3726. விளங்கு பொன்அணிப் பொதுநடம்
புரிகின்ற விரைமலர்த் திருத்தாளை
உளங்கொள் அன்பர்தம் உளங்கொளும்
இறைவநின் ஒப்பிலாப் பெருந்தன்மை
களங்கொள் நாயினேன் விண்ணப்பம்
திருச்செவி கலந்தருள் செயல்வேண்டும்
துளங்கும் இவ்வுடல் இம்மையே
அழிவுறாத் தொல்லுடல் உறும்ஆறே.
உரை: விளங்குகின்ற பொன்னா வியன்ற அழகிய அம்பலத்தில் நடம் புரிகின்ற மணம் பொருந்திய திருவடிகளை மனத்திற் கொண்டு உறையும் மெய்யன்பர்களின் உள்ளத்திற் கோயிற் கொண்டு எழுந்தருளும் இறைவனே! உன்னுடைய ஒப்பற்ற பெருந்தன்மையை எண்ணாது கலங்கமுறும் நாயினேனுடைய விண்ணப்பத்தை அசைவுற்றுச் சோர்ந்து கெடும் இவ்வுடம்பு இப்பிறப்பிலேயே அழிவு எய்தாத பண்டைய உடலைப் பெறுமாறு திருச்செவியில் ஏற்று அருள் செய்ய வேண்டுகிறேன். எ.று.
தூய பொன்னுக்கு இயல்பிலேயே ஒளி யுண்டாதலால், “விளங்கு பொன்” எனச் சிறப்பிக்கின்றார். பொற் சபையில் திருக்கூத்தாடுகின்ற சிவனுடைய திருவடிகள் ஞான மணம் கமழ்ந்து மலர் போலும் மென்மையவாய் இருத்தல் பற்றி, “நடம் புரிகின்ற விரை மலர்த் திருத்தாள்” எனப் புகழ்கின்றார். அத்திருவடிகளை எக்காலத்தும் இடையறாது நினைந்த வண்ணம் இருத்தல் பற்றிச் சிவஞானச் செல்வர்களை, “திருத்தாளை உளங்கொள் அன்பர்” என்று உரைக்கின்றார். தன்னை நினைக்கும் அன்பர்கள் உள்ளத்தையே தனக்குரிய இடமாகக் கருதி இறைவன்” உறைகின்றான் என்பது பற்றி, “அன்பர்தம் உளம் கொளும் இறைவ” என இயம்புகின்றார். “பனைக்கை மும்மத வேழம் உரித்தவன் நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டுளான்” என்று திருநாவுக்கரசரும் உரைப்பது காண்க. இறைவனது ஒப்பிலாப் பெருந் தன்மையை நினைவிற் கொள்ளாது பயனில்லாத நினைவுகட்கு இடமாக்கும் சிறுமை பற்றி, “களங் கொள் நாயினேன்” என வடலூர் வள்ளல் நம்மைக் குறிக்கின்றார். முதுமைக்கண் தளர்ச்சியும் சோர்வுமுற்று அசைந்து கெடுதலின் மக்களுடம்பை, “துளங்கும் இவ்வுடல்” எனச் சுட்டிக் காட்டுகின்றார். துளங்குதல் - தளர்ச்சியால் அசைதல். சகல நிலையில் உடம்பொடு கூடுமுன் உணர்வு வடிவாய் இருத்தல் பற்றித் “தொல்லுடல்” எனக் குறிக்கின்றார். உணர்வே வடிவான உடம்பிற்கு அழிவில்லாமையால், “அழிவுறாத் தொல்லுடல்” எனக் கூறுகின்றார். கேவலத்தில் மலவிருள் கலந்து மூடப்பட்டிருப்பினும் உண்மை நிலை யுணர்வு வடிவமாதல் தோன்ற, “தொல்லுடல்” என வடலூர் வள்ளல் உரைப்பது குறிக்கத் தக்கது. (7)
|