3703. நன்மார்க்கத் தவர்உளம் நண்ணிய வரமே
நடுவெளி நடுநின்று நடஞ்செயும் பரமே
துன்மார்க்க வாதிகள் பெறற்கரு நிலையே
சுத்திசி வானந்தப் புத்தமு துவப்பே
என்மார்க்கம் எனக்களித் தெனையுமேல் ஏற்றி
இறவாத பெருநலம் ஈந்தமெய்ப் பொருளே
மார்கச் சங்கத்தார் தழுவிய பதியே
தனிநட ராசஎன் சற்குரு மணியே.
உரை: நன்னெறியாளர் திருவுள்ளத்தில் எழுந்தருளும் மேம்பட்ட பொருளே; இலாடத் தானத்தே தோன்றும் ஞான வெளியின் நடுவே நின்று திருக்கூத்து இயற்றும் பரம்பொருளே; தீநெறியாளராகிய சமயவாதிகள் பெறுதற் கரிய ஞான நிலையமே; சுத்த சிவானந்தமாகிய புதுமை சான்ற சிவஞான அமுதளித்து மகிழ்விப்பவனே; எனக்குரிய நன்னெறியை எனக்கறிவித் தருளி என்னையும் மேனிலைக்கண் செலுத்தி இறவாமைக் கேதுவாகிய பெரிய ஞான நலத்தைத் தந்த மெய்ப் பொருளே; சன்மார்க்கச் சங்கத்தார்க்குரிய தலைவனே; ஒப்பற்ற நடராசனாகிய என் சற்குரு மணியே வணக்கம். எ.று.
நலம் பயக்கும் அருளறத்தை மேற் கொண்டவர்களை நன்மார்க்கத்தவர் என்றும், அவர் திருவுள்ளத்தில் மேலான ஞான மூர்த்தமாய் எழுந்தருளுவது பற்றிச் சிவபெருமானை, “நன்மார்க்கத்தவர் உளம் நண்ணிய வரமே” என்றும் உரைக்கின்றார். நடு என்பது புருவநடுவாகிய இலாடத்தானம். அதன் வாயிலாகச் சாக்கிரத்தே அதீதத்தைப் புரியும் ஞானவான்கள் காண விளங்குவது ஞானா காசமாதலின் அதனை, “நடு வெளி” என்று குறிப்பிடுகின்றார். அதன் நடுநின்று கூத்தப்பிரான் ஞான நடனம் புரிகின்றான் என்று பெரியோர் கூறுபவாதலால், “நடுவெளி நடுநின்று நடஞ் செயும் பரமே” என்று விளம்புகின்றார். தாம் தாம் மேற்கொண்ட சமய மதக் கொள்கைகளுக்காகப் பிடிவாதம் பூண்டுத் தீது செய்கின்றவர்களை, “துன்மார்க்க வாதிகள்” என்று சொல்லுகின்றார். சற்ப விதண்ட வாதங்களால் அவர்கள் அறிவு அறைபோகின்றார்கள் என்பது பற்றி, “துன்மார்க்க வாதிகள் பெறற்கு அருநிலையே” என்று நவில்கின்றார். தூய சிவஞானத்தால் உணருந் தொறும் உணருந்தொறும் புதுப்புதுப் பெரும் போகம் தரும் இயல்பு பற்றி, “சுத்த சிவானந்தப் புத்தமுது உவப்பே” என்று உரைக்கின்றார். “சிவானந்தம் புணர்ந்தால் புணருந் தொறும் பெரும் போகம் பின்னும் புதிதாய்” (திருக் கோவை) வளர்கின்ற என மணிவாசகப் பெருமான் உரைப்பதனால், “சுத்த சிவானந்தப் புத்தமுது உவப்பே” எனப் புகல்கின்றார். தாம் மேற்கொண்டு ஒழுகுவது சுத்த சன்மார்க்கமாயினும் அதன் பொருளையும் பயனையும் விளக்கி மேனிலைக்கண் செலுத்திய திறம் வெளிப்பட, “என் மார்க்கம் எனக்கு அளித்து எனையும் மேலேற்றி” என்றும், மேலும் பிறப்பதற்கே இறக்கின்ற உலகவர் போலாது இறவாத பெருநலத்தை இறைவன் தந்தருளினாய் என்பார், “இறவாத பெருநலம் ஈந்த மெய்ப் பொருளே” என்றும் உரைக்கின்றார். இறவாத பெருநலமாவது மீளவும் பிறந்து இறத்தலுக்கு உட்படாத பெரிய நலம் என்க சன்மார்க்க சங்கத்தார்க்குச் சிவனே தலைவனாதல் விளங்க, “சன்மார்க்க சங்கத்தார் தழுவிய பதியே” என விளம்புகின்றார்.
இதனால் வரப்பொருளும், நலம் செய்யும் பரம்பொருளும், துன்மார்க்கர்கள் பெறலரும் நிலையும், புத்தமு துவப்பும், மெய்ப்பொருளும், சன்மார்க்க சங்கத்தாருடைய தலைவருமாகிய நடராசப் பெருமானே சற்குரு மூர்த்தம் என விளம்பியவாறாம். (19)
|