3741.

     அறிவிலேன் அறிந்தார்க் கடிப்பணி புரியேன்
          அச்சமும் அவலமும் உடையேன்
     செறிவிலேன் பொதுவாம் தெய்வம்நீ நினது
          திருவுளத் தெனைநினை யாயேல்
     எறிவிலேன் சிறியேன் எங்ஙனம் புகுவேன்
          என்செய்வேன் யார்துணை என்பேன்
     பிறிவிலேன் பிரிந்தால் உயிர்தரிக் கலன்என்
          பிழைபொறுத் தருள்வதுன் கடனே.

உரை:

     திருவருள் ஞானம் பெறும் அறிவில்லாதவானாகிய யான், அறிந்த பெருமக்களுக்கு அடிப்பணி புரிவது இல்லை; அச்சமும் அவலமுமேயுடையவனாய் அடக்கமாகிய பண்பின்றி உள்ளேன்; எல்லார்க்கும் பொதுவாய் நிற்கும் தெய்வமாகிய நீ நின்னுடைய திருவுள்ளத்தில் என்னையும் ஒருவனாக நினையாயாயின் என் அறியாமையைப் போக்கும் திறமில்லாதவனாவேன்; இவ்வாற்றல் சிறுமை உடையனாகிய யான் நினது திருவருட் சூழலில் எவ்வாறு புகுவேன்? அது குறித்து யாது செய்வேன்; யாரைத் துணையாகக் கொள்வேன்; நின் திருவருட்கு அயலாகப் பிரிந்து செல்லேன்; ஒருகால் பிரிய நேர்ந்தால் உயிர் தாங்கமாட்டேன்; என் பிழைகளைப் பொறுத்தருள்வது உனக்குக் கடனாகும். எ.று.

     திருவருள் ஞானம் பெறுதற் குரிய நல்லறி வில்லாமை தோன்ற “அறிவிலேன்” என்றும், அதனை அறிந்த பெருமக்களுக்கு அடித்தொண்டு புரிந்தால் அவ்வறிவு எய்தலாமாயினும் அதனை நான் செய்வதில்லை என்பார், “அறிந்தார்க் கடிப்பணி புரியேன்” என்றும் அறிவிக்கின்றார். அறிவும், அடித்தொண்டு புரியும் பண்பும் தம்பால் இல்லாமைக்குத் தடையாய் உள்ள குறைகள் இவைகள் என எடுத்துரைப்பராய், “அச்சமும் அவலும் உடையேன் செறிவிலேன்” எனச் செப்புகின்றார். செறிவு - அடக்கமாகிய நற்பண்பு. சபையின்கண் பலவாயினும் எல்லாவற்றிற்கும் பொதுவாய் இருப்பது பரம்பொருள் ஒன்று என்பது பற்றி, “பொதுவாம் தெய்வம் நீ” என்றும், நின்னுடைய திருவருள் எனக்கு இல்லையாயின் அச்சம் அவலம் முதலிய தடைகளைப் போக்கித் தெளிவுறும் திறமில்லாதவனாவேன் என்றற்கு, “நினது திருவுளத் தெனை நினையாயேல் எறிவிலேன்” என்றும் புகல்கின்றார். எறிவு - குற்றங்களைப் போக்குதற்குரிய மனத் திண்மை. அச்சம், அவலம், செறிவின்மை, எறிவின்மை உடைமையால் சிறுமைப் பட்டுள்ளேன் என்பாராய், “சிறியேன்” எனவும், இதனால் நினது திருவருள் ஞானச் சூழலில் யான் எவ்வாறு புகுவேன்; புகுதற் பொருட்டு யான் யாது செய்வேன்; யாரைத் துணை யென்று கொள்வேன் யார் துணை என்பேன்” எனவும் இயம்புகின்றார். இத்தகைய குறைபாடுகள் உடையவனாயினும், திருவருள் நினைவினின்றும் பிரிந் தொழிவதில்லேன் என்பாராய், “பிறிவிலேன்”என்றும், பிரிந்தால் உயிர் தாங்காமல் இறந்தொழியும் என்றற்கு, “பிரிந்தால் உயிர் தரிக்கலன்” என்றும், பிரியாமைக்குரிய நன்முயற்சியில் நில்லாமல் உயிர் விடுவது பிழையாயினும் அதனையும் பொறுத்தருள்வது உனக்குக் கடனாம் என முறையிடுவாராய், “என் பிழை பொறுத்து அருள்வது உன் கடன்” என்றும் உரைகின்றார்.

     இதனால், திருவருள் நினைவினின்றும் பிரிதல் நேர்ந்தால் உயிர் தாங்கமாட்டேன் எனத் தெரிவித்தவாறாம்.

     (2)