3708. கருதாமல் கருதும்ஓர் கருத்தினுட் கருத்தே
காணாமல் காணும்ஓர் காட்சியின் விளைவே
எருதாகத் திரிந்தேனுக் கிகபரம் அளித்தே
இறவாத வரமுந்தந் தருளிய ஒளியே
வருதாகந் தவிர்த்திட வந்ததெள் அமுதே
மாணிக்க மலைநடு மருவிய பரமே
தருதான முணவெனச் சாற்றிய பதியே
தனிநட ராசஎன் சற்குரு மணியே.
உரை: மனம் முதலிய கரணங்களைக் கொண்டு நினைத்துணரும் நினைவின்கண் நினைவுறுவாய்த் தோன்றுவதும், கண் முதலிய கருவிகளால் காணாமல் ஞானக் கண் கொண்டு காணும் காட்சியின் பயனாயும், எருது போலத் திரிந்த எனக்கு இம்மை மறுமை நலங்களை அளித்து, இனியும் பிறந்திறவாத வரத்தையும் தந்தருளிய அருட் பேரொளியாயும், ஞான வேட்கை நீங்கிட உள்ளத்தில் வந்தருளிய தெள்ளமுதாயும், மாணிக்க மலை போல் சபை நடுவே தோன்றுகின்ற பரம்பொருளாயும், தன்னால் தரப்படுகின்ற ஞான தான போகமே உண்மை உணவா மென உரைத்தருளிய பதிப்பொருளாயும் விளங்குகின்ற ஒப்பற்ற நடராசப் பெருமானாகிய சற்குரு மணியே வணக்கம். எ.று.
கண் முதலிய கருவிகளால் காண முடியாத ஞானக் காட்சியை எடுத்துச் சொல்லி மனம், சித்தம் முதலிய கரணங்களால் நினைத்தலின்றி, உள்ளத்தின் உள்ளுணர்வால் உணர்வதைப் பின்னர்க் கூறியது செய்யுளாம் முறைமை பற்றி, “ஆள்வார் இல்லாத ஊர்க் காளை மாடு” போலத் திரிந்தேன் என்பார், “எருதாகத் திரிந்தேன்” எனத் தம்மையே குறித்துரைக்கின்றார். “ஆள்வார் இலிமா டாவேனோ” (கோயில் மூத்த) என்று மணிவாசகரும் இதனையே எடுத்தோதுவது காண்க. செலுத்துவாரின்றித் தன் இச்சை வழியே ஒழுகிய திறம் விளங்க, “எருதாகத் திரிந்தேன்” என இயம்புகின்றார். விலக்கப்பட வேண்டிய தன்னையும் ஆட்கொண்டு இம்மை மறுமைகளின்கண் பெற வேண்டிய ஞான நலம் தந்தருளிய சிறப்புத் தோன்ற வடலூர் வள்ளல், “திரிந்தேனுக்கு இகபரம் அளித்தே” என்றும், பிறவா இறவாப் பேறாகிய முத்தி நலம் தந்த பேரருளை வியந்து, “இறவாத வரமும் தந்தருளிய ஒளியே” என்றும் இயம்புகின்றார் ஞான வேட்கை மேன்மேலும் பெருகுதல் தோன்ற, “வருதாகம் தவிர்த்திட” என்றும், சிவஞான அமுதத்தை வழங்கிய திறத்தை, “வந்த தெள்ளமுதே” என்றும் புகழ்கின்றார். நடு - ஞான சபை. ஞானசபையின்கண் கூத்தப் பெருமான் மாணிக்க மலைபோல் நின்றாடுதலின், “மாணிக்க மலை நடு மருவிய பரமே” என்று நவில்கின்றார். சிவஞான நிலையத்தின்கண் பெறப்படுகின்ற ஞான போகத்தை, “தானம் தரும் உணவு எனச் சாற்றிய பதியே” என்று உரைக்கின்றார்.
இதனால், கருத்தின் உட்கருத்தும், காட்சியின் விளைவும், ஒளிப்பொருளும், தெள்ளமுதும், நடு மருவிய பரமும், பதியுமாகிய ஒப்பற்ற நடராச மூர்த்தம் எனக்குச் சற்குரு என விளம்பியவாறாம். (24)
|