3699.

     அஞ்சலை நீஒரு சிறிதும்என் மகனே
          அருட்பெருஞ் சோதியை அளித்தனம் உனக்கே
     துஞ்சிய மாந்தரை எழுப்புக நலமே
          சூழ்ந்தசன் மார்க்கத்தில் செலுத்துக சுகமே
     வி்ஞ்சுற மெய்ப்பொருள் மேனிலை தனிலே
          விஞ்சைகள் பலவுள விளக்குக என்றாய்
     தஞ்சம்என் றவர்க்கருள் சத்திய முதலே
          தனிநட ராசஎன் சற்குரு மணியே.

உரை:

     என் மகனே, நீ ஒருசிறிதும் இனி அஞ்சுதல் வேண்டா; உனக்கு அருட்பெருஞ் சோதியாகிய திருவருள் ஞானத்தை, நல்கி யுள்ளோம்; உலகியல் மாயையில் அழுந்திய மக்களை நலமுற எழுப்பி அவர்கட்காகக் கண்ட சன்மார்க்க நெறியில் அவர்களைச் சுகம் பெறச் செலுத்துக; எல்லாவற்றிற்கும் மேம்பட்ட மெய்ப்பொருள் நிலையமாகிய மேன் நிலையில் ஞான வித்தைகள் மிகப் பல வுள்ளன; அவற்றை அவர்களுக்கு விளக்குக என்று உரைத்தருளினாய்; தஞ்சம் என்று அடைந்தவர்க்கு அருள் புரிகின்ற மெய்ம்மை முதற்பொருளே: ஒப்பற்ற நடராசனாகிய என் சற்குரு மணியே வணக்கம். எ.று.

     மெய்ம்மை ஞான விளக்கமின்றி அஞ்சிக் கிடந்த தமது மனநிலையை அறிந்து அவ்வச்சம் தீ அருட்பெருஞ் சோதியாகிய சிவ ஞானத்தைக் குருபரன் அளித்த வரலாற்றை, “அஞ்சலை நீ ஒருசிறிதும் என் மகனே அருட் பெருஞ் சோதியை அளித்தனம் உனக்கே” என்று விளம்புகின்றார். பல்வேறு சமய மதக் கோட்பாடுகளால் உலகியலில் மயங்கி உண்மை யுணரத் திறமின்றி மடிந்து கிடக்கின்ற மக்களை, “துஞ்சிய மாந்தர்” என்றும், அவர்களை அந்நிலையினின்றும் எடுத்து அருள் நெறியில் நிறுத்த வேண்டுதலின், “நலம் பெற எழுப்புக” என்றும், அது குறித்து ஆராய்ந்து கண்ட சன்மார்க்கத்தைச் ‘சூழ்ந்த சன்மார்க்கம்’ என்றும், அதன்கண் செலுத்திய வழி அவர்கள் சுகம் பெறுவர் என்றும் குருபரன் அறிவுறுத்திய இயல்பை, “சூழ்ந்த சன்மார்க்கத்தில் செலுத்துக சுகமே” என்றும் கூறுகின்றார். துஞ்சிய மாந்தர் என்றதைச் சிலர் இறந்து போன மக்கள் என்று பொருள் கொண்டு, “இறந்த மக்களை எழுப்புக” என ஆசிரியன் வடலூர் வள்ளலைப் பணித்தான் எனக் கூறுவதுண்டு. இங்ஙனம் அறிவு மடிந்திருக்கின்ற மக்களை எழுப்பிச் சன்மார்க்கத்தில் செலுத்திய வழி அவர்கள் சுக வாழ்வு பெறுவது உறுதியென வற்புறுத்தற்கு, “சன்மார்க்கத்தில் செலுத்துக சுகமே” என்று உரைக்கின்றார். ஏனைய உலகியல் வாழ்வுகள் அனைத்தினும் மேம்பட்டு நிற்பது மெய்ப்பொருள் நிலவும் மேல்நிலையாகிய ஞான நிலையாதலால், “மெய்ப்பொருள் மேனிலை தனிலே” என்றும், மற்றவை யெல்லாம் பிற்பட அந்த மேனிலையை அடைந்த விடத்துச் சுத்த வித்தை முதலிய ஞான நிலைகள் பல இருத்தல் தோன்ற, “விஞ்சைகள் பல வுள” என்றும், சுத்த வித்தையாகிய சுத்த மாயா புவன வாயிலை அடைந்த வழி ஈசுரம், சதாசிவம், விந்து, நாதம் முதலிய பல ஞானக் கிரியா நிலை இருத்தலை நினைவிற் கொண்டு, “விஞ்சைகள் பலவாம் விளக்குக” என்றும் குருபரன் அறிவுறுத்தான் என எடுத்தோதுகின்றார். தஞ்சம் என்பது எளிமைக் குறிப்பு. “தஞ்சம் என்பது எண்மைப் பொருட்டே” என்பது தொல்காப்பியம். இதனை “அபயம் புகல்” என்பதும் உண்டு.

     இதனால், அருட் பெருஞ் சோதியை அளித்தனம், அது கொண்டு துஞ்சிய மாந்தரை எழுப்பிச் சன்மார்க்கத்தில் செலுத்துக என்றும், சன்மார்க்க மெய்ப் பொருள் விளங்கும் மேனிலையில் விஞ்சைகள் பல வுள அவற்றை மக்கட்கு விளக்குக என்றும் குருபரன் உபதேசித்த திறம் உரைத்தவாறாம்.

     (15)