப் பெற முயலுவாயாக என்ற ஞான முதல்வனே; இடியோடு கூடிய மழை மேகம் எனத் திருவருளைப் பொழிகின்ற வடபால் அருளரசே; ஒப்பற்ற நடராசனாகிய என் சற்குரு மணியே வணக்கம். எ.று.

     பொருள்களின் தோற்ற நிலை, நடுநிலை, கடை நிலை ஆகியவற்றைக் காண்பது போல் பரம்பொருளுக்குத் தோற்றம். நடு, முடிவு காண முடியாது என்பாராய், “அடி இது முடி யிது நடுநிலை இது மேல் அடி நடு முடி யிலாதது இது மகனே” என நவில்கின்றார். படி -நிலவுலகம். நிலவுலகில் காணப்படும் எப்பொருளுக்கும் தோன்று நிலை, நடுவு நிலை, முடிவு நிலை ஆகியவற்றை அறிந்து கொள்ளுவது போல் பதிப்பொருளாகிய சிவ பரம்பொருளுக்கு ஆதி யந்தமில்லாத தன்மையையும் அறிந்து கொள்ளலாம் என்பாராய், “படி மிசை அடி நடு முடி அறிந்தனையே பதி அடி முடி யிலாப் பரிசையும் அறிவாய்” என்று உரைக்கின்றார் என்றது உலகப் பொருள்களுக்கு ஆதியந்தம் காண்பது போல் பரம்பொருளுக்கு அத்தன்மையை அறிய முடியாது என்பதாம். பரிசு - தன்மை. ஆதி யந்தமுடைய உலகப் பொருள்களையும், அவ்விரண்டு மில்லாத பரம்பொருளின் இயல்பையும் குற்றமற அறிந்து கொள்வது அருள் ஞான நெறியாம் என்றற்கு, “செடியற உலகினில் அருள் நெறி இதுவே” என்று உரைக்கின்றார். செடி - குற்றம். சிவ பரம்பொருளில் ஆதியந்தமில்லாத அரும்பெரும் நிலையைத் தெளிய உணர்தல் பொருட்டு, “செயலுற முயலுக” எனத் தெரிவிக்கின்றார். இவ்வாறு ஞான நிலையை அறிவுறுத்தமை பற்றிக் குருமுதல்வனை, “சிற்பரமே” என்று சிறப்பிக்கின்றார். இடி மின்னல்களோடு கூடிய மழை மேகத்தை, “தடி முகில்” என்பது மரபு. வடலரசே என்பதற்கு வடலூரில் எழுந்தருளும் அருளரசே என உரை கூறுதலும் உண்டு.

     இதனால், உலகியல் பொருள்களுக்குத் தோற்ற நிலை, நடுநிலை, முடிவு நிலை ஆகிய மூன்றும் காண்பது போல் பரம்பொருளுக்குத் தோற்றமும் ஈறும் காண முடியாமையை எடுத்தோதி, இதனை யுணர்வது அருள் நெறி என அறிவுறுத்தியவாறாம்.

     (13)