24. தற்போத இழப்பு

    தற்போதம் என்பது யான் எனது என்ற செருக்கு ஏதுவாகப் பிறக்கும் மருளுணர்வு. இதனைப் பசுபோதம் எனவும் நூல்கள் வழங்குவதுண்டு. தற்போதம் ஒழிந்தாலன்றித் திருவருள் ஞான உணர்வும் அதனைப் பெறுதற்கண் உள்ள முயற்சியும் பயன்படாவாகலின் தற்போதத்தைத் துறப்பது இதனுள் எடுத்துரைக்கின்றார்.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3710.

     அவ்வண்ணம் பழுத்தவரும் அறிந்திலர்சற் றெனினும்
          அறிந்தனம்ஓர் சிறிதுகுரு அருளாலே அந்தச்
     செவ்வண்ணம் பழுத்ததனித் திருஉருக்கண் டெவர்க்கும்
          தெரியாமல் இருப்பம்எனச் சிந்தனைசெய் திருந்தேன்
     இவ்வண்ணம் இருந்தஎனைப் பிறர்அறியத் தெருவில்
          இழுத்துவிடுத் ததுகடவுள் இயற்கைஅருட் செயலோ
     மவ்வண்ணப் பெருமாயை தன்செயலோ அறியேன்
          மனம்அலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.

உரை:

     சற்குரு அருளிய அருளுரையால் ஞானம் முதிர்ந்தவரும் சிறிதும் சிவத்தை அறிந்திலர் என்றாலும் குருபரன் அருளினால் நாம் ஒரு சிறிது அறிந்துள்ளோம்; குருவருள் ஞானத்தால் அந்தச் செம்மை நிறம் கொண்ட ஒப்பற்ற சிவத்தின் திருவுருவைக் கண்டு எவர்க்கும் தெரியாமல் உள்ளத்தில் கொண்டிருப்போம் என்று எண்ணிக் கொண்டு அடங்கியிருந்தேன்; இவ்வாறிருந்த என்னைச் சிவஞானி எனப் பிறரெல்லாம் அறியும்படித் தெருவில் இழுத்து விட்டு விட்டது; இது தானும் கடவுளின் இயல்பான அருட் செயலோ, மயக்கும் இயல்புடைய பெரிய மாயையின் செய்கையோ, என்னால் அறிய முடியவில்லை; அம்பலத்தின்கண் ஆடல் புரிகின்ற அருளரசே என் மனம் தெளிவின்றிக் கலங்குகின்றது; தெளிவு நல்குக. எ.று.

     சிவஞானச் செந்நெறிக்கண் நிற்கும் திறம் அருட் குருவால் பெற்று அதனிடத்தே நின்று பழுத்த ஞானிகளை, “அவ்வண்ணம் பழுத்தவர்” எனக் குறிக்கின்றார். உலகில் ஞானவான்களாலும் “இன்ன வுரு இன்னதிறம் என்று அறிவதே லரிது” என்று ஞானசம்பந்தரும், “இப்படியன் இந்நிறத்தன் இவன் இறைவன் என்றெழுதிக் காட்ட ஒணாதே” எனத் திருநாவுக்கரசரும், “இது அவன் திருவுரு இது அவன் எனவே அமரரும் அறியார்” என மாணிக்கவாசகரும் பிறரும் கூறுதலால், “அவ்வண்ணம் பழுத்தவரும் அறிந்திலர் சற்றும்” என எடுத்துரைக்கின்றார். குருபரன் அருளிய ஞான நாட்டத்தால் சிவத்தை ஒரு அளவு அறிந்து கொண்டமை புலப்பட, “அறிந்தனம் ஓர் சிறிது குரு அருளாலே” என்று நவில்கின்றார். திருவருளே கண்ணாகக் கொண்டு நோக்கிய போது சிவ பரம் பொருள் செம்மேனி அம்மானாய்க் காட்சி தந்த திறத்தை, “அந்தச் செவ்வண்ணம் பழுத்த தனித் திருவுருக் கண்டு” என்றும், இதனை எடுத்துரைப்பின் உலகவர் எள்ளி நகையாடுவர் என நினைந்து எவர்க்கும் உரைக்காமல் தாம் இருந்ததனை வடலூர் வள்ளல், “எவர்க்கும் தெரியாமல் இருப்பம் எனச் சிந்தனை செய்திருந்தேன்” என்றும் தெரிவிக்கின்றார். சிந்தையில் அடக்கிக் கொண்டு இருந்தேன் என்பார், “சிந்தனை செய்திருந்தேன்” எனக் கூறுகின்றார். இவ்வாறு அடக்கமே பொருளாகக் கொண்டு ஒடுங்கி இருந்தாராக, அவரைக் காண்கின்ற உலகவர், திருவருளால் சிவஞானம் பெற்ற செல்வர் என எண்ணிப் பெருமதிப்பு அளித்தனராதலால், “இவ்வண்ணம் இருந்த எனைப் பிறர் அறியத் தெருவில் இழுத்து விடுத்தது” என்றும், இதற்குக் காரணம் யாதாகலாம் என்று எண்ணுகின்றவர், இறைவன் திருவருட் செயலோ உலகியல் மாயையின் மயக்கச் செயலோ எனநினைந்து தெளிவுறாது வருந்தலுற்றாராதலால், “கடவுள் இயற்கை அருட் செயலோ, மவ்வண்ணப் பெருமாயை தன் செயலோ அறியேன்” என உரைக்கின்றார். மூலையில் இருந்தாரை முற்றத்தில் விடுவது சாலப் பெரியாராகிய இறைவன் செயலாதலால், “கடவுள் இயற்கை அருட் செயலோ” எனக் குறிக்கின்றார். மவ்வண்ணம் - உலகியல்பு. உலக இயல்பு மாயா காரியமாய் ஒன்றைப் பிறிது ஒன்றாகக் காட்டும் இயல்புடையதாதலின், “மவ்வண்ணப் பெருமாயை தன்செயலோ அறியேன்” என நினைக்கின்றார். தெளிவின்றிக் கலங்கும் மனநிலையை, “மனம் அலை பாய்கிறது” என்பது உலக வழக்கு. வேறு வருமிடங்களிலும் இதுவே கூறிக் கொள்க.

     இதனால், குருவருளால் பெற்ற திருவருட் கண் கொண்டு சிவத்தைத் தரிசித்து மூலையில் ஒடுங்கி இருந்தாராக, வடலூர் வள்ளலை உலகினர் சிவதரிசனம் பெற்ற சிவஞானி எனப் போற்றத் தொடங்கியது கண்டு, இதனால் தமக்குத் தற்போதம் தோன்றித் தமது அறிவு செயல்களைச் சிதைத்து விடுமோ என அஞ்சுகின்ற திறம் புலப்படுத்தவாறு.

     (1)