3716. மஞ்சனைய குழலம்மை எங்கள்சிவ காம
வல்லிமகிழ் திருமேனி வண்ணமது சிறிேத
நஞ்சனைய கொடியேன்கண் டிடப்புரிந்த அருளை
நாடறியா வகைஇன்னும் நீடநினைத் திருந்ேதன்
அஞ்சனைய பிறர்எல்லாம் அறிந்துபல பேசி
அலர்தூற்ற அளியஎனை வெளியில் இழுத் திட்டு
வஞ்சனைசெய் திடவந்த விதியைநினைந் தையோ
மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
உரை: மன்றில் நடம் புரிகின்ற அருளரசே! கருமேகம் போன்ற கூந்தலையுடைய தாயாகிய சிவகாமவல்லி கண்டு மகிழ்கின்ற சிவத்தின் திருமேனி யழகை விடம்போன்ற கொடியவனாகிய யான் சிறிதே கண்டு இன்புற எனக்குப் புரிந்த திருவருளை நாட்டவர் அறியாதபடி ஓரிடத்தே ஒடுங்கி யிருந்து ஒன்றி நினைந்து பெரிதாக்கிக் கொள்ள எண்ணியிருந்தேனாக, ஐந்தாகிய கண் முதலிய பொறிகளைப் போன்ற நாட்டு மக்கள் எல்லாம் தெரிந்து தமக்குள்ளே பலப்பல பேசி அலர் தூற்ற அளிக்கத் தக்க என்னைப் புறத்தே இழுத்து வஞ்சனை செய்யுமாறு தாக்குகின்ற விதியை நினைந்து என் மனம் வருந்துகின்றது காண். எ.று.
சிவகாமவல்லி - உமாதேவி. தில்லையில் எழுந்தருளும் அவளைச் சிவகாமவல்லி எனப் போற்றுவது இயல்பு. அம்மையின் கூந்தல் கருங்கூந்தல். மழை மேகம் போல் திகழ்வது பற்றி, “மஞ்சனைய குழலம்மை” எனப் போற்றி மகிழ்கின்றார். கொடுமையுடைமை பற்றித் தம்மை, “நஞ்சனைய கொடியேன்” என இகழ்கின்றார். கொடியனாயினும், சிவனது திருமேனி கண்டு இன்புறச் செய்தது இறைவன் திருவருளாதலின் அது பற்றி, “கொடியேன் கண்டிடப் புரிந்த அருள்” எனப் புகல்கின்றார். அதனைப் பலகாலும் ஒருபுறத்தே ஒன்றி யிருந்து சிந்தித்தாலன்றி அத்திருவருளை மிகுதியும் பெற இயலாதாகலின், “இன்னும் நீட நினைத்திருந்தேன்” என உரைக்கின்றார். நாட்டவர் அறிந்தால் ஒன்றியிருந்து நினைக்கும் உயர்நிலை கைகூடாதாகலின், “நாடறியா வகை” என்று நவில்கின்றார். அஞ்சனைய பிறர் என்றவிடத்து, அஞ்சு என்றது கண் முதலிய பொறிகள் ஐந்தையுமாம். ஒன்று அறிந்ததை ஒன்றறியாமை கண் முதலிய பொறிகட்கு இயல்பாகலான் அறியாமை நிறைந்த உலக மக்களை, “அஞ்சனைய பிறர்” என்று உரைக்கின்றார். நன்கு அறியாமையால் அவரவரும் பலப்பலப் பேசிக் குறை கூறுவது புலப்பட, “பிறர் எல்லாம் அறிந்து பல பேசி அலர் தூற்ற” எனவும், அதனால் மனத்தின்கண் ஊக்கம் குன்றுதலின், “அளிய” எனவும், இதற்கெல்லாம் காரணம் யாதாகலாம் என எண்ணிய வடலூர் அடிகள், ஊழ்வினை யல்லது பிறிதில்லையெனக் கருதி, “வெளியில் இழுத்திட்டு வஞ்சனை செய்திட வந்த விதியை நினைந்து ஐயோ மனம் அலை பாய்வது காண்” எனவும் இயம்புகின்றார்.
இதனால், திருவருட் காட்சியைப் பெருக்கிக் கொள்ளுதற்கு ஒடுங்கியிருந்த தம்மை ஊரவர் பலப்பல பேசி அலர் தூற்றுவதை எடுத்துரைத்தவாறாம். (7)
|