3735. தத்துவங் கடந்த தத்துவா ஞான
சமரச சுத்தசன் மார்க்கச்
சத்துவ நெறியில் நடத்திஎன் தனைமேல்
தனிநிலை நிறுத்திய தலைவா
சித்துவந் தாடும் சித்திமா புரத்தில்
திகழ்ந்தவா திகழ்ந்தென துளத்தே
ஒத்துநின் றோங்கும் உடையவா கருணை
உளத்தவா வளத்தவாழ் வருளே.
உரை: தத்துவத் தொகுதிகள் அனைத்தையும் கடந்த தத்துவனே; சமரச சுத்த சன்மார்க்கமாகிய சத்துவ ஞான நெறியில் என்னைச் செலுத்தி, மேலாகிய ஒப்பற்ற நிலையில்கண் என்னை நிறுத்திய தலைவனே; அட்டமா சித்திகளையும் மேற்கொண் டுறையும் சித்தி புரமென்னும் வடலூரில் விளங்குபவனே எனது உள்ளத்தில் ஒத்து நின்று ஞான ஒளி செய்து உயர்ந்த உடையவனே; அருள் நிறைந்த உள்ளத்தை உடையவனே; வளம் நிறைந்த வாழ்வை எனக் கருளுக. எ.று.
தத்துவம் கடந்த தத்துவா, ஆன்ம தத்துவம், வித்தியா தத்துவம், சிவ தத்துவம் என மூவகைப்பட்டு முப்பத்தாறாக விரியும் தத்துவங்கள். தத்துவங்கட்கு உட்பட்டவை உயிர்களாதலின் அவற்றின் வேறாய சிவபரம்பொருளை, “தத்துவம் கடந்த தத்துவன்” எனக் கூறுகின்றார். தத்துவன் - மெய்ம்மையானவன். தன்னின் வேறாய பொருள்களில் அதுவதுவாய்க் கலந்தும் வேறாயும் இருப்பது பற்றி இறைவனைத் “தத்துவன்” என்கின்றார் எனினும் அமையும். சுத்த சன்மாரக்கமாவது குணமும் குறியும் குலமும் நோக்கமால் சத்தாகிய ஆன்மாவின்கண் அன்பு செய்தொழுகுதல். ஆன்மா நின்ற உடம்பு பொருளாக வேற்றுமைகளை நோக்காமல், ஆன்ம ஒருமையையே நோக்கும் தன்மை புலப்பட, “சமரச சுத்த சன்மார்க்கம்” என உரைக்கின்றார். அதனினும் தெளிவான நெறி வேறின்மை புலப்படுத்தற்கு, “சன்மார்க்கச் சத்துவ நெறி” எனப் புகழ்கின்றார். சத்துவம் - தெளிவு. அந் நெறியிற் ஒழுகச் செய்தமை தோன்ற “நடத்தி” என்றும், அதனால் விளைவது ஞான நிலையாகிய மேனிலை என்றற்கு, “என்றனை மேல் தனிநிலை நிறுத்திய தலைவா” என மொழிகின்றார். தெளிந்த ஞான முடையார்க்கன்றிச் சுத்த சன்மார்க்க நிலைக்குரிய உள்ளமும் உணர்வும் உண்டாகாவாதலின், “ஞான சமரச சுத்த சன்மார்க்கச் சத்துவநெறி” என விளக்குகின்றார். சித்து - அணிமா மகிமா முதலிய எண் வகைச் சித்திகள். சித்தி சித்து எனவும் வழங்கும். செயற்கரிய செயல்களைச் சித்து என்பதும் உண்டு. சித்தி புரம் என்பது சித்திமா புரம் என வந்தது. இது வடலூர்க்கு வழங்கும் ஒரு பெயர். இங்கே எழுந்தருளுதல் பற்றிச் சிவனை, “சித்திமா புரத்தில் திகழ்ந்தவா” எனச் செப்புகின்றார். சித்தி புரத்தை உத்தர ஞான சிதம்பரம் என உரைப்பாருமுண்டு. சித்தி புரத்தை உத்தர ஞான சிதம்பரம் என உரைப்பாருமுண்டு. சித்தி புரத்தில் போல உள்ளத்தின் கண்ணும் எழுந்தருளுவது பற்றி, “எனது உளத்தே ஒத்து நின்றோங்கும் உடையவா” என ஓதுகின்றார். எல்லா உயிர்களையும் தனக்கு அடிமையாகவும், எல்லா உலகுப் பொருள்களையும் தனக்கு உடைமையாகவும் உடையவனாதலால் இறைவனை, “உடையவா” எனப் புகல்கின்றார். அருளுருவானவன் என்பது பற்றி, “கருணை உளத்தவா” என உரைக்கின்றார். வளத்த வாழ்வு - பல்வகை ஞான வளமுடைய வாழ்வு. (6)
|