3713. கருங்களிறு போல்மதத்தால் கண்செருக்கி வீணே
காலம்எலாம் கழிக்கின்ற கடையர்கடைத் தலைவாய்
ஒருங்குசிறி யேன்தனைமுன் வலிந்தருளே வடிவாய்
உள்அமர்ந்தே உள்ளதனை உள்ளபடி உணர்த்திப்
பெருங்கருணை யால்அளித்த பேறதனை இன்னும்
பிறர்அறியா வகைபெரிதும் பெறுதும்என உள்ளே
மருங்கிருந்த எனைவெளியில் இழுத்துவிட்ட தென்னோ
மனம்அலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
உரை: மன்றில் நடம் புரிகின்ற அருளரசே; கரிய யானை போல் மதம் கொண்டு செருக்கிய பார்வை கொண்டு வாழ் நாளெல்லாம் வீணே கழிக்கின்ற கீழ்மக்கள் மனைக்குச் சென்று திரியும் சிறுமை யுடைய என்னை, என் முன் போந்து வலியப் பற்றி அருளே திருவுருவாய் என் உள்ளத்தின்கண் எழுந்தருளி உண்மை வடிவாகிய தன்னை உள்ளபடி யான் அறியக் காட்டிப் பெருங் கருணையினால் எனக்குத் திருவருள் ஞானப் பேற்றினை உலகவர் அறியா வகையில் “இன்னும் மிகவும் பெறுதல் வேண்டும்” என உள்ளத்தில் எண்ணி ஒரு மூலையில் கிடந்த என்னைப் பலரறிய வெளியில் இழுத்து விட்டதற்குக் காரணம் யாதோ என என் மனம் அலைகின்றது. எ.று.
மதங் கொண்ட யானை, நல்லது தீயது என நோக்காது எதிர்ப்பட்ட பொருள்களைப் புறக்கணித்து ஒழித் தழிப்பது போல, கீழ்மக்கள் தீயவற்றைச் செய்து காலத்தை வீண் போக்குகின்றார்கள் என்பது விளங்க, “கருங் களிறு போல் மதத்தால் கண் செருக்கி வீணே காலமெலாம் கழிக்கின்ற கடையர்” எனக் குறிக்கின்றார். கண் செருக்குதல் - செருக்கு மிகுதியால் நல்லதன் நன்மை காணாமை. கடைத்தலை - மனை முற்றம். கீழ்மக்கள் மனைகட்குச் சென்று தாம் வருந்தி யலைந்த நிலையை, “கடையர் கடைத்தலைவாய் ஒருங்கு சிறியேன்” என்றும், அலைந்து கொண்டிருந்த தனக்கு இறைவன் தானே வலிய வந்து அருள்வழி காட்டி உள்ளத்தில் எழுந்தருளித் திருவருள் ஞானம் அளித்த திறத்தை, “வலிந்தருளே வடிவாய் உள்ளமர்ந்தே உள்ளதனை உள்ளபடி உணர்த்திப் பெருங் கருணையால் அளித்த பேறு” என்றும், அதனை உலகவர் அறியாத படித் தான் பெரிதும் பெற வேண்டுமென உள்ளத்தே ஆசை மிகுந்து ஒடுங்கி யிருந்த நிலையை, “அதனை இன்னும் பிறர் அறியா வகை பெரிதும் பெறுதும் என உள்ளே மருங்கிருந்த எனை” என்றும், திருவருள் பெற்ற ஞான என உலகவர் போற்ற லுற்றது கண்டு, “வெளியில் இழுத்து விட்டது தென்னோ மனம் அலை பாய்வது காண். என்றும் வடலூர் வள்ளல் எடுத்துரைக்கின்றார்.
இதனால், கீழ்மக்கள் மனை தோறும் சென்று அலைந்து கொண்டிருந்த தமக்குத் திருவருள் ஞானக் காட்சி தந்து உலகவர் போற்ற வெளிப்படுத்தினமை நினைந்து வடலூர் வள்ளல் வருந்தியவாறாம். (4)
|