3718.

     விழற்கிறைத்துக் களிக்கின்ற வீணர்களி சிறந்த
          வினைக்கொடியேம் பொருட்டாக விரும்பிஎழுந் தருளிக்
     கழற்கிசைந்த பொன் அடிநம் தலைமேலே அமைத்து
          கருணைசெயப் பெற்றனம்இக் கருணைநம்மை இன்னும்
     நிழற்கிசைத்த மேல்நிலையில் ஏற்றும்என மகிழ்ந்து
          நின்றஎன்னை வெளியில்இழுத் துலகவியா பார
     வழக்கில்வளைத் தலைக்கவந்த விதியைநினைந் தையோ
          மனம்அலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.

உரை:

     மன்றில் நடம் புரிகின்ற அருளரசே! பயனில்லாத விழல் என்னும் புல்லுக்கு நீரிறைத்து வீண் படுகின்ற கீழ்மக்களில் மிக்க வினையால் கொடியவனாகிய என் பொருட்டு விருப்புற்றுப் போந்து கழல் என்னும் காலணிக்குப் பொருத்தமான அழகிய தன் திருவடியை நம் தலைமேல் வைத்து அருள் செய்யப் பெற்றோம்; இத்திருவருள் நம்மை இன்னும் மேல் நிலையில் உயர்த்தும் என எண்ணி மகிழ்ந்து ஒருபுறத்தே ஒடுங்கியிருந்த என்னை வெளிப்படுத்தி உலகியல் வாழ்வாகிய வழக்கில் நிறுத்தி என்னை அலைக்கின்ற தலைவிதியை நினைந்து என் மனம் வருந்துகின்றது காண். எ.று.

     பயனில்லாத செயல்களைச் செய்து கெடுகின்ற கீழ்மக்களை, “விழற்கு இறைத்துக் களிக்கின்ற வீணர்” என்றும், அவர்கள் எல்லாரினும் மிகப் பெரிய கீழ்மகன் எனத் தம்மைக் குறிப்பாராய், “வீணர்களிற் சிறந்த வினைக் கொடியேம்” என்றும் கூறுகின்றார். கொடியேம் என்பது ஒருமை சுட்டிய தன்மைப் பன்மை. விழலுக்கு இறைத்துப் பயன்படாது ஒழிகின்ற வீணர் பலரினும் தாம் பல்வேறு பயனில் வினைகளால் கொடுமை யுடையவன் எனத் தம்மைக் குறிப்பாராய், “வினைக் கொடியேம்” என விளம்புகின்றார். வினைக் கொடியேன் - செய்வினைகளால் கொடுமை மிக்கவன். கழல் - வீரம் மிக்க பெருமக்கள் பண்டை நாளில் காலில் அணிந்து கொண்ட தண்டை என்னும் அணி வகையாகும். அதனால் இதனை ‘வீரதண்டை’ என்று கூறுப. கழலணிக் கேற்ற திருவடி என்றற்கு, “கழற் கிசைந்த பொன்னடி” என்கின்றார். ஞான ஆசிரியன் தன்னை அடைந்த மாணவர்க்கு அவர் தலைமேல் தம் திருவடியை வைத்துச் சிறப்பித்து ஞானம் நல்கும் மரபு பற்றி, “பொன்னடி நம் தலை மேலே அமைத்துக் கருணை செயப் பெற்றனம்” என்று கூறுகின்றார். கருணை என்பது இங்கே சிவஞானத்தின் மேற்று. சிவஞானத்தால் சிவானந்தத்தை நுகரும் நிலையினைத் திருவடி நீழல் என்பது பற்றி அதனை, “நிழற் கிசைத்த மேல்நிலை” என்று சிறப்பிக்கின்றார். ஈண்டு நிழல் என்பது இன்பநிலை மேற்று. உலகியல் வாழ்வில் சிக்குண்டு வருந்தும் திறத்தை, “உலக வியாபார வழக்கு” என்றும், அவ் வழக்கில் அகப்பட்டு வருந்தும் திறத்தை, “வழக்கில் வளைத்தலைக்க வந்த விதி” என்றும் ஓதுகின்றார்.

     இதனால், இறைவன் திருவடி ஞானம் பெற்ற திறத்தை வடலூர் வள்ளல் தெரிவித்தவாறாம்.

     (9)