3737.

     மூவிரு முடிபும் கடந்ததோர் இயற்கை
          முடிபிலே முடிந்தென துடம்பும்
     ஆவியும் தனது மயம்பெறக் கிடைத்த
          அருட்பெருஞ் சோதிஅம் பலவா
     ஓவுரு முதலா உரைக்கும்மெய் உருவும்
          உணர்ச்சியும் ஒளிபெறு செயலும்
     மேவிநின் றவர்க்குள் மேவிய உணர்வுள்
          மேயவா தூயவாழ் வருளே.

உரை:

     அறுவகைச் சமயங்களின் முடிவுகட்கும் அப்பாற்பட்ட தூய இயற்கை முடிபிலே முடிபாய் நின்று எனது உடம்பும் உயிரும் தன்னுடைய அருள் மயமாகுமாறு எனக்குக் கிடைத்த அருட் பெருஞ் சோதியாகிய அம்பலத்தை உடையவனே; ஓங்கார வடிவம் முதலாக உரைக்கப்படும் மெய்ம்மை யுருவும், உணர்வும், ஒளி திகழும் செய்கையும் பொருந்தி நின்ற மெய்ஞ்ஞானிகளது உள்ளத்தில் நிலவும் உணர்வை இடமாகக் கொண்டவனே; ஞான மயமான தூய வாழ்வை எனக்கு அருளுக. எ.று.

     சமயங்கள் ஆறாதலால் அவற்றின் முடிபுகளும் ஆறாதல் பற்றி, “மூவிரு முடிபும்” என மொழிகின்றார். சமயாதீதப் பரம்பொருளாதல் பற்றி அதன் நிலைமையை, “மூவிரு முடிபும் கடந்ததோர் இயற்கை முடிபு” என உரைக்கின்றார். சமய ஞானிகளால் தத்தமக் கேற்ற கொள்கை வழிக் கற்பிக்கப்படும் கற்பனைக்கு இடமாகாத, தனி முடிபு என்றற்கு, “இயற்கை முடிபு” என்றும், அதற்கு அப்பால் முடிபு யாதும் இல்லையாதலால், “இயற்கை முடிபிலே முடிந்து” என்றும் மொழிகின்றார். அருட் பெருஞ் சோதி ஞானத்தால் அருள் ஞானிகளின் உடம்பும் உயிரும் திருவருள் ஒளி மயமாம் என்பது பற்றி, “எனது உடம்பும் ஆவியும் உயிரும் திருவருள் ஒளி மயமாம் என்பது பற்றி, “எனது உடம்பும் ஆவியும் தனது மயம் பெறக் கிடைத்த அருட் பெருஞ் சோதி” என உரைக்கின்றார். அருள் மயமான பெருஞ் சோதி அம்பலத்தின்கண் காட்சி தருதலால், “அருட் பெருஞ் சோதி அம்பலவா” எனப் போற்றுகின்றார். ஓவுரு - ஓங்கார வடிவம். எந்திரங்களின் வழியாகப் பல எழுத்துக்களைக் கற்பித்து, அவற்றைச் சிவ வடிவங்கள் எனக் கொண்டு வழிபடும் தாந்திரிகளின் கொள்கையும் அடங்க, “ஓவுரு முதலா உரைக்கும் மெய்யுரு” என ஓதுகின்றார். தந்திர ஞானிகளின் இயல்பை, “மெய்யுருவும் உணர்ச்சியும் ஒளி பெறு செயலும் மேவி நின்றவர்” என்று விளம்புகின்றார். தந்திர வழி இயங்கும் ஞான முயற்சிகளைத் திருமூலர் அருளிய திருமந்திரத்துள் காணலாம். அவருடைய ஞானம் நிறைந்த உள்ளத்திலும் இறைவன் எழுந்தருளுகின்றமை புலப்பட, “மேவி நின்றவர்க்குள் மேவிய உணர்வுள்மேயவா” எனத் தெரிவிக்கின்றார். ஞான இன்ப வாழ்வைத் “தூய வாழ்வு” என்று குறிக்கின்றார்.

     (8)