3701. சந்திர சூரியர் ஒளிபெற விளங்கும்
தனிஅருட் பெருவெளித் தலத்தெழுஞ் சுடரே
வந்திர விடைஎனக் கருளமு தளித்தே
வாழ்கஎன் றருளிய வாழ்முதற் பொருளே
மந்திர மேஎனை வளர்க்கின்ற மருந்தே
மாநிலத் திடைஎனை வருவித்த பதியே
தந்திரம் யாவையும் உடையமெய்ப் பொருளே
தனிநட ராசஎன் சற்குரு மணியே.
உரை: சந்திரனும், சூரியனும் தத்தமக்குரிய ஒளியைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டுத் திருவருட் பெருவெளியில் எழுந்து விளங்கும் பரஞ்சுடர்ப் பொருளே; இரவுப் போதில் வந்து திருவருளாகிய ஞானவமுதத்தை எனக்களித்து “வாழ்க” என்று என்னை வாழ்த்தியருளிய எனது வாழ்முதலாகிய பரம்பொருளே; என் மனத்திட்பத்தை வளர்க்கின்ற ஞானமாகிய மந்திர மருந்தே; இப்பெரிய நிலவுலகில் என்னைப் பிறப்பித்த தலைவனே; ஆகமப் பொருள் யாவற்றையும் தன்பால் உடைய மெய்ப்பொருளே; ஒப்பற்ற நடராசனாகிய என் சற்குருவே வணக்கம். எ.று.
திருவருள் ஞானமாகிய பெருவெளியின்கண் பரம்பொருள் பரஞ்சோதியாய்த் திகழ்வது, சந்திரன் சூரியன் முதலிய வானுலக ஒளிப் பொருள்கள் தத்தமக்கு வேண்டிய நிலவொளியும் வெயிலொளியும் பெறுதற் பொருட்டு என்ற கருத்துப் புலப்பட, “சந்திர சூரியர் ஒளி பெற விளங்கும் தனி அருட் பெருவெளித் தலத்து எழுஞ்சுடரே” என உரைக்கின்றார். சந்திர சூரிய மண்டலங்களுக்கு அப்பாலிருந் தல்லது, சந்திர சூரியர்களுக்கு ஒளி நல்குதற்கு வாய்ப்பாகாது என உணர்க. குரு முதல்வன் ஒருநாள் இரவுப் போதில் வடலூர் வள்ளலை அடைந்து திருவருள் ஞானத்தை நல்கிய திறத்தைத் தெரிவிக்கின்றாராதலின், “இரவிடை வந்து எனக்கு அருள் அமுதளித்து வாழ்க என்றருளிய வாழ்முதற் பொருளே” என உரைக்கின்றார். மந்திரம் என்ற சொல்லுக்கு மனத்தைத் திடப் படுத்துவது என்று பொருள் கூறுபவாதலின், சிவ பரம்பொருளை, “மந்திரமே” என்றும், வளர்க்கின்ற மந்திர ஞான மருந்தே” என்றும் இசைக்கின்றார். நாம் நிலவுலகில் பிறந்த காரணத்தை எண்ணிய வடலூர் வள்ளல் தம்மை யுலகத்தில் இறைவனே பிறப்பித்தான் எனத் துணிகின்றாராதலால், “மாநிலத்திடை எனை வருவித்த பதியே” என்று கூறுகின்றார். தந்திரம் - சிவாகமம். சிவாகமங்கள் கூறுகின்ற மெய்ப்பொருள் அனைத்தும் சிவ பரம் பொருளையே சுட்டி நிற்றலால், “தந்திரம் யாவையும் உடைய மெய்ப் பொருளே” எனச் சாற்றுகின்றார். ஆகமங்கள் அனைத்தையும் அருளியவன் சிவனே என்று சான்றோர் கூறுதலால் இவ்வாறு கூறுகின்றார் எனினும் பொருந்தும்.
இதனால், அருட் பெருவெளித் தலத்து ஒளிரும் சுடரும், வாழ்முதற் பொருளும், ஞான மருந்தும், பதிப் பொருளும், மெய்ப்பொருளுமாகிய நடராச மூர்த்தியே சற்குருவாம் எனத் தெரிவித்தவாறாம். (17)
|