3705. கற்பனை முழுவதும் கடந்தவர் உளத்தே
கலந்துகொண் டினிக்கின்ற கற்பகக் கனியே
அற்பனை யாண்டுகொண் டறிவளித் தழியா
அருள்நிலை தனில்உற அருளிய அமுதே
பற்பல உலகமும் வியப்பஎன் தனக்கே
பதமலர் முடிமிசைப் பதித்தமெய்ப் பதியே
தற்பர பரம்பர சிதம்பர நிதியே
தனிநட ராசஎன் சற்குரு மணியே.
உரை: பலவேறு கற்பனைகள் அனைத்தையும் பொருளாகக் கொள்ளாமல் இகந்து நீக்கிய சான்றோர் உள்ளத்தில் வேறறக் கலந்து கொண்டு இனிமை செய்கின்ற கற்பகக் கனி போல்பவனும், அற்பனாகிய என்னையும் ஆண்டருளி மெய்யறிவு தந்து அழியாத திருவருள் ஞான நிலையை எய்தச் செய்தருளிய அமுது போல்பவனும், பலவேறு உலகங்களிலுள்ளவர்கள் கண்டு வியப்ப எனக்குத் தன் திருவடித் தாமரையைச் சென்னியில் பொருந்த வைத்த மெய்ம்மைப் பதியும், தனக்குத் தானே பரமாகவும் ஏனைப் பரமாகிய பொருள்களுக் கெல்லாம் பரமாகவும் விளங்குகின்ற சிதம்பரச் செல்வமுமான ஒப்பற்ற நடராசனாகிய என் சற்குருவே வணக்கம். எ.று.
உள்ளதை இல்லதாகவும், இல்லதை உள்ளதாகவும், கற்பனை செய்து கேட்பார் விம்மித முறச் செய்யும் கற்பனை வகைகள் எல்லாவற்றையும் கடந்த மெய்ஞ்ஞானிகளின் திருவுள்ளத்தில் இரண்டறக் கலந்து கொண்டு, தனது உண்மையைத் தனது இனிமைப் பண்பால் காட்டி யருளுதல் பற்றி, “கற்பனை முழுவதும் கடந்தவர் உளத்தே கலத்து கொண்டு இனிக்கின்ற கற்பகக் கனியே” என்று கூறுகின்றார். இறைவனது முற்றறி வுடைமையும், வரம்பி லாற்ற லுடைமையும் எண்ணி அறிகின்ற பொழுது, தான் அவ்வறி வாற்றலில் மிக மிகப் புல்லியனாய்க் காணப்படுவது கொண்டு தன்னை ‘அற்பன்’ என்றும், தனக்கு மெய்யுணர்வு அளித்து என்றும் அழியாத திருவருள் நிலைக்கண் தன்னை எய்துவித்தருளிய இறைவனது ஏற்றத்தை, “ஆண்டு கொண்டு அறிவு அளித்து அழியா அருள்நிலை தனில் உற அருளிய அமுதே” என்றும் உரைக்கின்றார். மெய்யுணர்வு எய்தாவிடத்து ஆண்டு கொள்ளுதலும் அருள் நிலையிலுற அருளுதலும் பயனில் செயலாமாதலின், “அறிவளித்தழியா அருள் நிலை தனிலுற அருளிய அமுதே” எனப் போற்றுகின்றார். நிலவுலகில் அறிவுடையோர் சூழல்கள் மிகப்பல இருத்தலின் அவற்றிலுள்ள எல்லோரும் கண்டு வியக்கும்படித் தனக்குத் திருவருள் ஞானத்தை அருளிய திறத்தை நினைந்து, “பற்பல உலகமும் வியப்ப என் தனக்கே பதமலர் முடிமிசைப் பதித்த மெய்ப் பதியே” என்று விளம்புகின்றார். சூழல் எனினும் உலகம் எனினும் ஒக்கும். பரம் - மேல் தற்பரம் - தனக்கு மேல் தானே என்பது. பரம்பரம் - மேலாய பொருள் பலவற்றிற்கும் மேலாயது. சிதம்பரம் - தில்லையம் பதி. அது வடலூரில் நிறுவப்பட்டிருக்கின்ற உத்தர ஞான சிதம்பரத்தைக் குறிப்பதாக கொள்ளுவது முண்டு.
இதனால் கற்பகக் கனியும், அருள்நிலை அருளிய அமுதும், பதமலர் பதித்த மெய்ப் பதியும், தற்பரமும், பரம்பரமும், சிதம்பர நிதியுமாகிய நடராசப் பெருமானே என்னுடைய சற்குரு என மொழிந்தவாறாம். (21)
|