3733.

     வலத்தவா நாத வலத்தவா சோதி
          மலையவா மனமுதல் கடந்த
     புலத்தவா எனது புலத்தவா தவிர்த்துப்
          பூரண ஞானநோக் களித்த
     நலத்தவா வரையா நலத்தவா மறைகள்
          நாடியும் காண்பதற் கரிதாம்
     பலத்தவா திருஅம் பலத்தவா எல்லாம்
          படைத்தவா படைத்தவாழ் வருளே.

உரை:

     வெற்றியை யுடையவனே; நாத தத்துவத்தை உடையவனே; திருவருட் சோதியாகிய மலையை யுடையவனே; மனம் முதலிய கரணங்களைக் கடந்த இடத்தை யுடையவனே; எனது அறிவின் கண் உள்ளவனே; அறியாமையைப் போக்கி நிறைந்த ஞான நாட்டம்தந்த நலத்தை யுடையவனே; வேண்டா வென விலக்குதற் கில்லாத நலங்களை யுடையவனே; வேதங்கள் பலகால் முயன்றும் காண்பதற்கரிதாகிய பயனை யுடையவனே; திருவம்பலத்தில் உள்ளவனே; எல்லாப் பொருள்களையும் படைத்தவனே; நலமனைத்தும் நிறைந்த வாழ்வினை எனக்கு அருளுக. எ.று.

     வலம் - வெற்றி. இடப்பாகம் அம்பிகைக் குரியதாகலின் தன் மேனியின் வலப்பாகத்தைத் தனக்கே உடையவனே எனினும் பொருந்தும். நாத வலம் - நாத தத்துவமாகிய சிறந்த இடம். சோதிமலை - அருட் சோதியாகிய மலை. அருட் சோதி மலை போன்றவனே என்றற்கு, “அருட் சோதி மலையவா” என்கின்றார். சோதி மலையைத் திருவண்ணாமலை எனக் கொண்டு திருவண்ணாமலையை உடையவனே எனக் கொள்ளினும் பொருந்தும். மனம் முதலிய கருவி கரணங்களுக்கு அப்பாலுள்ளவனாதலின், “மன முதல் கடந்த புலத்தவா” எனப் போற்றுகின்றார். குறையில்லாமல் போக்கி நிறைந்த ஞான நாட்டம் தருதல் பற்றி, “தவிர்த்துப் பூரண ஞான நோக்களித்த நலத்தவாம என மொழிகின்றார். பூரண ஞான நோக்கத்தைக் கூறுதலின் தவிர்த்து என்றற்கு, குறைகள் என்ற செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. வேண்டா என விலக்குதற் கில்லாத ஞான நலத்தை ‘வரையா நலம்’ என வழங்குகின்றார். வேதம், மிருதி, புராணம் முதலியவற்றின் ஞானம் பாச (நூல்) ஞானமாதலின் அவற்றால் காண முடியாத தன்மை விளங்க, “மறைகள் நாடியும் காண்பதற் கரிதாம் பலத்தவா” எனக் கூறுகின்றார். பலம் - பயன். உயிர் ஒழிந்த உலகனைத்தும் படைத்த கடவுளாதலின் “எல்லாம் படைத்தவா” என மொழிகின்றார். படைத்த வாழ்வு - நலமனைத்தும் நிறைந்த வாழ்வு. அஃதாவது சிவபோக வாழ்வு.

     (4)