3707. அறியாமல் அறிகின்ற அறிவினுள் அறிவே
அடையாமல் அடைகின்ற அடைவினுள் அடைவே
செறியாமல் செறிகின்ற செறிவினுட் செறிவே
திளையாமல் திளைக்கின்ற திளைப்புறு திளைப்பே
பிரியாமல் என்னுளம் கலந்தமெய்க் கலப்பே
பிறவாமல் இறவாமல் எனைவைத்த பெருக்கே
தறியாகி உணர்வாரும் உணர்வரும் பொருளே
தனிநட ராசஎன் சற்குரு மணியே.
உரை: அறிகருவிகளால் அறியப் படாது உண்மை யறிவால் அறியச் செய்கின்ற அறிவுக் கறிவாகவும், மனம் மெய் முதலியவற்றால் அடைகின்ற அனுபவத்துள் அடையும் அடைவாகவும், மெய்யால் உணராமல் உணர்வால் உணர்ந்து ஒன்றுகின்ற உணர்வாகவும், மன வுணர்வுகளால் கலக்காமல் மெய்ஞ்ஞானத்தால் கலக்க நிற்கின்ற கலப்பாகவும், என் மனத்தினின்றும் பிரிவறக் கலந்திருக்கின்ற மெய்ம்மைக் கலப்பாகவும், பிறந்திறந்து உழலாமல் என்னைப் பெரு நெறிக்கண் உய்வித்த அருட் பெருக்காகவும், யோக நெறியின் நடு தறி போல் உணர்வு ஒன்றிய யோகியர்க்கும் உணர்தற்கரிய பொருளாகவும் விளங்கும் ஒப்பற்ற நடராச மூர்த்தமாகிய என் சற்குரு மணியே வணக்கம். எ.று.
மெய் வாய் முதலிய கருவிகளைக் கொண்டு பொருள்களை அறிகின்ற பொறி யறிவுக்கும், மனம் சித்தம் முதலிய கரணங்களால் அறிகின்ற அறிவுக்கும் மேலாய் உண்மை யறிவாய் விளங்குதல் பற்றிச் சிவ பெருமானை, “அறியாமல் அறிகின்ற அறிவனுள் அறிவே” எனப் புகல்கின்றார். மனத்தாலும் மெய்யாலும் உலகியல் பொருட்களையும் உணர்வு மயமான பொருட்களையும் அடைந்து அனுபவிக்கின்ற அனுபவத்தின் இயல்பாக இலங்குவது பற்றி, “அடையாமல் அடைகின்ற அடைவினுள் அடைவே” என அறிவிக்கின்றார். மெய்யால் தீண்டியும், உணர்வால் ஒன்றியும், பொருளுண்மைகளை யுணர்ந்தும் உள்ளத்தே அடங்க நிற்கும் ஒட்பம் பற்றி, “செறியாமல் செறிகின்ற செறிவினுட் செறிவே” எனச் சிறப்பிக்கின்றார். உலகியல் பொருள்களோடு கூடிக் கலந்து நிற்பது போலன்றி ஞானக் காட்சியால் ஞானப் பொருளோடு கலந்து ஒன்றி நிற்கும் உயர்வு தோன்ற, “திளையாமல் திளைக்கின்ற திளைப்புறு திளைப்பே” என்று தெரிவிக்கின்றார். நினைக்குந் தோறும் நினைவிடத்துத் தோன்றி இன்பம் செய்தல் பற்றி, “பிரியாமல் என்னுளம் கலந்த மெய்க் கலப்பே” எனவும், பிறப்பிறப் பில்லாத முத்திப் பெரு நிலைக்குத் தம்மை உரிமை யாக்கியது பற்றி, “பிறவாமல் இறவாமல் எனை வைத்த பெருக்கே” எனவும் உரைக்கின்றார். யோக நெறிக்கண் உடல் உணர்ச்சியின்றி நடுதறி போலும் இருந்து, யோகத்தால் உணரும் யோகிகளின் யோகக் காட்சிக்கு எட்டாது நிலவுதல் பற்றி, “தறியாகி உணர்வாரும் உணர்வரும் பொருளே” எனப் புகலுகின்றார்.
இதனால், அறிவினுள் அறிவாகியும், அடைவினுள் அடைவாகியும், செறிவினுள் செறிவாகியும், திளைப்பினுள் திளைப்பாகியும், மெய்க் கலப்பாகியும், அருட் பெருக்காகவும், உணர்வரும் பொருளாகவும் விளங்கும் ஒப்பற்ற நடராசப் பெருமானே என் சற்குரு மணி என விளக்கியவாறாம். (23)
|