3728. மாற்றி லாதபொன் அம்பலத்
தருள்நடம் வயங்கநின் றொளிர்கின்ற
பேற்றில் ஆருயிர்க் கின்பருள்
இறைவநின் பெய்கழற் கணிமாலை
சாற்றிட டாதஎன் விண்ணப்பம்
திருச்செவி தரித்தருள் செயல்வேண்டும்
காற்றில் ஆகிய இவ்வுடல்
இம்மையே கதியுடல் உறும்ஆறே.
உரை: மாற்றுக் காண முடியாத பொன் வேய்ந்த அம்பலத்தில் அருட் கூத்து விளங்க நின்றாடுகின்ற ஆட்டத்தால் நிறைந்த உயிர்கட்கெல்லாம் பேரின்பத்தை நல்குகின்ற இறைவனே! நினது கழலணிந்த திருவடிகட்கு மாலை புனைந்து வழிபடாத எனது விண்ணப்பத்தைத் திருச்செவிகளில் ஏற்றுக் காற்றாலாகிய எனது இவ்வுடம்பு இப்பிறப்பிலேயே சிவகதிக்குரிய ஞான உடம்பாகுமாறு அருள் புரிய வேண்டுகிறேன். எ.று.
ஒப்பற்ற பசும்பொன்னால் வேயப் பட்டதாகலின் பொன்னம்பலத்தை, “மாற்றில்லாத பொன்னம்பலம்” என விளக்குகின்றார். அம்பலத்தில் இறைவன் நிகழ்த்துகின்ற திருக்கூத்து உயிர் வகைகள் அத்தனையும் மலமாய கன்மங்களின் நீங்கிப் பேரின்பம் பெறுவது குறித்ததாம் என்ற பொருள் மொழியின் உண்மை புலப்பட, “அருள் நடம் வயங்க நின்று ஒளிர்கின்ற பேற்றில் ஆருயிர்க்கு இன்பருள் இறைவ” என்று உரைக்கின்றார். திருக்கூத்து உயிர்கட் கெல்லாம் அருட் செல்வமாதல் பற்றி, “நடம் வயங்க நின்றொளிர்கின்ற பேறு” என்று கூறுகின்றார். உயிர் வகைகள் அத்தனையும் முடிவில் சிவப் பேறு பெறுவது திருக்கூத்தின் கருத்து என்பது இதனால் விளக்கப் பெறுவது காண்க. திருவடியில் அணியப்படுவது பற்றிப் “பெய் கழல்” என்கின்றார். கழல் ஈண்டு ஆகு பெயர். பூமாலை அணிந்து திருவடியைப் பரவுவது கடமையாதலின் அதனைச் செய்யாமை தோன்ற, “அணிமாலை சாற்றிடாத என் விண்ணப்பம்” எனக் கூறுகின்றார். தச வாயுக்களின் இயக்கத்தால் இயங்குவது பற்றி உடம்பை, “காற்றிலாகிய இவ்வுடல்” எனக் குறிக்கின்றார். தச வாயுக்களாவன; “ஒப்பார், பிராணன், அபானன், உதானனுடன் தப்பாவியானன் சமானனே - இப்பாலும் நாகன், தனஞ்சயன், கூர்மன், கிருகரன், தீதிலாத் தேவ தத்தனே” (சிலப். அடி. நலமே. கோள்) என்பதனா லறிக. (9)
|