3732.

     விடையவா தனைதீர் விடையவா சுத்த
          வித்தைமுன் சிவவரை கடந்த
     நடையவா ஞான நடையவா இன்ப
          நடம்புரிந் துயிர்க்கெலாம் உதவும்
     கொடையவா ஓவாக் கொடையவா எனையாட்
          கொண்டெனுள் அமர்ந்தரு ளிய என்
     உடையவா எல்லாம் உடையவா உணர்ந்தோர்க்
          குரியவா பெரியவாழ் வருளே.

உரை:

     பொறி வாயிலாகச் செல்லுகின்ற ஆசைகளை நீக்கின விடையேறும் பெருமானே; சுத்த வித்தை முதலாகச் சிவம் ஈறாக வுள்ள சுத்த தத்துவமாகிய எல்லைகளைக் கடந்த ஒழுக்கத்தை உடையவனே; ஞான நெறிக்குரியவனே; இன்பம் தரும் கூத்தியற்றி உயிர் வகைகட்கெல்லாம் உய்தி நல்கும் அருட் கொடையை உடையவனே; அருட் செல்வத்தை வரையாது வழங்கும் கொடையை யுடையவனே; என்னை ஆட்கொண்டு, என்னுள்ளத்தில் எழுந்தருளி என்னை உடையவனாகிய வனே; எல்லாம் உடையவனே; மெய்யுணர்ந்தோர்க் குரியவனே; பெருமையையுடைய சிவபோக வாழ்வை எனக் கருளுக. எ.று.

     விடைய வாதனை - கண் காது மூக்கு முதலிய பொறிகளின் வாயிலாக எழும் ஆசைகளால் வரும் துன்பம். விடையவன் - எருதினை ஊர்த்தியாகவும் கொடியாகவும் உடையவன். சுத்த மாயையின் மத்தகத்திலுள்ள சுத்த வித்தை, ஈசுரம், சதாசிவம், சத்தி, சிவம் என்று மேன் மேலாக வுள்ள தத்துவ வகைகளை, “சுத்த வித்தை முன் சிவவரை” என்றும், மேலுள்ள சிவ தத்துவத்திற்கும் அப்பால் பரநாத எல்லைக்குள் இயங்குவது பற்றி, “சிவ வரை கடந்த நடையவா” என்றும் கூறுகின்றார். நடை - ஒழுக்கம் ஞான மூர்த்தியாதலால் சிவனை “ஞான நடையவா” என நவில்கின்றார். உயிர்கட்கு இன்பம் நல்குதல் பொருட்டு அம்பலத்தில் ஆடல் புரிகின்றாராதலால், “இன்ப நடம் புரிந்து உயிர்க்கெலாம் உதவும் கொடையவா” எனக் கூறுகின்றார். ஓவாக் கொடை - இடையறாது வழங்கும் வள்ளன்மை. உயிர்களை ஆட்கொண்டு அவற்றின் உள்ளத்தில் எழுந்தருளித் தனக்கே உரிமையாகக் கொள்வது பற்றி, “என் உள்ளமர்ந்தருளிய என் உடையவா” என்று இசைக்கின்றார். உயிரையே யன்றி உடல் பொருள்களையும் தனக்கு உடைமையாகக் கொள்வதால், “எல்லாம் உடையவா” என ஓதுகின்றார். உணர்ந்தோர் உணர்வின்கண் உண்மை ஒளி தந்து ஓங்குவித்தலின், “உணர்ந்தோர்க்கு உரியவா” என உரைக்கின்றார். பெரிய வாழ்வு - பெருமையையுடைய வாழ்வு. அஃதாவது சிவபோகம் துய்த்துறையும் வாழ்வு.

     (3)