3704.

     ஆதியும் அந்தமும் இன்றிஒன் றாகி
          அகம்புறம் அகப்புறம் புறப்புறம் நிறைந்தே
     ஓதியும் உணர்ந்தும்இங் கறிவரும் பொருளே
          உளங்கொள்சிற் சபைநடு விளங்குமெய்ப் பதியே
     சோதியும் சோதியின் முதலுந்தான் ஆகிச்
          சூழ்ந்தெனை வளர்க்கின்ற சுதந்தர அமுதே
     சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே
          தனிநட ராசஎன் சற்குரு மணியே.

உரை:

     தோற்றமும் முடிவும் இல்லாத ஒன்றாய், அகமென்றும் புறமென்றும் அகப்புற மென்றும் புறப்புற மென்றும் காணப்படும் பொருள் நிலை அனைத்திலும் நிறைந்து பல்வேறு நூல்களையும் ஓதியும் உணர்ந்தும், இவ்வுலகில் அறிதற் கரிதாய் விளங்கும் பரம்பொருளே; மன வுணர்வால் கொள்ளப்படுகின்ற சிற்சபையின் நடுவிடத்தே விளங்குகின்ற மெய்ம்மைப் பதியே; சோதியும், சோதிப் பொருட்கு முதலும், தானாய் நிறைந்து என்னை வளர்த் தருளுகின்ற தனியுரிமை அமுதமே; சாதி வரம்புகளைக் கடந்தவர்க்கு உறவாய் விளங்குபவனே; ஒப்பற்ற நடராசப் பெருமானாகிய சற்குரு மணியே வணக்கம். எ.று.

     “ஆதியும் அந்தமு மில்லா அரும் பெருஞ் சோதி” என மணிவாசகர் முதலிய பெருமக்கள் வற்புறுத்துதலால், வடலூர் வள்ளலும் சிவ பரம்பொருளை, “ஆதியும் அந்தமும் இன்றி ஒன்றாகி” என்றும், பொருட்களை அகம், புறம், அகப் புறம், புறப்புறம் எனப் பகுத்துக் காண்பது பொருள் நூலாரின் மரபாதலின் அது பற்றி, “அகம் புறம் அகப்புறம் புறப்புறம் நிறைந்து” என்றும், “உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்” என உயர்ந்தோர் உரைத்தலின், “ஓதியும் உணர்ந்தும் இங்கு அறிவரும் பொருளே” என்றும் உரைக்கின்றார். ஞானிகளின் திருவுள்ளத்தையும் ஞானசபை யெனப் பெரியோர் உரைப்பது கொண்டு, “உளங் கொள் சிற்சபை நடுவிளங்கு மெய்ப் பதியே” என்று விளம்புகின்றார். உலகிலுள்ள சோதிப் பொருள்களும், அவற்றிற்கு முதலாகிய பரஞ்சோதியும் சிவமாதலின், “சோதியும் சோதியின் முதலும் தானாகி” என்றும், தன்னை ஒளி நெறிக்கண் நிறுத்தி உய்வித்தமை பற்றி, “சூழ்ந்து எனை வளர்க்கின்ற சுதந்தர அமுதே” என்றும் சொல்லுகின்றார். சாதி சமய வரம்புகளைக் கடந்து சிவ பரம்பொருள் ஒன்றே முதல் எனக் கருதி ஏனைய உயிர் வகை அனைத்தின்பாலும் அன்புரிமை கொண்டு ஒழுகுபவர் சுத்த சன்மார்க்கர்கள் ஆதலின் அவர்களை, “சாதியும் சமயமும் தவிர்த்தவர்” என்றும், அவர்கட்கே உரிமை யுறவாக அருள் பண்ணுகின்றானாதலின், “உறவே” என்றும் உவந்து உரைக்கின்றார்.

     இதனால், அறிவரும் பொருளாய், மெய்ப் பதியாய், சுதந்தர அமுதாய், சன்மார்க்கர் உறவாய் நிலவும் நடராச மூர்த்தமே சற்குருநாதன் என அறிவுறுத்தவாறாம்.

     (20)