3712. இகத்திருந்த வண்ணம்எலாம் மிகத்திருந்த அருட்பேர்
இன்பவடி வம்சிறியேன் முன்புரிந்த தவத்தால்
சகத்திருந்தார் காணாதே சிறிதுகண்டு கொண்ட
தரம்நினைந்து பெரிதின்னும் தான்காண்பேம் என்றே
அகத்திருந்த எனைப்புறத்தே இழுத்துவிடுத் ததுதான்
ஆண்டவநின் அருட்செயலோ மருட்செயலோ அறியேன்
மகத்திருந்தார் என்அளவில் என்நினைப்பார் அந்தோ
மனம் அலைபாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
உரை: மன்றில் நடம் புரிகின்ற அருளரசே! மண்ணுலக வாழ்வில் என்பால் இருந்த இயல்புக ளெல்லாம் மிகவும் திருத்தமுறும்படி அருளுருவாகிய பேரின்ப வடிவத்தைச் சிறியோனாகிய யான் முன்னைப் பிறவிகளில் செய்த தவத்தால் மண்ணுலகத்து மக்கள் காணராகச் சிறிதே யான் கண்டு கொண்ட இயல்பினை நினைந்து இன்னும் மிக்க அளவில் காண்பேன் என்று எண்ணிக் கொண்டு மனையின்கண் ஒரு புறத்தே மூலையில் ஒடுங்கி யிருந்த என்னைப் புறத்தே பலரும் அறியக் கொணர்ந்து நிறுத்தியது ஆண்டவனாகிய நின் திருவருட் செயலோ, எனது மருட் செயலோ அறிகின்றிலேன்; ஞான நெறியில் இன்புறும் பெரியோர் என்னை நோக்கி என்ன நினைப்பார்களோ, என் மனம் அலமரல் உறுகின்றது. எ.று.
இகம் - இவ்வுலகவாழ்வு. உலக வாழ்வின்கண் நினைப்பனவும், மொழிவனவும், செய்வனவும் எல்லாம் மயக்கத்தால் குற்றம் கலந்தவையாதலால், அவை திருவருட் சிவக் காட்சியால் குற்றம் நீங்கித் தெளிவுறும் என்பது பற்றி, “இகத் திருந்த வண்ணமெலாம் மிகத்திருந்த” என்றும், தாம் கண்டு மகிழ்ந்த சிவக் காட்சியை, “அருட் பேரின்ப வடிவம்” என்றும், அதனைத் தாம் கண்டதற்கு ஏதுவாவது “முன்பு புரிந்த தவம்” என்றும், அதனைத் தாம் சிறிது போழ்து கண்டு பெற்ற இன்பம் ஆறாமையால், இன்னும் மிகவும் காண்போம் என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்ததை, “சிறிது கண்டு கொண்ட தரம் நினைந்து பெரிதின்னும் காண்பேம் என்று அகத்திருந்த” என்றும் உரைக்கின்றார். தாம் சிவக் காட்சி பெற்றதனை உலகினர் அறியார் என்பார், “சகத்திருந்தார் காணாதே கண்டு கொண்ட” என்று கூறுகின்றார். தாம் கண்ட காட்சி சிறிதாயினும் பெரிதும் காணலாம் என்ற வேட்கை எழுப்பியது பற்றி, “சிறிது கண்டு கொண்ட தரம் நினைந்து பெரிதின்னும் தான் காண்பேம்” என்று எண்ணமிடச் செய்தது என அறிக. சிவஞானத்தால் தாம் பெற்ற திருவருட் காட்சி, விரிந்த உலகிடைக் காணப் பெறாது இருந்த மனையின் ஒருபுறத்தே ஒடுங்கி யிருந்தால் காணலாம் என எண்ணி இருந்தமை புலப்பட, “அகத் திருந்த என்னை” எனவும், சிவ தரிசனம் பெற்றதனால் விளைந்த நலத்தை உலகவர் பலரும் அறிந்து கொண்டமை விளங்க, “புறத்தே இழுத்து விடுத்தது” எனவும், மூலையில் இருந்த தான் முற்றத்தில் வந்தமைக்குக் காரணம் திருவருட் செயலோ எனவும், தனது மருட்சி யுணர்வு காரணமாகவோ எனவும் கவல்கின்றாராதலின், “ஆண்டவ நின் அருட் செயலோ, மருட் செயலோ அறியேன்” எனவும் இயம்புகின்றார். மகம் - இன்பம். ஞான நெறிக்கண் நின்று சிவக் காட்சி பெற்று இன்புறும் பெருமக்கள் தன்னைப் பற்றி யாது நினைப்பார்களோ என்று வருந்துகின்றாராதலின், “மகத்திருந்தார் என்னளவில் என் நினைப்பார் அந்தோ மனம் அலை பாய்வது காண்” என்று உரைக்கின்றார்.
இதனால், சிவக் காட்சி சிறிது பெற்று அதனைப் பெரிது காண வேட்கை மிகுந்து ஒரு மூலையில் ஒடுங்கி யிருந்த தம்மைத் திருவருள் உலகறியச் செய்து விட்டதனால் சிவஞானிகள் என்ன நினைப்பார்களோ என வருந்துகின்றமை தெரிவித்தவாறாம். (3)
|