3700.

     வேதத்தின் முடிமிசை விளங்கும்ஓர் விளக்கே
          மெய்பொருள் ஆகம வியன்முடிச் சுடரே
     நாதத்தின் முடிநடு நடமிடும் ஒளியே
          நவைஅறும் உளத்திடை நண்ணிய நலமே
     ஏதத்தின் நின்றெனை எடுத்தருள் நிலைக்கே
          ஏற்றிய கருணைஎன் இன்உயிர்த் துணையே
     தாதுற்ற உடம்பழி யாவகை புரிந்தாய்
          தனிநட ராசஎன் சற்குரு மணியே.

உரை:

     வேத ஞானத்தின் உச்சியில் ஒளிரும் ஞான விளக்கே; மெய்ப்பொருள் உணர்விற்கு இடமாகிய ஆகம ஞானத்தின் பெரிய உச்சியில் விளங்குகின்ற சுடர்ப்பொருளே; நாத தத்துவத்தின் உச்சியில் நின்று திருக்கூத்தாடும் ஒளிப் பொருளே; குற்றமற்ற மனத்தின்கண் எழுந்தருளும் நன்பொருளே; குற்றமான நெறிகளினின்றும் எடுத்து என்னை உய்வித்தற்குத் திருவருள் நிலையத்தின்கண் ஏற்றிய கருணையுருவாகிய என்னுடைய இனிய உயிர்த் துணைவனே; பல்வகைத் தாதுக்களாலாகிய எனது பூத உடம்பிற்கு அழியா நெறியை அருளினவனே; ஒப்பற்ற நடராசனாகிய சற்குருவே வணக்கம். எ.று.

     வேதாகமங்களின் உச்சியில் ஞான மயமாய் உணர்வுற்று உணர்வின் கண் ஒளிர்வது பற்றி, வேதத்தின் முடிமிசை விளங்கும் ஓர் விளக்கே மெய்ப்பொருள் ஆகம வியன்முடிச் சுடரே” என்று உரைக்கின்றார். வேதங்களில் விதி முறைகள் உரைப்பது போல ஆகமங்களில் பொருள் உண்மைகளைத் தடை விடைகளால் சான்றோர் உரைக்கின்றார்களாதலால், “மெய்ப்பொருள் ஆகம வியன்முடிச் சுடரே” என விதந்துரைக்கின்றார். சுத்த தத்துவத்தின் மத்தகத்தில் உள்ள நாத தத்துவத்தின் உச்சியில் நடராசப் பெருமானுடைய ஞான நடனம் நடைபெறுகிறது என அறிஞர் கூறுதலால், “நாதத்தின் முடிநடு நடமிடும் ஒளியே” என நவில்கின்றார். குற்றமற்ற ஞானவான்களின் திருவுள்ளத்தைக் கோயிலாகக் கொண்டு ஞான வின்பம் அருளுதல் பற்றி, “நவை யறும் உளத்திடை நண்ணிய நலமே” என்று நவில்கின்றார். குற்றம் பொருந்திய உலகியல் நெறிகள் பலவற்றுள் கிடந்து அலமந்த தன்னை அருள் நெறிக்கண் நிலைபெறச் செய்தற்கு ஏதுவாயிருந்த இறைவனது பெருங் கருணையை வியந்து பேசுகின்றாராதலால், “ஏதத்தின் நின்றெனை எடுத்தருள் நிலைக்கே ஏற்றிய கருணை என் இன்னுயிர்த் துணையே” என்று இயம்புகின்றார். தோல், தசை, குருதி முதலிய எழுவகைத் தாதுக்களால் ஆகியது பூத உடம்பாகையால் அதனை, “தாதுற்ற உடம்பு” என்றும், உடம்பை அழியாது பாதுகாத்தற் குரிய நெறிகளைத் தாயுமானவர் முதலிய பெருமக்கள் வாயிலாக முன்னமே அறிவுறுத்திருக்கின்றமை புலப்பட, “உடம்பு அழியா வகை புரிந்தாய்” என்று உரைக்கின்றார்.

     இதனால், வேதாகமங்களின் முடியிலும் நாத தத்துவத்தின் உச்சியிலும் ஞானவான்களின் திருவுள்ளத்தில் எழுந்தருளும் சிவபெருமான் தன்னை அருள் நிலையில் எடுத்து நிறுத்தி உடம்பு அழியா வகை அறிவுறுத்திய திறம் எடுத்துரைத்தவாறாம்.

     (16)