3722. விஞ்சு பொன்அணி அம்பலத்
தருள்நடம் விளைத்துயிர்க் குயிராகி
எஞ்சு றாதபேர் இன்பருள்
கின்றஎன் இறைவநின் அருள்இன்றி
அஞ்சும் நாயினேன் விண்ணப்பம்
திருச்செவி அமைத்தருள் செயல்வேண்டும்
துஞ்சும் இவ்வுடல் இம்மையே
துஞ்சிடாச் சுகஉடல் கொளும்ஆறே.
உரை: உயர்ந்த பொன்னா லியன்ற அழகிய திருவம்பலத்தில் அருட் கூத்தை ஆடி உயிர்கட் குயிராய்க் குன்றாத பேரின்பத்தைத் தருகின்ற என்னுடைய இறைவனே! நினது திருவருள் பெறாது அஞ்சுகின்ற நாய் போன்ற எனது விண்ணப்பத்தை நின்னுடைய திருச்செவிகளில் ஏற்று இறந்து படும் இயல்புடைய இவ்வுடம்பு இம்மையில் இறவாத ஞான வுடம்பு கொள்ளும் திறத்தை எனக்கு அருள் செய்ய வேண்டுகிறேன். எ.று.
விஞ்சுதல் - உயர்தல். செம்பு வெள்ளி இரும்பு முதலிய உலோக வகைகள் எல்லாவற்றிலும் உயர்ந்ததாகலின், “விஞ்சு பொன்” என்றும், பொன்னா லியன்று அழகு திகழ விளங்குவது பற்றி, “பொன்னணி அம்பலம்” என்றும், அப்பொன்னப்லத்தில் ஆடல் புரிவது பற்றி, “அருள் நடம் விளைத்து” என்றும் உரைக்கின்றார். இறைவன் உயிர்க் குயிராய் நின்று உணர்வு அருள்வதும், அதுவே வாயிலாக உயிர்கட்கு இன்பம் நல்குவதும் இயல்பாதல் கண்டு, “உயிர்க்குயிராகி எஞ்சுறாத பேரின்பு அருள்கின்ற இறைவன்” என்று ஏத்துகின்றார். எஞ்சுதல் - குறைதல். இன்பம் இன்பு என வந்தது. இறைவன் திருவருள் உயிர்க்குப் பாதுகாவலாதலின், “அருளின்றி அஞ்சும் நாயினேன்” எனக் கூறுகின்றார். அருளொளி இல்லையாயின் மலவிருள் படர்ந்து உயிர்கட்குத் துன்பம் விளைவிக்குமாதலால் அருளின்மை பற்றி, “அஞ்சும் தன்மை யுடையனாயினேன்” என்பது குறிப்பு. துஞ்சுதல் - இறத்தல். இம்மை - இவ்வுலக வாழ்வு. துஞ்சிடாச் சுக உடல் - இறவாத ஞான உடம்பு. “இனிப் பிறவாத தன்மை வந்தெய்தினேன்” (பாண்டி) என்று நம்பியாரூரர் கூறுவது காண்க. பெற்றிருக்கும் உடம்பு கொண்டே இறவாத் தன்மையுடைய பெருமை சான்ற நிலைமையை எய்தி யுள்ளேன் என நம்பியாரூரர் கூறுவது வடலூர் வள்ளலது விண்ணப்பத்திற்கு ஆதரவு தருவது காண்க. (3)
|