3723.

     ஓங்கு பொன்அணி அம்பலத்
          தருள்நடம் உயிர்க்கெலாம் ஒளிவண்ணப்
     பாங்கு மேவநின் றாடல்செய்
          இறைவநின் பதமலர் பணிந்ே­தத்தாத்
     தீங்கு நாயினேன் விண்ணப்பம்
          திருச்செவி சேர்த்தருள் செயல்வேண்டும்
     ஈங்கு வீழுடல் இம்மையே
          வீழ்ந்திடா இயலுடல் உறும்ஆறே.

உரை:

     உயர்ந்த பொன்னா லியன்று திருவம்பலத்தின்கண் நின்று உயிர்கட் கெல்லாம் ஞானவொளி பெறும் தன்மை பொருந்துமாறு ஆடல் புரிகின்ற இறைவனே! உன்னுடைய திருவடித் தாமரைகளைப் பணிந்து ஏத்தாத குற்றம் புரியும் நாயினேனுடைய விண்ணப்பத்தைத் திருச்செவிகளில் ஏற்று இவ்வுலகில் இறந்து விழும் எனது உடல் இப்பிறப்பிலேயே வீழ்ந் தொழியாத ஞான உடம்பாகுமாறு அருள் புரிய வேண்டுகிறேன். எ. று.

     அம்பலத்தில் இறைவன் ஆடுகின்ற திருக்கூத்து உயிர்கட்கு மலப்பிணி நீங்குதற்காகாச் செய்யும் குறிப்புடையதாகலின், “அருள் நடம்” என அதனைச் சிறப்பிக்கின்றார். உயிர்கள் அனைத்தும் ஆணவம் முதலிய மலங்களின் பிணிப்பகன்று ஞானவொளி பெறுதல் பொருட்டு ஆடப் பெறுவதாகலின், “உயிர்க்கெலாம் ஒளி வண்ணப் பாங்கு மேவ நின்றாடல் செய் இறைவ” எனப் பகர்கின்றார். இறைவன் திருவடியை ஏத்தாமை குற்றமாகலின், “பதமலர் பணிந் தேத்தாத் தீங்கு நாயினேன்” எனத் தம்மை இடித்துரைக்கின்றார். ஈங்கு - இவ்வுலகு. வீழ்தல் - இறத்தல். இயலுடல் - ஞான வுடம்பு.

     (4)