3725. சிறந்த பொன்அணித் திருச்சிற்றம்
பலத்திலே திருநடம் புரிகின்ற
அறந்த வாதசே வடிமலர்
முடிமிசை அணிந்தக மகிழ்ந்ேதத்த
மறந்த நாயினேன் விண்ணப்பம்
திருச்செவி மடுத்தருள் செயல்வேண்டும்
பிறந்த இவ்வுடல் இம்மையே
அழிவுறாப் பெருநலம் பெறும் ஆறே.
உரை: சிறந்த பொன்னாலாகிய அழகிய திருச்சிற்றம்பலத்தின்கண் திருக்கூத் தியற்றுகின்ற அறம் பிழையாத சேவடிகளாகிய தாமரையை முடியிற் சூடி மனம் மகிழ்ந்து போற்றுதற்கு மறந் தொழிந்த நாயினேனுடைய விண்ணப்பத்தைத் திருச்செவிகளில் ஏற்று இவ்வுலகில் பிறந்த இவ்வுடல் இப்பிறப்பிலேயே அழியாப் பெருநலம் உடையதாகும் நெறியை அடியேனுக்கு அருளிச் செய்ய வேண்டுகிறேன். எ.று.
மாற்றுக் குறையாது உயர்ந்த பொன்னா லியன்று அழகியதாகிய திருச்சிற்றம்பலம் என்றற்கு, “சிறந்த பொன்னணித் திருச்சிற்றம்பலம்” என்றும், அந்த அம்பலத்தில் நிகழ்கின்ற நடனம் உலகில் அறநெறி பிறழாதவாறு காப்பது என்ற குறிப்புத் தோன்ற, “திருநடம் புரிகின்ற அறம் தவாத சேவடி” என்றும் கூறுகின்றார். திருவடியில் பணிகின்ற போது அத்திருவடித் தாமரை பணிவார் தலைமேல் பொருந்தி மலர் சூடுவது போல இருத்தலின், “முடிமிசை அணிந்து” என்றும், பணிதலால் எய்தும் இன்பத்தை “அகம் மகிழ்ந்து” என்றும் குறிப்பிட்டு, அதனைச் செய்யா தொழிந்த தமது குறையைப் புலப்படுத்த, “ஏத்த மறந்த நாயினேன்” என்றும் கூறுகின்றார். பிறந்த உடம்பு இறந்து அழியாவாறு அருளொளி நிறைந்த ஞான உடம்பாதல் வேண்டுமென விரும்புகின்றாராதலின், “பிறந்த இவ்வுடல் இம்மையே அழிவுறாப் பெருநலம் பெறுமாறு அருள் செயல் வேண்டும்” என்று கூறுகின்றார். (6)
|