3727.

     வாய்ந்த பொன்அணிப் பொதுநடம்
          புரிகின்ற வள்ளலே மறைஎல்லாம்
     ஆய்ந்தும் இன்னஎன் றறிந்திலா
          நின்திரு அடிமலர் பணியாமல்
     சாய்ந்த நாயினேன் விண்ணப்பம்
          திருச்செவி தரித்தருள் செயல்வேண்டும்
     ஏய்ந்த இவ்வுடல் இம்மையே
          திருவருள் இயல்உடல் உறும்ஆறே.

உரை:

     மாற்றில்லாத பொன்னாலாகிய அழகிய அம்பலத்தில் திருக்கூத் தாடுகின்ற வள்ளலாகிய சிவபெருமானே! வேதங்கள் எல்லாம் பலகாலும் ஓதி ஆராய்ந்தும் இத்தன்மையை உடையவை என்று அறிய மாட்டா தொழிந்த உன்னுடைய திருவடித் தாமரைகளைப் பணிந்து போற்றாமல் மெலிந்த நாயினேனுடைய விண்ணப்பத்தைத் திருச்செவிகளில் ஏற்று எனக்குப் பொருந்திய இவ்வுடம்பு இப்பிறப்பிலேயே திருவருள் ஞானவொளி கலந்த உடம்பாகுமாறு அருள்புரிதல் வேண்டும். எ.று.

     வாய்ந்த பொன் - மாற்றுயர்ந்த பொன். “தாவில் நன்பொன்” என்று சங்கச் சான்றோர் கூறுவதும் இதனையே யாகும். வேண்டுவார் வேண்டுவதை ஈகின்ற பெருமானாதலின் சிவபெருமானை “வள்ளல்” என்று புகல்கின்றார். “வேதங்கள் ஐயா வென ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியன்” என்று மணிவாசகர் முதலிய பெருமக்கள் திருவருளால் அறிந்துரைத்தலால், “மறை எல்லாம் ஆய்ந்தும் இன்ன வென்று அறிந்திலா நின் திருவடி” என்று உரைக்கின்றார். சிவனுடைய திருவடிகளைப் பணிந்து போற்றிப் பரவாமல் உலகியற் செல்வர்களைப் பலகாலும் போற்றி மனம் சோர்ந்தமை புலப்பட, “திருவடி மலர் பணியாமல் சாய்ந்த நாயினேன்” எனத் தம்மைக் கூறுகின்றார். சாய்தல் - மெலிதல். தமக் கமைந்த உடம்பை “ஏய்ந்த இவ்வுடல்” எனக் கூறுகின்றார். திருவருள் ஞானத்தால் எய்தும் ஞான வுடம்பைத் “திருவருள் இயலுடல்” எனக் குறிக்கின்றார்.

     (8)