3717. அரிபிரமர் உருத்திரரும் அறிந்துகொள மாட்டா
தலமரவும் ஈதென்ன அதிசயமோ மலத்தில்
புரிபுழுவில் இழிந்ேதனைப் பொருளாக்கி அருளாம்
பொருள் அளிக்கப் பெற்றனன்இப் புதுமைபிறர் அறியா
துரிமைபெற இருப்பன்என உள்இருந்த என்னை
உலகறிய வெளியில்இழுத் தலகில்விருத் தியினால்
வரிதலையிட் டாட்டுகின்ற விதியைநினைந் தையோ
மனம்அலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
உரை: மன்றில் நடம் புரிகின்ற அருளரசே! திருமால் பிரமன் உருத்திரன் முதலிய தேவர்கள் அறிந்து கொள்ள மாட்டாமல் வருந்தவும், மலத்திற் கிடந்துழலும் புழுப் போல் இழிந்தவனாகிய என்னை ஒரு பொருளாகக் கருதித் திருவருள் ஞானமாகிய மெய்ப்பொருளை நல்கப் பெற்றுள்ளேன்; இது என்ன அதிசயமோ அறியேன்; இப் புதுமையைப் பிறரறியாது எனக்கே உரிமையாகக் கொண்டிருத்தல் வேண்டுமென எண்ணி மனைக்குள் ஒடுங்கி யிருந்த என்னை, உலகவர் பலரும் அறிய வெளியில் இழுத்து விட்டு அளவில்லாத செயல் வகைகளால் தலையில் எழுத்திட்டு ஆட்டிப் படைக்கின்ற விதியை நினைந்து ஐயோ என் மனமானது அலைந்து வருந்துகின்றது காண். எ.று.
படைப்புக் கடவுளாகிய பிரமனும், காத்தற் கடவுளாகிய திருமாலும், அழித்தற் குரியவனாகிய உருத்திரனும் ஆகிய தேவர் மூவர்களும் தமது இயற்கை யறிவால் அறிந்து கொள்ள மாட்டாத நிலையில் பரசிவம் இருத்தலை எண்ணி வருந்துவது விளங்க, “அரி பரமர் உருத்திரரும் அறிந்து கொள மாட்டாது அலமரவும்” என்றும், பரசிவத்தை அறிதற்குரிய திருவருள் ஞானத்தைத் தன்னை ஒருபொருளாகக் கருதி உண்ணின்று நல்கிய திறத்தை எண்ணி வியக்கின்றாராதலால், “ஈதென்ன அதிசயமோ இழிந்தேனைப் பொருளாக்கி அருளாம் பொருள் அளிக்கப் பெற்றனன்” என்றும் இயம்புகின்றார். தமது இழிவைப் புலப்படுத்த மலத்திற் கடிந்து நெளியும் புழுவை உவமமாக்கி, “மலத்தில் புரிபுழுவில் இழிந்தேனை” என நவில்கின்றார். தேவதேவர்களாகிய திருமால் முதலியோர் பெறாத திருவருள் சானத்தைத் தாம் பெற்றது புதுமையாகத் தோன்றுதலின், “இப்புதுமை” எனவும், பெறற் கரியதாகிய இதனைத் தாம் பெற்றதைப் பிறர் அறியாமல் தமக்கே உரிய பொருளாகச் செய்து கொள்ளற்குப் புறத்தே யார்க்கும் புலப்படாமல் மனைக்குள்ளே ஒடுங்கி யிருந்த நிலைமையை எடுத்துரைப்பாராய், “பிறர் அறியாது உரிமை பெற இருப்பன் என உள்ளிருந்த என்னை” எனவும், பின்னர் அது பலரும் அறிந்து பாராட்டற் குரியதானது பற்றி, “என்னை உலகறிய வெளியில் இழுத்து ஆட்டுகின்ற விதியை நினைந்து மனம் அலை பாய்வது காண்” எனவும் உரைக்கின்றார். விதியைத் ‘தலையில் எழுத்து’ என உலகு வழங்குவது பற்றி, “வரி தலையில் ஆட்டுகின்ற விதி” எனக் கூறுகின்றார். வரி - எழுத்து. “பங்கயத்தோன் எழுதாப்படி வருமோ சலியாதிரு என் ஏழை நெஞ்சே” என்று பட்டினத்தாரும் உரைப்பது காண்க. தலை விதியால் நடைபெறுகின்ற செயல் வகைகள் எண்ணிறந்தனவாதலால் அவற்றை, “அலகில் விருத்தி” எனக் குறிக்கின்றார்.
இதனால், தேவர்களுக்கும் பெறற் கரிதாகிய திருவருள் ஞானத்தைப் பெற்ற நலத்தைக் குறிப்பால் தெரிவித்தவாறாம். (8)
|