3736.

     மதம்புகல் முடிபு கடந்தமெய்ஞ் ஞான
          மன்றிலே வயங்கொள்நா டகஞ்செய்
     பதம்புகல் அடியேற் கருட்பெருஞ் சோதிப்
          பரிசுதந் திடுதும்என் றுளத்தே
     நிதம்புகல் கருணை நெறியவா இன்ப
          நிலையவா நித்தநிற் குணமாம்
     சிதம்புகல் வேத சிரத்தவா இனித்த
          தேனவா ஞானவாழ் வருளே.

உரை:

     பல்வேறு மதங்கள் சொல்லுகின்ற முடிபுகளைக் கடந்த மெய்ஞ்ஞானமாகிய சபையிலே, விளங்குகின்ற நடனத்தைப் புரிகின்ற திருவடியையே விரும்பும் அடியேனுக்கு அருட் பெருஞ் சோதியாகிய சிவஞானத்தைப் பரிசாகத் தருவோம் என்று நாளும் என் உள்ளத்தே உரைத்தருளும் கருணை நெறியை உடையவனே; சிவபோகமாகிய இன்ப நிலையத்தில் இருபவனே; நிலைபெற்ற நிர்க்குணமாகிய ஞானத்தை எடுத்துரைக்கின்ற வேதங்களின் முடிவில் இருப்பவனே; இனித்த தேன் போன்றவனே; எனக்கு ஞான வாழ்வு தந்தருள்க. எ.று.

     மதங்கள் - பல்வேறு சமயங்கள். ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு முடிபை உரைக்குமாயினும், பரம்பொருள் எல்லாவற்றையும் கடந்து ஞான மயமாய் விளங்குவதாகலின், சிவபிரான் திருக்கூத்தியற்றும் ஞான சபையை, “மதம் புகல் முடிபு கடந்த மெய்ஞ்ஞான மன்று” என விளம்புகின்றார். வயங்கொள் நாடகம் - ஒளி விளங்கும் ஞானத்திருக்கூத்து. பதம் - திருவடி, திருவடியை விரும்பி நினைந்து பரவுதலால் தன்னை, “பதம் புகல் அடியேன்” எனக் குறிக்கின்றார். ஒளி மயமாகிய திருவருள் ஞானத்தை, “அருட் பெருஞ் சோதி” என்று குறிக்கின்றார். அருளே யுருவாய் பெரிய ஒளி மயமாக இருத்தல் பற்றிச் சிவனை, “அருட் பெருஞ் சோதி” என ஓதுகின்றார் எனினும் அமையும். அருட் பெருஞ் சோதியைக் காணும் தகுதியைத் தருகின்றோம் என உள்ளத்தே உணர்வு வடிவா யிருந்து உணர்த்துகின்ற திறம் புலப்பட, “அருட் பெருஞ் சோதிப் பரிசு தந்திடுதும்” என்றும், அதற்கு ஏதுவா யிருப்பது இறைவனது திருவருட் பண்பாதலால், “உளத்தே நிதம் புகல் கருணை நெறியவா” என்றும் இயம்புகின்றார். நெறியவன் - நெறியை யுடையவன். நித்தம் -அழியாது என்றும் இருப்பது. நிர்க்குணமாம் சிதம், குணாதீதமாகிய ஞான நிலையில் சிவம் விளங்குதல் பற்றி, “நிர்க்குணமாம் சிதம்” எனத் தெரிவிக்கின்றார். “நிர்குணமாய் நிர்மலமாய் நித்தியானந்தமாய் தற்பரமாய் நின்ற தனிமுதல்வன்” எனச் சிவஞான போதம் உரைப்பது காண்க. வேத முடிபொருளாய் விளங்குபவன் என்றற்கு, “வேத சிரத்தவா” என்று கூறுகின்றார். நிர்க்குணமாய் ஞானமாய் விளங்குவது பரம்பொருள் என வேதம் உரைத்தலின், “நிற்குணமாம் சிதம் புகல் வேத சிரத்தவா” என உரைக்கின்றார். இனித்த தேன் என்பது சாதியடை. வற்றாத இன்ப நிலையைத் தருவது பற்றி, “ஞான வாழ்வு அருளுக” என வேண்டுகின்றார்.

     (7)