27. திருவருள் விழைதல்
அஃதாவது, திருவருள் ஞானம் பெற விழைந்து இறைவன்பால் முறையிடுதல், இப்பகுதியில் உள்ள பாட்டுக்கள் இருபதும் அந்தாதித் தொடையில் அமைந்துள்ளமையால் பாராயணத்திற் குரியவாம் என அமைக.
எழுச்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 3740. செய்வகை அறியேன் மன்றுள்மா மணிநின்
திருவுளக் குறிப்பையும் தெரியேன்
உய்வகை அறியேன் உணர்விலேன் அந்தோ
உறுகண்மேல் உறுங்கொல்என் றுலைந்தேன்
மெய்வகை அடையேன் வேறெவர்க் குரைப்பேன்
வினையனேன் என்செய விரைகேன்
பொய்வகை உடையேன் எங்ஙனம் புகுவேன்
புலையனேன் புகல்அறி யேனே.
உரை: திருவருள் பேற்றிற் குரிய செயல் வகைகளையும் அம்பலத்தில் ஆடுகின்ற பெரிய மாணிக்க மணியாகிய உன்னுடைய திருவுளக் குறிப்பையும் அறிய மாட்டேன்: மெய்யுணர் வில்லாதவனாதலால் உய்தி பெறும் திறத்தையும் அறியேன்; துன்பங்கள் மேன் மேலும் வந்து வருத்துமோ வென்று வருந்துகிறேன்; மெய்யுணர்வு பெறும் வகையையும் காண்கிலேன்; என் குறையை வேறு எவர்க்கும் எடுத்துச் சொல்லுவேன்; வினைப் பிடிப்பை உடையவனாதலால் யாது செய்ய வல்லேன்; பொய் நெறிகளை யுடையவனாதலால் எங்ஙனம் நினது திருவருள் நெறியில் புகுவேன்; புலைத் தன்மையுடைய யான் திருவருள் சூழலில் புகும் திறம் அறியாதவனாக வுள்ளேன். எ.று.
திருவருள் ஞானத்தைப் பெறுவதற்குரிய வழி வகையை அறிந்தால் இறைவன் திருவுள்ளத்தையும் அறிதல் கூடுமாதலால், “செய்வகை அறியேன் மன்றுள் மாமணி நின் திருவுளக் குறிப்பையும் தெரியேன்” எனக் குறிக்கின்றார். செய்வகை என்பதில், செய் என்பது செயல் என்ற பொருள் மேல் நின்ற முதனிலைத் தொழிற் பெயர். மாமணி - பெரிய மாணிக்க மணி. சிவன் திருமேனிக்கு மாணிக்க மணியின் நிறத்தை உவமை கூறும் மரபு பற்றி, “மாமணி” எனக் கூறுகின்றார். உலகியல் வாழ்வு நல்கும் மயக்கத்தால் மெய்யுணர்வு தம்பால் இல்லாமை புலப்பட, “உணர்விலேன்” என்றும், உணர்வில்லாமையால் உலகியல் மயக்கத்தினின்றும் உய்தி பெறும் திறம் அறியாமை தோன்ற, “உய்வகை அறியேன்” என்றும் இயம்புகின்றார். உறுகண் - துன்பம். தெள்ளிய உணர்வும் செயலறியும் விளங்காமையால் நாளும் துன்பங்கள் அடுக்கி வந்து தாக்குவது பற்றி, “உறுகண் மேல் உறுங்கொல் என்று உலைந்தேன்” என்று கூறுகின்றார். உலைதல் - வருந்துதல். மெய்யுணர்வு பெறுதற்குரிய வழி வகைகள் ஞான நூல்கள் பலவும் கூறுதலின், ஒன்றனைத் துணிந்து கோடற்கு நெஞ்சில் உரமின்மை புலப்பட, “மெய்வகை அடையேன்” என்றும், அதனை உணர்த்துதற்குரியவன் சிவபெருமானாதலின்,”வேறெவர்க் குரைப்பேன்” என்றும் விளம்புகின்றார். தாமே தெளிய மாட்டாமைக்குக் காரணம் கூறுவார், “வினையனேன்” என்றும், வினை விளைவிக்கும் அறியாமையால் யாதும் செய்தற் கியலாமை தோன்ற, “என் செய விரைகேன்” என்றும் உரைக்கின்றார். தம்பால் பொய் ஒழுக்க முடைமையால் மெய்ந்நெறி அறிந்து மேற் கொள்ளமாட்டாமை பற்றி, “பொய்வகை உடையேன் எங்ஙனம் புகுவேன்”என்றும், புலைத் தன்மை யுடைமை பற்றி வேறு புகலிடம் அறியேன் என்பாராய், “புலையனேன் புகல் அறியேனே” என்றும் புகல்கின்றார்.
இதனால், இறைவன் திருவுளக் குறிப்பை அறியும் அறிவும், உய்வகை அறியும் உணர்வும் இல்லாமை பற்றி, மெய்ந்நெறி யடைதலும், புகலறிந்து புகுதலும் இல்லாமை கூறித் திருவருள் ஞானத்தைப் பெறும், திறம் காணாமல் வருந்தியவாறாம். (1)
|