3734.

     உணர்ந்தவர் உளத்தை உகந்தவா இயற்கை
          உண்மையே உருவதாய் இன்பம்
     புணர்ந்திட எனைத்தான் புணர்ந்தவா ஞானப்
          பொதுவிலே பொதுநடம் புரிந்தெண்
     குணந்திகழ்ந் தோங்கும் குணத்தவா குணமும்
          குறிகளும் கோலமும் குலமும்
     தணந்தசன் மார்க்கத் தனிநிலை நிறுத்தும்
          தக்கவா மிக்கவாழ் வருளே.

உரை:

     மெய்யுணர்ந்தவர் திருவுள்ளத்தை விரும்புவனே; கற்பனை கலவாத இயற்கை உண்மையே உருவாய் விளங்கும் தூய இன்பத்தைப் பெறும் பொருட்டு என் உணர்வில் கலந்தவனே; ஞான சபையின்கண் பொதுவாகிய நடம் புரிந்து எண் குணங்களும் நிறைந்து ஓங்குகின்ற உயர் குணத்தை உடையவனே; குணமும், குறியும், கோலமும், குலமும் நீங்கிச் சன்மார்க்கத் தனிநிலையில் உயிர்களை நிறுத்தும் தகுதியுடையவனே; ஞான நலம் மிகுந்த வாழ்வை எனக்கருளுக. எ.று.

     உணர்ந்தவர் - மெய்யுணர்ந்தோர். மெய்யுணர்தல் -அவரது மெய்ம்மை யுள்ளம் தூய்நலம் உடையதாகலின் அங்கு எழுந்தருளும் இயல்பு பற்றிச் சிவபெருமானை, “உணர்ந்தவர் உளத்தை உகந்தவா” எனக் கூறுகின்றார். உகத்தல் - விரும்புதல். இயற்கை உண்மை - கற்பனை கலவாத தூய உண்மையே இறைவனுக்கு வடிவமாதலின், “இயற்கை உண்மையே உருவதாய்” என்றும், உண்மை வடிவில் உள்ளத்தில் நின்று உயிர்கள் இன்பம் எய்துதல் பொருட்டு எழுந்தருளுகின்றானாதலின், “இன்பம் புணர்ந்திட எனைத்தான் புணர்ந்தவா” என்றும் விளம்புகின்றார். ஞானப் பொது - ஞான சபை. படைத்தல் முதலிய ஐந்தொழிலும் உலகில் ஒருங்கு நிலவ ஆடும் திருக்கூத்து ‘பொது நடம்’ எனப் புகலப்படுகின்றது. இதைத் ‘தனி நடம்’ என்றும், ‘தனித் திருக்கூத்’ தென்றும், ‘தனிக் பெருங்கூத்’ தென்றும் சான்றோர் பாராட்டியுரைப்பர். எண் குணங்களாவன; தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை யுணர்வினனாதல், முற்று முணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பில் இன்ப முடைமை. எண் குணங்களும் திரண்ட பூரண குணத்தை, “ஓங்கும் குணம்” என உரைக்கின்றார். குறி - பெயர். குணம் என்பது ஈண்டுச் சத்துவம் முதலிய மூன்றன் தொகுதியாகிய குண தத்துவம். கோலம் - தோற்றம். உலகியல் வாழ்வில் மக்கள்பால் காணப்படும் குணம், குறி, கோலம், குலம் முதலியவற்றை நோக்காது ஆன்மவியல் ஒன்றையே நோக்குவது சன்மார்க்கமாதலால், “குணமும் குறிகளும் கோலமும் குலமும் தணந்த சன்மார்க்கத் தனிநிலை” என உரைக்கின்றார். தணத்தல் - நீக்குதல்; நீங்குதலுமாம். குணம் குறி முதலியன மக்கள் உடம்புப் பொருளாகத் தோன்றி மாறும் இயல்புடையனவாதலால், சத்தாகிய உண்மை நெறிக்கு ஆகாமை பற்றி, குணம் முதலிய “தணந்த சன்மார்க்கத் தனிநிலை” எனச் சிறப்பிக்கின்றார். மக்களின் உடம்புருவை நோக்காமல், உயிரியல்பு ஒன்றே நோக்குவது சன்மார்க்கம் என உணர்க. “ஆன்ம நேயம் புரிதல்” என்றும் கூறுப. உடம்பு உயிர்களை வேறு பிரித்து, உடம்பை விலக்கி உயிரின்பால் நேயம் கொள்விக்கும் தகுதி இறைவனிடத்து உண்மை நோக்கி, “சன்மார்க்கத் தனிநிலை நிறுத்தும் தக்கவா” என உரைக்கின்றார். மிக்க வாழ்வு - நலங்களால் நிறைந் துயர்ந்த வாழ்வு.

     (5)