3714.

     நாடுகின்ற மறைகள்எலாம் நாம்அறியோம் என்று
          நாணிஉரைத் தலமரவே நல்லமணி மன்றில்
     ஆடுகின்ற சேவடிகண் டானந்தக் கடலில்
          ஆடும்அன்பர் போல்நமக்கும் அருள்கிடைத்த தெனினும்
     வீடுகின்ற பிறர்சிறிதும் அறியாமல் இருக்க
          வேண்டும்என இருந்தென்னை வெளியில்இழுத் திட்டு
     வாடுகின்ற வகைபுரிந்த விதியைநினைந் தையோ
          மனம்அலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.

உரை:

     மன்றில் நடம் புரிகின்ற அருளரசே! மெய்பொருளை நோக்குகின்ற மறைநூல்கள் யாவும் “பரம்பொருளை யாம் கண்டறியோம்” என்று வெட்கி ஓலமிட்டு வருந்தவும், நல்ல மணிகள் இழைக்கப் பெற்ற அம்பலத்தில் ஆடல் புரிகின்ற திருவடியைக் கண்டு ஆனந்தக் கடலில் மூழ்கித் திளைக்கும் மெய்யன்பர்கட்குப் போல் நமக்கும் திருவருள் ஞானம் கிடைத்தது எனினும், உலக நெறியில் வீழ்ந்து வருந்துகின்ற உலகவர் சிறிதும் அறியாமல் இருக்க வேண்டுமென மூலையில் ஒடுங்கி யிருந்த என்னை முற்றத்தில் இழுத்து விட்டு வருந்தும் வகை செய்த என் விதியை நினைந்து ஐயகோ மனம் கலக்க மடைகின்றது.

     நான்கு வேதங்களாலும் நுணுகி அறிந்து அறிய முடியாத நிலையில் உள்ளது பரம்பொருள் என்று சோர்ந்து நிற்கும் திறத்தை, “நாடுகின்ற மறைகளெல்லாம் நாம் அறியோம் என்று நாணி உரைத்து அலமரவே” என்று குறிக்கின்றார். வைதீக நூல்களில் வல்ல ஞானவான்களை “நாடுகின்ற மறைகள்” எனக் கூறுகின்றார். “வேதங்கள் ஐயா வென ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே” என மாணிக்கவாசகர் கூறுவது காண்க. வேத பாரகராகிய வைதீக ஞானிகளையும் இவ்வாறே, “வேதம் கடந்து தடுமாருகின்ற வஞ்ச வெளி” என்று பரஞ்சோதி முனிவர் கூறுவதும் காண்க. பெருஞானிகளால் நெடுங் காலமாக உயர்ந்தவை யென உச்சி மேல் வைத்துப் பாராட்டப் பெற்ற வேதங்கள் பரம்பொருளைக் காணா தொழிந்தமை அவற்றிற்கே இழுக்கானமையின், “நாணி உரைத்து அலமரவே” என நவில்கின்றார். வைதீக ஞானத்திற்கு எட்டாத பிரமமாகிய சிவ பரம்பொருள் கூத்தப் பெருமானாய் அம்பலத்தில் ஆடுகின்ற ஆடல் கண்டு சிவஞானிகள் பேரின்பம் அடைவது பற்றி அவர்களை, “நல்ல மணி மன்றில் ஆடுகின்ற சேவடி கண்டு ஆனந்தக் கடலில் ஆடும் அன்பர்” என்று சிறப்பிக்கின்றார். அவர்களைப் போலத் தமக்கும் திருவருள் ஞானம் கிடைத்தமை புலப்பட, “நமக்கும் அருள் கிடைத்தது” என்று நவில்கின்றார். வேதங்களால் எய்தப் பெறாத திருவருள் ஞானம் தமக்குக் கிடைத்தமை அறிந்தால் உலகவர் இகழ்வார்கள் என்று தாம் மூலையில் ஒடுங்கி யிருந்தமை விளங்க, “வீடுகின்ற பிறர் சிறிதும் அறியாமல் இருக்க வேண்டும் என இருந்த என்னை” என இயம்புகின்றார். உலகியல் மயக்கத்தில் ஆழ்ந்து தெளிவு இன்றிக் கிடப்பது தோன்ற உலக மக்களை, “வீடுகின்ற பிறர்” என விளம்புகின்றார். உலகியல் துழனியின் நீங்கி ஒருபுறத்தே ஒடுங்கி யிருந்து உள்ளக் காட்சியால் திருவருள் இன்பம் பெறுதல் முறையாதல் கருதி ஒடுங்கி யிருந்த தன்னை உலகவர் அறியச் செய்தது பற்றி, “வெளியில் இழுத்திட்டு” என்றும், அதனால் மனவொருமை சிதைந்து அலமருவது வெளிப்பட, “வாடுகின்ற விதியை நினைந்து ஐயோ மனம் அலை பாயவது காண்” என வடலூர் வள்ளல் நினைக்கின்றார்.

     இதனால், வைதீக ஞானிகள் பெறாத திருவருள் ஞான வின்பத்தை வடலூர் வள்ளல் பெற்று மகிழ்ந்தமை தெரிவித்தவாறாம்.

     (5)