3742. உன்கடன் அடியேற் கருளல்என் றுணர்ந்தேன்
உடல்பொருள் ஆவியும் உனக்கே
பின்கடன் இன்றிக் கொடுத்தனன் கொடுத்த
பின்னும்நான் தளருதல் அழகோ
என்கடன் புரிவேன் யார்க்கெடுத் துரைப்பேன்
என்செய்வேன் யார்துணை என்பேன்
முன்கடன் பட்டார் போல்மனம் கலங்கி
முறிதல்ஓர் கணம்தரி யேனே.
உரை: அடியவனாகிய எனக்கு அருள் செய்தல் உனக்குக் கடன் என்று அறிந்தோர் அறிவுரையால் உணர்ந்து கொண்டேன்; அதனால் என் உடல், பொருள், உயிர் ஆகிய மூன்றையும் உனக்கே கடனின்றிக் கொடுத்துள்ளேன்; கொடுத்த பின்னும் அருள் ஞானப் பேறின்றிச் சோர்வடைதல் அழகாகாது; அது குறித்து என் கடமைகள் அனைத்தையும் செய்கின்றேன்; ஆயினும் ஞானப் பேறெய்தாத குறையை யாருக்கு எடுத்துச் சொல்வேன்; யாரைத் துணையாகக் கொள்வேன்; அது குறித்து யான் யாது செய்வேன்; முன்னே கடன் பட்டவர் போல மனம் வருந்தித் தளர்ந்து கெடுவதை நான் பொறுக்க மாட்டேன். எ.று.
“தன் கடன் அடியேனையும் தாங்குதல்” என்றும், “தன்னை அடைந்தார் வினை தீர்ப்பதன்றோ தலையாயவர்தம் கடனாவது” என்றும் திருநாவுக்கரசர் முதலிய பெருமக்கள் உரைக்கின்றார்களாதலின், “உன் கடன் அடியேற் கருளல் என்று உணர்ந்தேன்” என்றும், அது குறித்து எனது உடலையும் ஈட்டிய பொருளையும் உயிரையும் மீட்டும் பெறாவாறு கடன் இன்றிக் கொடுத்தனன்”என்றும் உரைக்கின்றார். பின் கடனின்றித் கொடுத்தலாவது, பின்னர் பெற்றுக் கொள்வது குறித்து முன்னர் கொடுப்பது. உடல் முதலிய மூன்றும் கொடுத்தும் திருவருள் பெறா தொழிதல் நன்றன்றாதலால், “கொடுத்த பின்னும் நான் தளருதல் அழகோ” என்று உரைக்கின்றார். என்னுடைய கடமைகளை ஒழுங்காகச் செய்கின்றேனாதலால் பிறர்க்கு எடுத்துரைப்பதோ பிறரைத் துணையாக வேண்டுவதோ வேறு செயல் வகைகளை மேற் கொள்வதோ முறையாகாதாகலின், “என் கடன் புரிவேன் யார்க்கு எடுத்துரைப்பேன் என் செய்வேன் யார் துணை என்பேன்” என எடுத்துரைக்கின்றார். முன்னே கடன் பட்டார் பின்னர் அதனைக் கொடுக்க மாட்டாமை எய்திய பொழுது மனம் கலங்கிச் செயலற் றொழிதல் இயல்பாதலின், “முன் கடன்பட்டார் போல் மனம் கலங்கி முறிதல் ஓர் கணம் தரியேன்” என மொழிகின்றார். முறிதல் - செயலறுதல்; கையறவு படுதலுமாம்.
இதனால், உடல் பொருள் ஆவி மூன்றும் தடையின்றிக் கொடுத்தும் அருள் ஞானப் பேறின்றிக் கையறவு படுதல் நன்றாகாதென முறையிட்டவாறாம். (3)
|