3711. கள்ளிருந்த மலர்இதழிச் சடைக்கனிநின் வடிவம்
கண்டுகொண்டேன் சிறிதடியேன் கண்டுகொண்ட படியே
நள்ளிருந்த வண்ணம்இன்னும் கண்டுகண்டு களித்தே
நாடறியா திருப்பம்என்றே நன்றுநினைந் தொருசார்
உள்ளிருந்த எனைத்தெருவில் இழுத்துவிடுத் ததுதான்
உன்செயலோ பெருமாயை தன்செயலோ அறியேன்
வள்ளிருந்த குணக்கடையேன் இதைநினைக் குந்தோறும்
மனம்அலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
உரை: அம்பலத்தில் கூத்தாடுகின்ற அருளரசாகிய பெருமானே! தேன் நிறைந்த மலரால் தொடுக்கப்பட்ட கொன்றை மாலையைச் சடையில் அணிந்துள்ள பரமனாகிய நினது செங்கனி போன்ற வடிவத்தை அடியேன் சிறிது கண்டு கொண்டேன்; கண்டு கொண்ட அதனை என் உள்ளத்திருந்த படியே இன்னும் கண்டு கண்டு மகிழ்வதோடு அம் மகிழ்ச்சி நாட்டவர் அறியா வண்ணம் உள்ளத்தில் கொண்டிருப்போம் என்றே பலமுறையும் நினைந்து மனையின்கண் ஒருபால் உள்ளே ஒடுங்கி இருந்த என்னைத் தெருவில் இழுத்து விடுத்துள்ளது; அதற்கு ஏதுவாவது உனது அருட் செயலோ, பெரிய உலகியல் மாயையின் செயலோ அறிகிலேன்; வளவிய கீழ்மைக் குணங்களால் கடைப்பட்டவனாகிய நான் இதை நினைக்கும் தோறும் என் மனம் கலக்கம் அடைகிறது. எ.று.
தேன் நிறைந்த புதுப் பூவாதல் விளங்கக் கொன்றை மலரை, “கள்ளிருந்த மலர் இதழி” எனக் கூறுகின்றார். சிவந்த கனி போன்ற நிறமுடையது சிவத்தின் திருமேனியாதலின், “கனி நின் வடிவம்” என்றும், அதனை முற்றவும் காணாது சிறிதே கண்டு கொண்ட துணர்த்த, “நின் வடிவம் கண்டு கொண்டேன் சிறிது அடியேன்” என்றும் கூறுகின்றார். முற்றவும் பாராது சிறிதே கண்டு பெற்ற இன்பத்தால் ஆறாமை கொண்டு பிறரறியாமல் மனத்தின் உள்ளே வைத்துப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருப்போம் என எண்ணினமை புலப்பட வடலூர் வள்ளல், “அடியேன் கண்டு கொண்ட படியே இன்னும் கண்டு கண்டு களித்து நாடு அறியாது இருப்பம் என்றே நன்று நினைந்து ஒருசார் உள்ளிருந்தேன்” என உரைக்கின்றார். கண்டு கொண்ட சிவக் காட்சி மனத்தினுள் நிகழ்ந்தது என்றற்கு, “நள்ளிருந்த வண்ணம்” என்றும், நாடறிந்த வழி மனக்காட்சி சிதைந்து விடுமென்ற அச்சத்தால் நினைந்தமை தோன்ற, “நாடறியா திருப்பம் என்றே நன்று நினைந்து” என்றும், நினைவு சிதையா வண்ணம் மனையின்கண் ஒரு புறத்தே ஒடுங்கி இருந்தமை விளங்க, “ஒருசார் உள்ளிருந்த என்னை” என்றும், தாம் பெற்ற மானதக் காட்சி இன்பத்தை நாடவர் அறிந்து பலப்படப் பேசலுற்றனர் என்பாராய், “எனைத் தெருவில் இழுத்து விடுத்தது” என்றும் இயம்புகின்றார். இதற்குக் காரணம் உனது திருவருளோ உலகியலின் மாயச் செய்கையோ, இன்னதென என்னால் அறிய முடியவில்லை என்பாராய், “உன் செயலோ பெருமாயை தன் செயலோ அறியேன்” என்று கூறுகின்றார். காட்சியின் பெருமையையும், கண்ட தமது சிறுமையையும் நோக்கிய வடலூர் வள்ளல் தமக்குள் கீழ்மைக் குணங்கள் பல இருத்தலை எண்ணித் தம்மை, “வள்ளிருந்த குணக் கடையேன்” எனக் குறித்து, இத்தகைய யான் காட்சி பெற்ற திறத்தையும் உலகவர் போற்றும் வகையையும் நினைந்து இதனால் தமக்குத் தற்போதம் தோன்றித் தமது சிவக் காட்சி நிலையைச் சிதைக்குமோ என அஞ்சுகின்றமை புலப்பட, “இதை நினைக்கும் தோறும் மனம் அலை பாய்வது காண்” என்று சொல்லி வருந்துகின்றார்.
இதனால், தாம் பெற்ற சிவதரிசன ஆனந்தத்தை, தற்போதம் தோன்றிச் சிதைக்குமோ என அஞ்சும் திறத்தைத் தெரிவித்தவாறாம். (2)
|