3706.

     பவநெறி செலுமவர் கனவினும் அறியாப்
          பரம்பொரு ளாகிஎன் உளம்பெறும் ஒளியே
     நவநெறி கடந்தோர் ஞானமெய்ச் சுகமே
          நான்அருள் நிலைபெற நல்கிய நலமே
     சிவநெறி யேசிவ நெறிதரு நிலையே
          சிவநிலை தனில்உறும் அனுபவ நிறைவே
     தவநெறி செலும்அவர்க் கினியநல் துணையே
          தனிநட ராசஎன் சற்குரு மணியே.

உரை:

     பிறவிக் கேதுவாகிய நெறியின்கண் நிற்பவர் கனவின் கண்ணும் அறிய மாட்டாத பரம்பொருளாய், என் சிந்தைக்கண் திகழும் ஒளிப் பொருளும், புதிது புதிதாய்க் காணப்படும் நெறிகளை மேற் கொள்ளாது ஒழிந்தோருடைய ஞானத்தின்கண் நிலவும் மெய்ம்மைச் சுகமும், நான் திருவருள் நிலையைப் பெறும் பொருட்டு நல்ஞானம் நல்கிய நன்பொருளும், சிவநெறியும், சிவநெறியை நல்க வல்ல ஞான நிலையமும், சிவநெறிப் பயனாகிய சிவபோக நிலையில் நிறைந்த அனுபவ நிறைவாகுவதும், தவநெறிக்கண் செல்லுவோர்க்கு நல்ல இனிய துணையாவதும், நடராசப் பெருமானாகிய என் சற்குரு மணியாம் அதற்கு வணக்கம். எ.று.

     பவநெறி - பிறந்திறந்து உழலும் பிறவித் துன்பத்திற் கிடமாகும் நெறி. அவர்கள் பிறவித் துன்பத்திற் கேதுவானவற்றையே நினைந்து ஒழுகுதலின், “பவநெறி செலுமவர் கனவினும் அறியாப் பரம் பொருளாகி” என்றும், அவர்களுடைய நலமும் கனவும் பிறவிக் கேதுவாய பொருள்களையே கண்டும் பயின்றும் ஒழுகுதலின், “கனவினும் அறியாப் பரம்பொருள்” என்றும் பகர்கின்றார். பரம்பொருளாயினும் பவநெறியில் செல்லாத நன்மக்கள் உள்ளத்தில் ஞான விளக்காய்த் திகழ்தலின், “உளம் பெறும் ஒளியே” என்று உரைக்கின்றார். பண்டையோர் வகுத்த நெறிகளை எண்ணாமல் புது நெறி கண்டு உரைப்போர்தம் அறிவுக் காட்சிக்கு அகப் படாமல் மேம்பட்டு நிற்கும் ஞான ஆனந்தமாய் விளங்குதலின், “ஞான மெய்ச் சுகமே” என நவில்கின்றார். ஒப்பற்ற கருணை நெறிக்கண் செல்வார் பெறும் அருட் பெருஞ் சோதி ஞானத்தைத் தனக்கு நல்கினமை விளங்க “நான் அருள்நிலை பெற நல்கிய நலமே” என உரைக்கின்றார். சிவநெறிக்குத் தலைவனும், சிவநெறி விளைவிக்கும் நிலைக் குரியவனும், சிவபோக அனுபவத்தை நிறைவிப்பவனும் சிவ பரம் பொருளாதலின், “சிவநெறியே சிவநெறி தருநிலையே, சிவ நிலைதனிலுறும் அனுபவ நிறைவே” என்று கூறுகின்றார். தவநெறியிற் செல்லும் தவயோகிகட்கு அவரது தவயோகம் கடைபோதற்குப் பெருந் துணை புரிதலால், “தவநெறி செலும் அவர்க் கினிய நல்துணையே” என உரைக்கின்றார். திருத்துறையூரின்கண் சிவன்பால் தவநெறி வேண்டிய சுந்தரர்க்கு இனிய துணை புரிந்தமையின் அதனை நினைந்து இவ்வாறு கூறுகின்றார். எனினும் அமையும்.

     இதனால், பரம்பொருளாய், உளம் பெறும் ஒளியாய், ஞான மெய்ச் சுகமாய், சிவானுபவ நிறைவாய், தவயோகியர்க்கு இனிய துணையாய் விளங்கும் ஒப்பற்ற நடராசப் பெருமானே எனது சற்குரு மணியாம் என விளம்பியவாறாம்.

     (22)