3724.

     இலங்கு பொன்னணிப் பொதுநடம்
          புரிகின்ற இறைவஇவ் வுலகெல்லாம்
     துலங்கும் வண்ணநின் றருளுநின்
          திருவடித் துணைதுணை என்னாமல்
     கலங்கு நாயினேன் விண்ணப்பம்
          திருச்செவி கலந்தருள் செயல்வேண்டும்
     அலங்கும் இவ்வுடல் இம்மையே
          அழிவுறா அருள்உடல் உறும்ஆறே.

உரை:

     ஒளி விளங்குகின்ற பொன்னால் இயன்ற அழகிய அம்பலத்தின்கண் திருக்கூத்தாடுகின்ற இறைவனே! இவ்வுலகம் முற்றும் இன்பவொளி பெற்றுத் திகழும் வண்ணம் அருள் புரிகின்ற நினது திருவடி இரண்டுமே உயிர்கட்குத் துணையாகும் என்று எண்ணாமல், மனம் கலங்குகின்ற நாயினேனுடைய விண்ணப்பத்தைத் திருச்செவிகளில் ஏற்று அசைவுற்று வீழும் இவ்வுடம்பு இம்மையிலேயே அழிந்து கெடுவதின்றி அருளொளி நிறைந்த உடம்பாகுமாறு அருள் செய்ய வேண்டுகிறேன். எ.று.

     இலங்கு பொன் - ஒளி விளங்குகின்ற பொன். இதனாலேயே திருவம்பலம் “பொன்னம்பலம்” எனப் புகழப்படுகிறது என அறியலாம். திருவம்பலத்தில் இறைவன் நடம் புரிவது உலகுயிர்கள் அனைத்தும் திருவருள் ஞானவொளி பெற்று இன்புற வேண்டுமென்ற கருத்துப்பற்றியது என்பார், “இவ்வுலகெல்லாம் துலங்கும் வண்ணம் நின்று அருளும் நின் திருவடி” எனத் தெரிவிக்கின்றார். திருவடித் துணை - இரண்டாகிய திருவடி. இறைவன் திருவடியே நமக்குப் பாதுகாப்பாவது என்று எண்ணிய வழி மனம் திண்ணியதாதலால், அதனை எண்ணாமல் அடுக்கி வரும் துன்பங்களால் அலமரும் தன்மை தோன்ற, “துணை என்னாமல் கலங்கு நாயினேன்” என்று தன்னைக் குறிக்கின்றார். அலங்குதல் - அசைதல்; ஈண்டு அசைந்து இறத்தல் என்ற பொருள் தோன்ற நின்றது. திருவருள் நிறைந்த ஞான வுடம்பு அழியாத் தன்மை யுடையது என்றற்கு, “அழிவுறா அருள் உடல்” என அறிவிக்கின்றார்.

     (5)