3738. பங்கமோர் அணுவும் பற்றிடா அறிவால்
பற்றிய பெற்றியார் உளத்தே
தங்கும்ஓர் சோதித் தனிப்பெருங் கருணைத்
தரந்திகழ் சத்தியத் தலைவா
துங்கம்உற் றழியா நிலைதரும் இயற்கைத்
தொன்மையாம் சுத்தசன் மார்க்கச்
சங்கநின் றேத்தும் சத்திய ஞான
சபையவா அபயவாழ் வருளே.
உரை: குற்றம் ஓர் அணுவளவும் இல்லாத அறிவினால் மெய்யுணர்வு பெற்ற தன்மையராகிய பெரியோர் உள்ளத்தில், எழுந்தருளுகின்ற ஒப்பற்ற சோதி யுருவாகிய தனிப் பெருங் கருணை உடைமையால் திகழ்கின்ற உண்மை நெறித் தலைவனே; உயர்வு பெற்று என்றும் அழியாத நிலைமையினை நல்கும் இயற்கைப் பழமையுடையதாகிய சுத்த சன்மார்க்கச் சங்கத்தார் நாளும் நின்று பரவும் சத்திய ஞான சபையினை உடையவனே; எனக்கு அச்சமில்லாத வாழ்வைத் தந்தருள்க. எ.று.
பங்கம் - குற்றம். முக்குண வயத்தால் நல்லதன் நலனும், தீயதன் தீமையும் உள்ளவாறு உணரும் அறிவு குற்றப்படுவதாதலால், “பங்க மோர் அணுவும் பற்றிடா அறிவு” எனச் சிறப்பிக்கின்றார். தூய அறிவால் மெய்யுணர்வு பெறும் தன்மை பெருங் குணமுடைய பெரியோரிடத்தே அமைதலால், “அறிவால் பற்றிய பெற்றியார்” எனப் புகழ்ந்து, அப்பெருமக்கள் திருவுள்ளத்தே தோன்றுவது பற்றி, “பெற்றியார் உளத்தே தங்கும் ஓர் சோதித் தனிப் பெருங் கருணைத் தரம்” எனச் சிறப்பிக்கின்றார். சோதி வடிவினனாயினும் ஒப்பற்ற பெருங் கருணை நிறைந்தவனாதலால் சிவனை, “ஓர் சோதித் தனிப் பெருங் கருணைத் தரம் திகழ் சத்தியத் தலைவா” என்று பாராட்டுகின்றார். துங்கம் - உயர்வு. தன்னியல்பில் உயர்வும், அழியா நிலைமையும், இயற்கையாம் தொன்மைப் பண்பும் உடையதாதல் விளங்க, சன்மார்க்கச் சங்கத்தை, “துங்கம் உற்றழியா நிலை தரும் இயற்கைத் தொன்மையாம் சுத்த சன்மார்க்கச் சங்கம்” என்று புகழ்கின்றார். சுத்த சன்மார்க்கச் சங்கம் என்பது ஈண்டுச் சுத்த சன்மார்க்கச் சங்கத்தைச் சேர்ந்த அன்பர்களைக் குறித்து நின்றது. அவர்கள் கூடி நின்று பரவுமிடம் சத்திய ஞான சபை என்று விளக்குதற்கு, “சங்கம் நின்றேத்தும் சத்திய ஞான சபையவா” என்று கூறுகின்றார். உலகியலில் உண்டாகும் காம வெகுளி மயக்கம் என்ற மூவகைக் குற்றங்களாலும், கணந்தோறும் மாறும் இயல்புடைய முக்குண மயக்கத்தாலும், காம குரோதம் முதலாகிய அறுவகைக் குற்றங்களாலும் வாழ்வாங்கு வாழ்வார்க்கு அச்சம் மிகுதலால், “அபய வாழ்வு அருள்க” என வேண்டுகின்றார். (9)
|