3731.

     முன்னவா திபர்க்கு முன்னவா வேத
          முடிமுடி மொழிகின்ற முதல்வா
     பின்னவா திபர்க்குப் பின்னவா எவர்க்கும்
          பெரியவா பெரியவர் மதிக்கும்
     சின்னவா சிறந்த சின்னவா ஞான
          சிதம்பர வெளியிலே நடிக்கும்
     மன்னவா அமுதல்ம அன்னவா எல்லாம்
          வல்லவா நல்லவாழ் வருளே.

உரை:

     மக்கள் தேவர் முதலிய எல்லோர்க்கும் முன்னவனே; மண்ணகத் தலைவர்களான வேந்தர்களான வேந்தர்கள் எல்லோர்க்கும் முன்னவனே; வேத வேதாந்தங்களின் முடி பொருளாகப் பேசப்படுகின்ற முதல்வனே; பின் வந்தவர் அனைவர்க்கும் அவர்களுடைய தலைவர்க்கும் பிற்பட்டவனே; எல்லோர்க்கும் பெரியவனே; அறிவாற்றலில் பெரியராயினார் மதிக்கத் தக்க சிறப்புடையவனே; சிறந்த ஞானச் சின்னங்களை உடையவனே; சிதம்பரப் பரவெளியிலே நடிக்கின்ற மன்னவனே; அமுதம் போன்றவனே; எல்லாம் வல்லவனே; எனக்கு நல்ல வாழ்வினை அருளுக. எ.று.

     முன்னவ - அதிபர்க்கு முன்னவ என அமைத்துக் கொள்க. முன்னவ அதிபார்க்கு என்பது முன்னவாதிபர்க்கு என வந்தது. அதிபர்க்கு முன்னவா என்பது மண்ணுலகம் விண்ணுலகம் ஆகிய எல்லா வுலகங்களிலும் ஆட்சி புரிகின்ற வேந்தன் எல்லார்க்கும் முன்னவன் என்பது தோன்ற நிற்கின்றது. “முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம் பொருளே, பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே” என்ற திருவாசகம் இங்கே நினைக்கப்படுவது காண்க. வேத முடி - வேதாந்தம். இரண்டாவதாக நிற்கும் முடி - முடிபொருள் என்னும் பொருண்மை யுடையது. பின்னவாதிபர் - காலத்தால் பின் தோன்றிய வேந்தர். வேந்தர்க்கும் பிறர்க்கும் பின் தோன்றியவனே என்பது பட நிற்கின்றது. இக் கருத்துப் பற்றியே மணிவாசகப் பெருமான் “பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே” என உரைத்தருளுகின்றார். மன்னவருள்ளும் விண்ணவருள்ளும் சிறந்து நிற்கும் எல்லார்க்கும் பெரியவன் என்பது பற்றிச் சிவபெருமானை, “எவர்க்கும் பெரியவா” என உரைக்கின்றார். சின்னம் -சிறப்பு; அடையாளமுமாம். அறிவாற்றலால் பெரியராயினோர் நன்கு மதிக்கின்ற அடையாளங்களை உடையவனாதல் பற்றி, “பெரியவர் மதிக்கும் சின்னவா” எனச் சிறப்பிக்கின்றார். சிறந்த ஞானச் சின்னங்களை உடையவன் என்பது விளங்க, “சிறந்த ஞானச் சின்னவா” எனத் தெரிவிக்கின்றார். ஞானச் சின்னமாவது மோன முத்திரை உடையவனாய் விளங்குதல். சிதம்பர வெளி - ஞானாகாசமாகிய ஞானவொளி. அதன் கண் நின்று ஞான நடனம் புரிவது பற்றி, “சிதம்பர வெளியிலே நடிக்கும் மன்னவா” என உரைக்கின்றார். சித் - ஞானம்; அம்பரம் - ஆகாசம்; இது சிதாகாசம் எனவும் வழங்கும். வெளி - பரமாகாசமாகிய பரஞான நிலையம். எப்பொழுதும் நின்று நடிக்கும் இயல்பு பற்றி, “நடிக்கும் மன்னவா” என்று கூறுகின்றார். மன்னவன் - நிலை பெற்றவன். நினைப்பார் நினைவின் கண் நினைக்கும் தோறும் இன்பம் தருவது பற்றி, “அமுதம் அன்னவா” எனப் புகலுகின்றார். எல்லாம் வல்ல பெருமானாதலால் சிவனை, “எல்லாம் வல்லவா” எனச் சிறப்பிக்கின்றார். இன்ப துன்பங்கள் விரவித் தெளிவும் மயக்கமும் தந்து அலைத்தலால் உலகியல் வாழ்வை விலக்கி, இன்பமும் தெளிவுமே எக்காலத்தும் நிலவும் சிவஞான வாழ்வு தருக என்பாராய், “நல்ல வாழ்வு அருள்” என விண்ணப்பிக்கின்றார்.

     (2)