3715. நதிகலந்த சடைஅசையத் திருமேனி விளங்க
நல்லதிருக் கூத்தாட வல்லதிரு அடிகள்
கதிகலந்து கொளச்சிறியேன் கருத்திடையே கலந்து
கள்ளம்அற உள்ளபடி காட்டிடக்கண் டின்னும்
பதிகலந்து கொளும்மட்டும் பிறர்அறியா திருக்கப்
பரிந்துள்ளே இருந்தஎன்னை வெளியில்இழுத் திட்டு
மதிகலந்து கலங்கவைத்த விதியைநினைந் தையோ
மனம்அலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
உரை: மன்றில் நடம் புரிகின்ற அருளரசே; கங்கை தங்கிய சடை முடி அசைந்தாட, திருமேனி ஒளி விளங்க, அம்பலத்தில் நல்ல திருக்கூத்தாடுகின்ற சிவபெருமானுடைய திருவடிகளைச் சிவகதி பெற்றுக் கலந்து கொள்ளுதற்கு, சிறுமையுடைய யான் மனத்திடையே கொண்ட கருத்திற்கேற்ப அப்பெருமான் உள்ளபடியே எனக்குக் காட்டக் கண்டு, இனியும் அப்பெருமானைக் கலந்து இன்புறுமளவும் பிறர் அறியாமல் இருக்க வேண்டுமென்று விருப்புற்று, மனைக்குள்ளே ஒடுங்கியிருந்த என்னை முற்றத்தில் வெளிப்பட நிறுத்தி அறிவு கலக்கமடையச் செய்த தீவினையை நினைந்து என் மனம் அலைகின்றது காண். எ.று.
அம்பலத்தில் திருக்கூத்தாடுகின்ற பொழுது சிவனுடைய முடியில் கங்கையைத் தாங்கிய சடை அசைந்தாடும் கோலத்தை, “நதி கலந்த சடை அசையத் திருமேனி விளங்க நல்ல திருக்கூத்தாட வல்ல திருவடிகள்” எனச் சிறப்பிக்கின்றார். சிவனுடைய திருவருள் கூத்தின்கண் உலகில் படைத்தல் முதலிய ஐவகைத் தொழிலும் நடைபெறுதலால், அவனுடைய திருக்கூத்தை “நல்ல திருக்கூத்து” என்று சிறப்பிக்கின்றார். இறைவன் ஞானத் திருக்கூத்தை மனக் கண்ணில் காணும் பேறுபெறக் கருவி கரணங்கள் எல்லாம் சிவகதிக்குரிய பதிகரணங்களாக மாற வேண்டுதலின், “கதி கலந்து கொளச் சிறியேன் கருத்திடையே கலந்து” என்றும், கூத்தாடும் திருவடிக் காட்சியால் மனத்தின்கண் படிந்து மறைந்திருக்கும் குற்றங்கள் நீங்குவது பற்றி, “கள்ளமற உள்ளபடி காட்டிட” என்றும் இயம்புகின்றார். “உள்ளமார்ந்த அடியார் தொழுதேத்த உகக்கும் அருள் தந்தெம் கள்ளமார்ந்து கழியப் பழி தீர்த்த கடவுள்” என ஞானசம்பந்தரும் (புகலூர்) கூறுவது காண்க. அருட் கூத்தைக் கண்டு எய்திய இன்பத்தை மேலும் எய்துதற்குச் சிவபோகப் பெருநிலையை அடைய வேண்டுதலின், அதனை “இன்னும் பதி கலந்து கொளும் மட்டும்” எனப் பகருகின்றார். உலகியல் ஆரவாரத்தின் நீங்கி ஒருபுறத்தே தனித்திருந்து ஒன்றிய சிந்தனையால் அப்பெருநிலை எய்தப் பெறுவதாகலின், “பிறர் அறியா திருக்கப் பரிந்துள்ளே இருந்த என்னை” எனவும், உலகியல் வாழ்க்கைச் சூழல் ஒன்றிய சிந்தனைக்கு இடமில்லாமல் அலைப்பது பற்றி, “வெளியில் இழுத்திட்டு மதி கலந்து கலங்க வைத்த விதியை நினைந்து ஐயோ மனம் அலை பாய்வது காண்” எனவும் நவில்கின்றார்.
இதனால், அம்பலத்தில் ஆடும் சிவன் திருவடிகள் மனத்தில் படிந்துள்ள கள்ளம் நீங்கத் தெளிவு நல்கிய திறம் உரைத்தவாறாம். (6)
|