3698. நண்ணிய மதநெறி பலபல அவையே
நன்றற நின்றன சென்றன சிலவே
அண்ணிய உலகினர் அறிகிலர் நெடுநாள்
அலைதரு கின்றனர் அலைவற மகனே
புண்ணியம் உறுதிரு அருள்நெறி இதுவே
பொதுநெறி எனஅறி வுறமுய லுதிநீ
தண்ணிய அமுதுணத் தந்தனம் என்றாய்
தனிநட ராசஎன் சற்குரு மணியே.
உரை: “உலகிற் பொருந்திய மதங்களும் நெறிகளும் பற்பலவாகும்; அவற்றுள் சில பயன் படுதலின்றிச் சின்னாள் இருந்து மறைந்தன; உலகியலைத் தழுவிய மக்கள் நெடுங் காலமாக அதனை அறியாது அலைந்தொழிகின்றார்; மகனே, அவ்வாறு அலைவதின்றி நற்பயன் பொருந்துகின்ற இதுவே அருள் நெறியாம்; இதனைப் பொது நெறி என்று அறிவிற் கொண்டு இதனைப் பெற முயலுக; இந்தத் தண்ணிய ஞான வமுதத்தை, நீ உண்ணுமாறு தந்துள்ளோம்” என்று தெரிவித்தாய்; ஒப்பற்ற நடராசனாகிய என் குருமணியே வணக்கம். எ.று.
உலகில் மதங்களும் கொள்கைகளும் மிகப் பலவாய்ப் பொருந்தி யுள்ளன வாதலால், “நண்ணிய மதநெறி பலபல” என நவில்கின்றார். அவற்றுள் சில சில காலம் இருந்து பயனிற்று அழிந்தன என்பதற்கு, “அவையே நன்றற நின்றன சென்றன சிலவே” என்று உரைக்கின்றார். மதங்களின் வரலாறும் பயனும் காணும் மரபு இல்லாமையால் உலகத்தவர் வரலாறு அறியாது ஒன்றை விட்டு ஒன்றைப் பற்றி அலைந்து வருந்துகின்றனர் என விளக்குதற்கு, “அண்ணிய உலகினர் அறிகிலர் நெடுநாள் அலைதருகின்றனர்” என்று கூறுகின்றார். அலைதலின்றி ஒரு நெறிப்பட நிற்றற்குச் சன்மார்க்கப் பொது நெறியே தக்கது என்பாராய், “புண்ணியம் உறு திருவருள் நெறி இதுவே பொது நெறி என அறிவுற முயலுதி” எனக் கூறுகின்றார். சன்மார்க்கத்தைத் திருவருள் நெறி என்றும், அதனால் விளைவது சிவ புண்ணியம் என்றும், அது எல்லோர்க்கும் பொது நெறி என்றும் விளக்குதற்கு, “புண்ணியமுறு திருவருள் நெறி இதுவே பொது நெறி” என விளக்குகின்றார். சுத்த சன்மார்க்கமாகிய பொது நெறியைத் “தண்ணிய அமுது” எனப்
புகழ்ந்து அதனை அருளின திறத்தை “அமுது” என்றதற்கு ஏற்ப “உணத் தந்தனம்” என்று உரைக்கின்றார்.
இதனால், சுத்த சன்மார்க்கத்தை அருள் நெறி என்றும், பொது நெறி என்றும் புகழ்ந்து ஓதியவாறாம். (14)
|