3709. ஏகாஅ னேகாஎன் றேத்திடு மறைக்கே
எட்டாத நிலையேநான் எட்டிய மலையே
ஓகாள மதங்களை முழுவதும் மாற்றி
ஒருநிலை ஆக்கஎன் றுரைத்தமெய்ப் பரமே
ஈகாதல் உடையவர்க் கிருநிதி அளித்தே
இன்புறப் புரிகின்ற இயல்புடை இறையே
சாகாத வரந்தந்திங் கெனைக்காத்த அரசே
தனிநட ராசஎன் சற்குரு மணியே.
உரை: ஏகனென்றும் அனேக னென்றும் சொல்லித் துதிக்கும் வேத ஞானத்திற்கு எட்டாத நிலையமும், நான் எட்டிக் காண நின்ற ஞான மலையுமாய், விலக்கத் தக்க மத நெறிகள் முழுவதையும் மாற்றிச் சமரச சன்மார்க்கச் சமயமாக மாற்ற வேண்டுமென உரைத்த மெய்ம்மைப் பரம்பொருளாயும், “அன்பு தருக” என வேண்டி அதனைப் பெற்றவர்க்குப் பெருஞ் செல்வம் அளித்து இன்புறுமாறு அருளுகின்ற இயல்புடைய இறைவனாகியும், சாகாமைக் கேதுவாகிய வரம் தந்து எனைக் காத்தருளிய அருளரசாயும் விளங்குகின்ற ஒப்பற்ற நடராசப் பெருமானாகிய சற்குரு பரனுக்கு வணக்கம். எ.று.
ஏகன் என்றும், அனேகன் என்றும் மறைநூல்கள் எடுத்தோதியும் காண முடியாத நிலையில் இருப்பது பற்றி, “ஏகா அனேகா என்று ஏத்திடு மறைக்கே எட்டா நிலையே” என்றும், அதனைத் தன் திருவருள் ஞானத்தால் கண்டு இன்புற்றமை தோன்ற, “நான் எட்டிய மலையே” என்றும் வடலூர் வள்ளல் உரைக்கின்றார். ஓகாளம் - வேண்டாதவற்றை வாயால் உமிழ்தல். வேண்டாத சமயங்களையும் மதங்களையும் “காள மதங்கள்” என உரைக்கின்றார். ஓகாள மதங்கள் என்பதற்கு வேண்டாது விலக்கப்படும் நஞ்சு போன்ற மதங்கள் எனினும் அமையும். வேண்டப்படாத இம்மதங்களால் உலக மக்களிடையே ஆன்ம நேய ஒருமையுணர்வு உண்டாகாமை பற்றி, “முழுவதும் மாற்றி ஒருநிலை ஆக்க என்று உரைத்த மெய்ப் பரமே” என மொழிகின்றார். ஆக்குக என்பது ஆக்க என நின்றது. கற்பனையாகாது உண்மைப் பரமாய் நிற்பது பற்றிப் பரசிவத்தை, “மெய்ப் பரமே” என உரைக்கின்றார். “அன்பு தருக” என வேண்டிய மணிவாசகர் போன்ற பெருமக்களை, “ஈகாதல் உடையவர்” எனக் கூறுகின்றார். காதல் தருக என வேண்டி அதனைப் பெற்றுடையவர் என்ற கருத்துப் புலப்பட மெய்யன்பர்களை, “ஈகாதல் உடையவர்” என இயம்புகின்றார். அன்பால் விளையும் சிவஞானச் செல்வத்தை “இருநிதி” எனக் குறிப்பிட்டு அதனை அளித்து மெய்யன்பர்களைக் குறையாத இன்ப வாழ்வுடையவராக்கும் இயல்புடைமை விளங்க இறைவனை, “இருநிதி அளித்து இன்புறுப் புரிகின்ற இயல்புடை இறையே” என ஏத்துகின்றார். சாதல் இன்னாதது எனச் சான்றோர் உரைத்தலால், பிறந்திறந்து “சாகாத நிலையை அளித் தருளிய சிவனது திருவருளை வியந்து, “சாகாத வரம் தந்து இங்கெனைக் காத்த அரசே” என்று போற்றுகின்றார்.
இதனால், மறைக்கு எட்டாத நிலையமாகவும், வள்ளற் பெருமான் எட்டிக் காண்கின்ற இன்ப மலையாகவும், வேண்டாத மதங்களை ஒரு நிலை யாக்குக என உரைத்தருளிய பரம்பொருளாயும், மெய்ம்மைக் காதலுடையவர் இன்புற அருளுகின்ற இறையாகவும், சாகா வரம் தந்து காத்த அருளரசாகவும் நடராசப் பெருமானாகிய சற்குருபரன் விளங்குதல் தெரிவித்தவாறாம். (25)
|