3729.

     தீட்டு பொன்அணி அம்பலத்
          தருள்நடம் செய்துயிர்த் திரட்கின்பம்
     காட்டு கின்றதோர் கருணையங்
          கடவுள்நின் கழலிணை கருதாே­த
     நீட்டு கின்றஎன் விண்ணப்பம்
          திருச்செவி நேர்ந்தருள் செயல்வேண்டும்
     வாட்டும் இவ்வுடல் இம்மையே
          அழிவுறா வளமடைந் திடும்ஆறே.

உரை:

     மெருகிடப்படுகின்ற பொன் வேய்ந்த அழகிய திருச்சிற்றம்பலத்தின்கண் அருட் கூத்தினை ஆடி உயிர் வகை எல்லாவற்றிற்கும் இன்பம் அருளுகின்ற ஒப்பற்ற கருணைக் கடவுளாகிய நின்னுடைய கழலணிந்த திருவடிகளை எண்ணாமல், பல பொருள்களில் எண்ணத்தைச் செலுத்துகின்ற என்னுடைய விண்ணப்பத்தைத் திருச்செவிகளில் ஏற்றுப் பிணி வகைகளால் வருத்துகின்ற இவ்வுடம்பு இப்பிறப்பில் சாவாத வளமுடைய தாகுமாறு அருள் புரிய வேண்டுகிறேன். எ.று.

     ஒளியும் அழகும் திகழ மெருகிடப் படுதலின் பொன்னம்பலத்திலுள்ள பொன்னை, “தீட்டு பொன்” எனச் சிறப்பிக்கின்றார். உயிர் வகைகள் அனைத்தும் முடிவில் பிறவாப் பேறு பெற அருள் புரியும் கருத்தினால் அம்பலத்தின்கண் இறைவன் கருணை கூர்ந்து திருக்கூத் தாடுகின்றான் என்பது பற்றி, “அருள் நடம் செய்து உயிர்த் திரட்டு இன்பம் காட்டுகின்றதோர் கருணையங் கடவுள்” என்றும், அவருடைய திருவடிகளில் ஒலிக்கும் கழல் அணியப் பட்டிருப்பது பற்றி, “கழலிணை” என்றும், உயிர்கட்குப் பெருந் துணையாய் உய்தி நல்கும் சிறப்புடைமை பற்றி அதனையே நினைந்து போற்றிப் பரவாமல் உலகியல் பொருள்களில் ஆசை பெருகும் தன்மை தன்பால் உள்ளமை புலப்பட, “கழலிணை கருதாே­த நீட்டுகின்ற என் விண்ணப்பம்” என்றும் உரைக்கின்றார். நீட்டுதல் - விரிவாகக் கூறுதல். பசி, பிணி, மூப்புக்களால் வருத்தம் தருவது பற்றித் தமது உடம்பை, “வாட்டும் இவ்வுடல்” எனவும், இது அழியாது ஞானஉடம்பாதல் வேண்டும் என்ற ஆர்வமுடைமை விளங்க, “இம்மையே அழிவுறா வளம் அடைந்திடுமாறே” எனவும் வேண்டுகின்றார். மறுமையில் பெறலா மெனக் கைவிடாமல் இப்பிறவியிலேயே அழியா ஞான உடம்பை அளித்தருளுக என்றற்கு, “இம்மையே அழிவுறா வளம் அடைந்திடுமாறு” எனக் குறிக்கின்றார்.

     (10)